Friday, June 6, 2025

வளர்ச்சி இல்லாவிட்டால் தளர்ச்சி



வளர்ச்சி இல்லாவிட்டால் தளர்ச்சி.

ஒரு கிணறு.
கிணற்றில் தண்ணீர்.
இறைப்பதற்கு ஒரு வாளி.
கிணற்றை ஒட்டி ஒரு தொட்டி.
வாளியைக் கொண்டு தண்ணீர் இறைத்து தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.

தொட்டி நிறைந்தவுடன் ஒரு போணியைக் கொண்டு தண்ணீரைக் கோதிக் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்காக வந்த நண்பர் கட்டப்பட்டுத் தண்ணீர் இறைத்து தொட்டிக்குள் ஊற்றினார்.
ஊற்றினார், ஊற்றினார், ஊற்றினார்.


வெகு நேரம் ஊற்றியும் தொட்டி நிரம்பியபாடில்லை.

களைத்துப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு, இறைப்பதற்காகப் போகுமுன் தொட்டியைப் பார்த்தார்.

உள்ளே ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.

தொட்டியை ஆராய்ந்தார்.
தொட்டியைக் கழுவும் போது தண்ணீரை வெளியேற்றுவதற்காக தொட்டியின் அடியில் இருந்த துவாரம் திறந்தேயிருந்தது.

இவர் தண்ணீர் இறைத்து ஊற்ற ஊற்றத் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தால் தொட்டி எப்படி நிறையும்?

இது ஒரு ஒப்புமை.

எதற்கு ஒப்புமை?

நமது ஆன்மீக வாழ்விலும் இதே போல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

ஆன்மாவை ஒரு தொட்டியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தொட்டியைப் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் அது சுத்தமாக இருக்க வேண்டும்.

 நாம் ஆன்மீகத்தில் வளர வேண்டுமானால் முதலில் அது பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பரிசுத்தம் என்றால் பாவம் இல்லாத நிலைமை.

இரு வகைப் பாவங்கள், சாவான பாவம், அற்பப் பாவம்.

சாவான பாவம் உள்ள ஆன்மா ஆன்மீக ரீதியாக இறந்த ஆன்மா.

இறந்த ஆன்மா ஆன்மீகத்தில் இயங்க முடியாது.

முதலில் சாவான பாவத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் ஆன்மாவால் இயங்க முடியும்.

கிணற்றின் அருகே உள்ள தொட்டியை குளிப்பதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டுமானால் முதலில் நல்ல தண்ணீரால் அதைக் கழுவி, அழுக்குத் தண்ணீரை அதற்கென்று போடப்பட்ட துவாரம் வழியாக வெளியேற்றிவிட்டு, துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.

அப்புறம் அதை நல்ல தண்ணீரால் நிரப்ப வேண்டும்.

நமது ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் மனத்தாபம் 
(Contrition), பாவ சங்கீர்த்தனம்
(Confession) ஆகியவை கலந்த அருள் தண்ணீரால் அதைக் கழுவி ஆன்மாவைப் பரிசுத்தமானதாக மாற்ற வேண்டும்.

அதன்பின் ஆன்மாவை ஆண்டவரின் அருள் வரங்களால் நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட அருள் வரங்கள் கசியாதபடி (leak ஆகாதபடி)
கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அற்பப் பாவங்கள், 

ஆன்மீக வாழ்வில் ஆர்வமின்மை,

 செபத்தின் மூலம் இறைவனோடு உரையாடாமல் இருத்தல்,

இறைவன் சித்தம் என்ன என்று தெரிந்தும் அதை நிறைவேற்றாமல் இருத்தல்

போன்ற காரணங்களால் அருள் வரங்கள் கசிந்து அதன் அளவு குறையும்.

இது தொடர்ந்தால் பழையபடி   சாவான பாவத்தில் விழ நேரிடலாம்.

ஆகவே பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் நாம் பெற்ற பரிசுத்தத் தனத்தை இழக்காமல் ஆன்மாவைப் பாது காக்க வேண்டும்.

பரிசுத்தத் தனத்தைப் பாது காக்க அதில் வளரவேண்டும்.

ஆன்மீகம் சார்ந்த செயல் முயற்சிகள் மூலம்,

அதாவது நற்செயல்கள் மூலம்,

அருள் வரங்களை ஈட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.

24 மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் இறைவனோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.

எப்படி நாள் முழுவதும் செபிப்பது?

காலையில் எழுந்ததும் அன்றைய நாளில்,  சுவாசித்தல் உட்பட, நாம் செய்யவிருக்கும் அத்தனை செயல்களையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.

இதனால் நமது ஒவ்வொரு அசைவும் செபமாக மாறிவிடும்.

செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்திருத்தல்.

பாலோடு நீர் ஒன்றிக்கும் போது நீரும் பாலாகி விடுகிறது.

இறைவனோடு ஒன்றித்திருக்கும் போது நாம் இன்னும் பரிசுத்தம் ஆவோம்.

பாவம் நம்மை அணுகாது.

நற் செயல்களால் நமது அயலானோடும், 

(அயலானுக்குச் செய்வதை இறைவனுக்கே செய்கிறோம்.)

செபத்தால் நேரடியாக இறைவனோடும் ஒன்றித்திருந்தால்

நாம் பரிசுத்தத் தனத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

இவை இரண்டையும் செய்யாதிருந்தால் நாம் ஆன்மீகத்தில் பின் நோக்கி நகர்வோம், அதாவது, தளர்வோம்.

ஒரு நிலத்தில் முட்செடிகள் நிறைந்துள்ளன.

அதில் பயிர்த்தொழில் செய்ய முடியாது.

பயிர்த்தொழில் செய்ய விரும்புகிறவர் முதலில் முட்செடிகளை அப்புறப்படுத்தி

நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

பண்படுத்திய பின் பயிரேற்ற வேண்டும்.

பயிரேற்றினால் நாம் பாய்ச்சும் நீராலும், இடும் உரத்தாலும் நிலம் மேலும் மேலும் வளம் உள்ளதாக மாறும்.

பண்படுத்திவிட்டு பயிர் ஏற்றாமல்
போட்டால் பழையபடி முட்செடிகள் முளைக்க ஆரம்பித்து விடும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து ஆன்மாவை பரிசுத்தம் ஆக்குவோம்.

இடைவிடாத செபத்தாலும், நற்செயல்களாலும் பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.

நிலை வாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment