"பணமிருந்தால் நாயை வாங்கலாம், அதன் வாலை வாங்க முடியுமா?
இப்படி ஒரு கேள்வியை யாரோ Status ல் போட்டிருந்தார்கள்.
பணமிருந்தால் நாயை வாங்கலாம், நாயின் அன்பை வாங்க முடியுமா?
நாம் அதை அன்பு செய்தால் மட்டுமே அது வாலை ஆட்டும்.
LOVE MAKES A DOG’S TAIL WAG…
இன்றைய மனிதர்கள் பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
இன்றைய அரசியல்வாதிகளைப் பாருங்கள்,
பணமிருந்தால் ஓட்டை வாங்கலாம்,
ஓட்டை வாங்கினால் நாட்டை வாங்கலாம்,
நாட்டை வாங்கினால் மேலும் பணம் ஈட்டலாம்.
ஆனால் மக்களை வாங்க முடியுமா?
மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது,
மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டுமென்றால் அவர்களது மனதைக் கவர வேண்டும்.
மனதைக் கவர வேண்டுமென்றால் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.
மக்களை அன்பு செய்பவர்கள் தான் அவர்களது நலனுக்காக மட்டும் உழைப்பார்கள்.
அவர்களது நலனுக்காக மட்டும் உழைப்பவர்கள் மட்டும் தான் அவர்களுடைய மனதில் நிரந்தரமாகக் குடியேற முடியும்.
அதற்கு ஒரு உதாரணம் பெருந்தலைவர் காமராசர்.
மகனுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி,
''பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள்?"
அடுத்த கேள்வி,
"எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள்?"
மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி,
''மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?"
குணத்தைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை பணம்தான் வாழ்க்கைக்கு அடிப்படை.
குடும்ப வாழ்வுக்கு அடிப்படை அன்பு. அதைப் பற்றி யாரும் சிந்திப்பதேயில்லை.
வேலை தேடுபவர்கள் மனதில் இருக்கும் ஆசையெல்லாம் நிறைய சம்பளம் தரும் கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும்.
லௌகீக வாதிகளை விட்டு விடுவோம். ஆன்மீகவாதிகளுக்கு வருவோம்.
"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
மக்களின் பூசைக் கருத்துகளைக் கூர்ந்து கவனித்தால்
ஒரு கருத்து எல்லோருடைய கருத்துகளிலும் இருக்கும்.
" நினைத்த காரியங்கள் அனுகூலமாகத் தக்கதாக."
இறைவன் நினைப்பது தங்களில் நிறைவேற வேண்டும் என்று ஆசிப்பது தான் உண்மையான செபம்.
"இறைவனின் சித்தம் எங்களில் நிறைவேறத் தக்கதாக,
எங்கள் வாழ்வில் வரும் சிலுவைகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று வாழத்தக்கதாக,
பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டிய அருள் வரங்கள் கிடைக்கத் தக்கதாக,
எங்களுக்கு நல்ல மரணம் கிடைக்கத் தக்கதாக."
என்ற ஆன்மீக ரீதியிலான கருத்துகளுக்காக பூசை வைப்பவர்கள் பாக்கிய சாலிகள்.
ஆண் குழந்தை பிறக்க வேண்டும்,
தேர்வில் வெற்றி பெற வேண்டும்,
விண்ணப்பித்துள்ள வேலை கிடைக்க வேண்டும்.
திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை செல்கிறோம், நேர்ச்சைகளை நிறைவேற்ற.
என்ன நேர்ச்சைகள்?
ஆன்மாவைச் சார்ந்தவைகளா? அல்லது ஆன்மீகம் கலக்காத உலகியல் ரீதியானவைகளா?
"எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். பிறந்தால் அவர் குருவாக ஆசைப் பட்டால் நிறைவேற உதவுவோம்."
ஆசை நிறைவேறியது. நன்றி செலுத்த வேளாங்கண்ணிக்குப் போகிறோம்.
நல்லது.
முதலில் பங்குக் கோவிலுக்கு ஒழுங்காகத் திருப்பலிக்குச் சென்று, நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்வோம்.
அன்னை மரியாள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நல்ல கிறிஸ்தவ வாழ்வை.
நல்ல கிறிஸ்தவர்களாகத் திருத்தலங்களுக்குச் செல்வோம்.
நாம் கேட்டது கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம், நல்ல கிறிஸ்தவர்களாக.
ஜோக்கிம், அன்னம்மாள் தம்பதியருக்கு முதிய வயது வரை குழந்தை பிறக்கவில்லை.
"இறைவா, எங்களுக்கு ஒரு குழந்தை கொடுங்கள். குழந்தையை இறைப்பணிக்கு அர்ப்பணிப்போம்."
இது அவர்களது நேர்ச்சை.
பெண் குழந்தை பிறந்தது.
மரியாள் என்று பெயரிட்டு, மூன்று வயதிலேயே ஆலயத்தில் வாழ
விட்டு விட்டார்கள்.
மரியாள் ஆலயத்தில் தான் வளர்ந்தாள்.
இறைவனின் தாயாகும் பாக்கியம் பெற்றாள்.
நாமும் ஆன்மீக ரீதியாக நேர்ந்தால் அது இறைவனின் ஆசீரோடு நிறைவேறும்.
இறைவனை நேசிப்போம், இறையன்பில் வளர.
பிறரை நேசிப்போம்.
அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment