Saturday, August 31, 2024

"அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" (லூக்கா.4:36)

''அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" 
(லூக்கா.4:36)

இயேசு யூதர்களின் தொழுகைக் கூடத்தில் போதித்துக் கொண்டிருக்கிறார். 

அங்கு தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். 

பேய் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டது.

தன்னை ஒழித்துக்கட்டவே இயேசு வந்திருக்கிறார் என்பதைப்  புரிந்து கொண்டது.

அவரைப் பார்த்து 
 " நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?"

என்று கேட்டது.

."வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார்."

 பேய் அவரைவிட்டு வெளியேறியது. 

இறைமகன் மனு மகனாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்தது சாத்தான்.

அன்று அவன் ஏவாளை ஏமாற்றியிருக்கா விட்டால் பாவம் மனுக் குலத்திற்குள் நுழைந்திருக்காது,

கடவுள் பாடுகள் பட்டு மரிக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

அன்றுமுதல் இன்று வரை யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது சாத்தான்.

நாம் ஒவ்வொருவரும் அதன் குறிக்கோள்.

நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தானுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது.

அல்லது அன்று ஏவாளை விழுங்கியதுபோல் நம்மையும் விழுங்கிவிடும், பாவத்தினால்.

நமக்கு ஆண்டவருடைய அருள் வரமும் பாதுகாப்பும்  தேவை.

ஒரு வகையில் போர் நமக்கும், சாத்தானுக்கும் இடையில் என்று கூறுவதை விட, இயேசுவுக்கும், 
சாத்தானுக்கும் இடையில் என்று
கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில் நாம் தனிப்பொருள் அல்ல, இயேசுவின் உரிமைப் பொருள்.
 We are the property of Jesus.

அவரிடமிருந்து நம்மைப் பறிக்க
சாத்தான் முயல்கிறது.

சாத்தானிடம் அகப்படாமல் தப்பிக்க நமக்கு இருக்கும் ஆர்வத்தை விட

சாத்தானிடமிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசுவுக்கு இருக்கும் ஆர்வம் அதிகம்.

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் நம்மைக் காப்பாற்றும் ஓரே நோக்கோடு 

சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் பலகீனமான மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் துன்பப்பட முடியாத கடவுள் வேதனை மிகுந்த பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

எவ்வளவு ஆர்வம் அதிகமாக இருந்திருந்தால் மரிக்க முடியாத கடவுள் சிலுவையில் மரிப்பதற்காகவே மனிதனாகப் பூவுலகில் பிறந்திருப்பார்!

உண்மையில் நாம் சாத்தானைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இயேசுவின் கைப்பிடிக்குள் இருந்தாலே போதும்.

சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியாது.‌

''உன்னதரின் பாதுகாப்பில் வாழ்கிறோம்,

 எல்லாம் வல்லவரின் நிழலில். தங்கியிருக்கிறோம். 

அவர் தம் சிறகுகளால் நம்மை அரவணைக்கிறார்; 

அவர்தம் இறக்கைகள் நமக்குப் புகலிடமும், கேடயமும்.

ஆகவே,  நமக்குத் தீங்கு எதுவும் நேரிடாது; 

வாதை நம்மை நெருங்காது. 

நாம் கடவுளை நோக்கி மன்றாடும்போது, நமக்குப் பதிலளிப்பார்; 

நமது துன்பத்தில் நம்மோடு இருப்பார், 

நம்மைத் தப்புவித்து  பெருமைப்படுத்துவார்."

தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளுக்குள் புகுந்து 

கடவுளின் பாதுகாப்பில் உள்ள நம்மை சாத்தானால்‌ என்ன செய்ய முடியும்?

எதுவும் செய்ய முடியாது.

ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கும் நம்மைச் சாத்தான் பார்த்துக் கொண்டேயிருப்பான்.

எதற்கு?

பாதுகாப்பிலிருந்து தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தால் லபக்கென்று தலையைப் பிடித்து வெளியே இழுப்பதற்காக.

ஆகவே நாம் ஒவ்வொரு வினாடியும் நமது செபத்தினாலும், தியானத்தினாலும், 
தவ முயற்சிகளாலும்,
பிறரன்புப் பணிகளாலும் இயேசுவின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும்.

சாத்தானைப் பற்றி நினைக்கவும் வேண்டாம், அவனுக்குப் பயப்படவும் வேண்டாம்.

அன்று ஏவாள் விலக்கப்பட்ட மரத்துப் பக்கம் போகாமல் இருந்திருந்தால் சாத்தான் அவளைச் சோதித்திருக்காது.

நாமும் பாவச் சந்தர்ப்பங்களை விட்டு விலகியே இருந்தால் சோதனைகள் வராது.

பாவச் சந்தர்ப்பங்கள் அருகில் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் செல்லக்கூடாது. 

அவற்றைப் பற்றி சிந்திக்கக் கூடாது, பேசக்கூடாது, அவற்றின் அருகில் போகக்கூடாது.

சிந்தனையில் இயேசு இருக்க வேண்டும், மற்றவர்களோடு பேசும் போது இயேசுவைப் பற்றி பேச வேண்டும், அடிக்கடி திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

சாத்தானால் நம்மை எதுவும் செய்ய முடியாது.

காவல் சம்மனசு நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment