Wednesday, June 11, 2025

"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்." (மத்.5:24)



"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்." (மத்.5:24)

காணிக்கை என்றால் என்ன?

இறைவன் தந்ததை அவர் தந்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு அர்ப்பணிப்பது காணிக்கை.

நம்முடையது என்று நாம் அழைக்கும் நமது உடல், உயிர், ஆன்மா உட்பட எதுவும் நம்முடையது இல்லை.

இவற்றுடன் உற்பவிக்கு முன் நாமே இல்லை.

We were nothing before our conception.

நாம் உற்பவிக்கும் போது  நாம் என்ற உறவும், வாழ உலகில் ஒரு இடமும் கிடைக்கிறது.

இதற்காக நாம் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

நாம் முழுமையாகக் கடவுளுக்கே சொந்தம்.

இதை ஏற்றுக் கொண்டு, அவருடைய பொருளாகிய நம்மைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் காணிக்கை.

நாம் நாமாக அவருக்காக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

நாம் நமது உடலோடும், உயிரோடும், ஆன்மாவோடும் வாழ வேண்டும்.

அதற்காக இவற்றை நமது உடமையாகத் தந்ததோடு,  வாழ உலகையும் தருகிறார்.

நாம் கடவுளுக்காகத்தான் வாழ வேண்டும்,

ஆனாலும் வாழ்வதற்காக உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் ஈட்ட உழைக்கிறோம்.

நாம் உழைக்கும் போது கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இறைப்பணிக்காகக் கொடுப்பதும் காணிக்கை.

நமது உடல் கடவுளுடையதாகையால் அதைப் பேணுவதும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்.

 நாம் உண்பது இறைவன் தந்த உடலைப் பேணி வளர்ப்பதற்கு.

பசிக்காக அல்லாமல் ருசிக்காக அளவுக்கு மீறி உண்டு உடலுக்கு தீமை வர வைப்பது போசனப் பிரியம் என்னும் பாவம்.

அதேபோல் நமது அயலானும் கடவுளுக்கு உரிமையானவன் தான். அவனைப் பேணுவதும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்.

கடவுள், நாம், நமது அயலான் ஆகிய மூவரோடும் நமது உறவு சீராக இருந்தால்தான் நாம் கொடுப்பது காணிக்கை.

உறவு சீராக இல்லாவிட்டால் நாம் கொடுப்பதை கடவுள் காணிக்கையாக ஏற்றுக் கொள்ள மாட்டார். 

கோவில் உண்டியலில் நாம் போடும் காணிக்கை கோவில் நிர்வாகத்தால் பிறரன்புப் பணிகளுக்காகத்தான் செலவிடப்
 படுகிறது.

காணிக்கை போடும் போது நமது உறவு சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நமக்கும் நமது அயலானுக்கும் உறவில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து விட்டுதான் காணிக்கையை உண்டியலில் போட வேண்டும்.

இதைத்தான் நமது ஆண்டவர்,

'' நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 

அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."(மத்.5:23,24) என்று சொல்கிறார்.

ஆண்டவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

"உங்களுக்கு உங்கள் சகோதரர் சகோதரிகள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்" என்று சொல்லவில்லை.

"உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்," என்று கூறுகிறார்.

நமக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லாவிட்டாலும்,

மற்றவர்களுக்கு நம்மீது ஏதாவது கோபம் இருந்தால் அதன் காரணத்தைக் கண்டறிந்து உடனே அதைச் சரிசெய்ய வேண்டும்.

"ஏன் தம்பி என்னுடன் பேசாமல் இருக்கிறாய்? நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் அது என்ன என்று சொல், நான் திருத்திக் கொள்கிறேன்."

என்று தாழ்ச்சியோடு உரையாடி, காரணத்தைக் கண்டறிந்து உறவைச் சரிசெய்ய வேண்டும்.

நமக்கும் நமது அயலானுக்கும் இடையில் மனத்தாங்கல் எதுவும் இருக்கக்கூடாது.

இருந்தால் மன்னிப்பு என்னும் ஆயுதம் கொண்டு அதைச் சரிசெய்ய வேண்டும்.

அயலானுக்குச் செய்வதை நாம் இறைவனுக்கே செய்கிறோம்.

அயலானோடு சமாதானமாக வாழ்ந்தால் இறைவனோடும் சமாதானமாக வாழ்கிறோம்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை நமது அயலானோடும் பகிர்ந்து வாழ்வோம்.

நிலை வாழ்வுக்கு வழிவகுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment