Wednesday, June 25, 2025

" என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." (மத்தேயு நற்செய்தி 7:21)



"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
(மத்தேயு நற்செய்தி 7:21)

செபம் என்றால் என்ன என்ற கேள்விக்கு சரியான விடை மேற்படி வசனம்.

வெறுமனே வார்த்தைகளை வாயினால் உச்சரிப்பது மட்டும் செபம் அல்ல.

இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்வது மட்டும் செபம் அல்ல.

நம்மில் பலர் அதைத்தான் செய்கிறோம்.

இயேசுவை அழைக்கிறோம், தேவையானதைக் கேட்கிறோம்.

இது செபத்தின் ஒரு பகுதி.

முழுமையான செபம் அல்ல.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் செபம்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் 
சேர்ந்திருப்பதுதான் செபம்.

சிந்தனை -- தியானம்.
சொல் ----------வார்த்தைகள்.
செயல் --------- வாழ்க்கை.

நாம் வார்த்தைகளால் மட்டுமே செபிக்கிறோம்.

செபமாலையை எடுத்துக் கொள்வோம்.

1. தேவ ரகசியங்களைத் தியானிக்க வேண்டும்.

2.விசுவாசப் பிரமாணம் 
தமதிரித்துவ தோத்திரம்,
 கர்த்தர் கற்பித்த செபம், 
மங்கள வார்த்தை செபம் ஆகியவற்றை வாயினால் சொல்ல வேண்டும்.

3. சிந்தனையில் தியானித்ததை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு,

துக்க தேவ ரகசியங்களைத் தியானித்த படி வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்று, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் தந்தையின் விருப்பம். 

சிந்தனையாலும், வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் செபிப்பதுதான் செபம்.

இம்மூன்றில் ஒன்று குறைந்தால் கூட அது முழுமையான செபம் அல்ல.

நாம் தியானிக்கிறோம். சொல்கிறோம்.
வாழ்கிறோமா?

கர்த்தர் கற்பித்த செபத்தில் முதல் பகுதியில் இறைவனைப் புகழ்கிறோம்.

இரண்டாவது பகுதியில் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம்.

வேண்டியதைக் கேட்கும் போதே நாம் எப்படி வாழ்வோம் என்பதை இறைவனிடம் சொல்கிறோம்.

1. ஒவ்வொரு நாளும் கிடைப்பதில் அன்றைக்குத் தேவையானது போக மீதியை சேமித்து வைக்காமல் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். எங்கள் அன்றாட தேவைகளை நீரே பூர்த்தி செய்வீர் என்று உறுதியாக நம்புகிறோம்.

2. எங்களுக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்தவர்களை மன்னிக்கிறோம். தந்தையே! உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்.

3. நாங்கள் சோதனையில் விழாமல் வாழ பாவ சந்தர்ப்பங்களை தவிர்ப்போம்.
தந்தையே, அதற்கு எங்களுக்கு உதவும்.

4. உமது உதவியுடன் தீமையிலிருந்து மீட்கப்படுவோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செபமும் நமது வாழ்க்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் உன்னதமான செபம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment