"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்.15:7)
ஒரு டாக்டருக்கு எப்போது அதிகமான மகிழ்ச்சி ஏற்படும்?
பரிபூரண சுகமாக இருக்கும் அவருடைய மனைவி மக்களைப் பார்க்கும் போது ஏற்படும்
மகிழ்ச்சியை விட
அவருடைய மருத்துவ மனையில் மிகவும் சுகமில்லாமல் இருந்த ஒரு நோயாளி சுகமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.
ஏனெனில் அவருடைய பணி நோயாளிகளைக் குணமாக்குவது.
ஒரு ஆசிரியர் எப்போது அதிக மகிழ்ச்சி அடைவார்?
நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,
பள்ளித் தேர்வுகளில் வெற்றியே பெறாத ஒரு மாணவன் பொதுத் தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.
படிப்பே வராத மாணவர்களுக்கு தான் ஆசிரியர் அத்தியாவசியம்.
தொடர்வதற்கு முன் படைப்பின் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு எல்லாம் தெரியும், நித்திய காலமாகத் தெரியும்.
கடவுள் நித்திய காலமாக இருக்கிறார்,
உலகமும், மனுக்குலமும் படைக்கப்பட்டன. .
அவற்றைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் இறைவன் மனதில் நித்திய காலமாக இருந்தது.
மனிதனை பாவம் அற்ற பரிசுத்த நிலையில் தான் படைத்தார்.
ஆனால் மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
பாவம் செய்த மனிதனை பாவத்திலிருந்து மீட்க
தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.
இந்த அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தான் இறை வசனத்தைத் தியானிக்க வேண்டும்.
"மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்கள்" யார்"
இயேசுவையும், அன்னை மரியாளையும் தவிர மற்ற அனைத்து மனிதர்களும் சென்மப் பாவத்தோடு உற்பவித்தவர்கள்தான் தான்.
இயேசு கடவுள், பாவம் செய்ய முடியாதவர்.
அன்னை மரியாள் கடவுளின் விசேச சலுகையால் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.
ஆனால் அன்னை மரியாளும் மனுக்குலத்தைச் சேர்ந்தவள்தான். மீட்கப்பட வேண்டியள்தான்.
இயேசு தனது சிலுவை மரணத்தின் மீட்புப் பலனை மரியாளுக்கு முன்கூட்டியே கொடுத்து அவளைச் சென்மப் பாவம் இன்றி உற்பவிக்கச் செய்தார்.
"Jesus applied the redemptive benefits of His cross-death to the Virgin Mary in advance, causing her to be conceived without original sin."
ஆகவே அன்னை மரியாள் உட்பட அனைத்து மனிதர்களையும் மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.
ஆன்மீக ரீதியாக அனைத்து மனிதர்களும் பாவிகள் தான்.
ஆகவே மீட்பு அனைவருக்கும் அத்தியாவசியம்.
அனைவருக்கும் நற் செய்தி அறிவிக்கப் படுகிறது.
1. நற் செய்தியை ஏற்று மனம் திரும்பி திரு முழுக்குப் பெற்று பாவ மாசு இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
2.மனம் திரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.
3.திரு முழுக்குப் பெற்றாலும் பாவ வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களில் முதல் வகையினர் நேர்மையாளர்கள்.
ஒரு முறை மனம் திரும்பிய பின் நேர்மையாக வாழ்பவர்கள்.
தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.
திரும்பவும் மனம்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.
பாவத்தில் விழ நேரிட்டால் மனம் திரும்ப வேண்டும்.
பாவத்தில் விழாமல் தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.
அடுத்த இரு வகையினரும் மனம் திரும்ப வேண்டிய பாவிகள்.
இவர்கள் மேல் கடவுள் அதிக அக்கரை காட்டுகிறார்.
இயேசுவின் சீடர்கள், குருக்கள், அவர்களை அடிக்கடி சென்று பார்த்து அவர்களை மனம் திருப்ப முயற்சி செய்கிறார்கள்.
முயற்சி வெற்றி பெற்று அவர்கள் மனம் திரும்பினால் அதனால் மோட்சத்தில் ஏற்படும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும்.
நேர்மையாளர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட மனம் திரும்பியவர்களால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.
ஒரு பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பேர் நல்ல சுகமாக இருக்கிறார்கள்.
ஒருவன் ஒரு விபத்தில் மாட்டி சாகக் கிடக்கிறான்.
மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறான்.
டாக்டர்கள் முயற்சியால் பிழைத்துக் கொண்டான்.
பெற்றோருக்கு பிரச்சினை இல்லாத பிள்ளைகளால் ஏற்படும் மகிழ்ச்சியை விட சாகாமல் பிழைத்துக் கொண்டவனால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
அதேபோல்தான் ஏற்கனவே பரிசுத்தவான்களாக இருப்பவர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பாவிகளாயிருந்து பரிசுத்தவான்களாக மாறியவர்களால் மோட்சத்தில் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.
ஆகவே தான் இயேசு,
"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.
(லூக்கா நற்செய்தி 5:32)
நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு உலகுக்கு வந்தார்.
நாம் மனம் திரும்பி பரிசுத்தவான்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்துடன் பரிசுத்த திருச்சபையை நிறுவினார்.
நமது குருக்களுக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஏழு தேர்வுத் திரவிய அனுமானங்களில் இரண்டு பாவமன்னிப்புக்கானவை.
திருமுழுக்கு தான் நமது சென்மப் பாவத்தை மன்னித்து நம்மைத் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆக்குகிறது.
திருமுழுக்கு பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களுக்குப் மன்னிப்புப் பெறவே பாவ சங்கீர்த்தனம்.
குளிப்பது எதற்கு?
உடலில் ஒட்டியுள்ள அழுக்கு போவதற்கு.
தினமும் காலையில் குளிக்கிறோம், இரவில் வியர்வை மூலமாக வெளி வந்த அழுக்கைப் போக்குவதற்கு.
மாலையில் குளிக்கிறோம், அல்லது கால், கை, முகத்தைக் கழுவுகிறோம், நாம் வெளியே சென்று வரும்போது உடலில் ஒட்டும் அழுக்கைப் போக்குவதற்கு.
சாப்பிட்டவுடன் கை கழுவுகிறோம்.
உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டும் அக்கறையை ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டுகிறோமா?
காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகுமுன்னும் நமது பாவங்களுக்காக மனத்தாபப் படுகிறோமா?
ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?
எதற்காக ஒவ்வொரு பங்கிலும் ஒரு பங்குக்குரு இருக்கிறார்?
பள்ளிக்கூடத்தை மேற்பார்வை இடுவதற்கா?
இயேசு அதற்காக உலகுக்கு வரவில்லை, அதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தவில்லை.
இயேசு நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்காகப் பலியாகவும் உலகுக்கு வந்தார்.
குருத்துவத்தின் நோக்கமும் அதுதான்.
பங்கு மக்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டும்.
திருப்பலிக்குப் போகிறோம், பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?
சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை அருந்தக் கூடாது.
சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்தபின் தான் நற்கருணை நாதரை உணவாகப் பெறலாம்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று திருச்சபை கூறுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
தேவைப்படும் போதெல்லாம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
அற்பப் பாவம் இருந்தாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.
அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களின் ஆன்மா மிகவும் பரிசுத்தமாக இருக்கும்.
திருச்சபை நமக்குக் குருக்களைத் தந்திருப்பது நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்கும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி நிறைவேற்றுவதற்கும்தான்.
நமது குருக்களை நாம் பாவ மன்னிப்புப் பெற பயன்படுத்தியிருக்கிறோமா,
அல்லது கோயில் கட்டவும், பள்ளிக்கூடத்தில் வேலை வாங்கவும்,
விழாக்கள் கொண்டாடவும் மட்டும் பயன்படுத்தியிருக்கிறோமா?
நாம் ஒவ்வொரு முறை பாவ சங்கீர்த்தனம் செய்யும்போதும் விண்ணகத்தில் நம் பொருட்டு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment