Wednesday, August 21, 2024

" அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்."(மத்தேயு .22:5)

''அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்."
(மத்தேயு .22:5)

அழைத்தவர் மீது அன்பிருந்தால் அழைக்கப் பட்டவர்கள் அழைப்பை ஏற்பார்கள்.

அன்பு இல்லாதவர்கள் அழைப்பைக் குப்பையில் போட்டு விட்டு தங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள்.

இயேசு விண்ணக விருந்துக்கு நம் அனைவரையும் அழைத்திருக்கிறார்.

அழைப்பை ஏற்றுக் கொள்பவர்கள் அவரது கட்டளைகளை அனுசரித்து அவரது விருப்பப்படி வாழ்வார்கள்.

இயேசுவின் கட்டளைகளின்படி வாழாதவர்களுக்கு அவர் மீது அன்பு இல்லை என்று சொல்லத் தேவையில்லை.

ஞானஸ்நானம் பெற்ற அனைவருக்கும் இயேசு விண்ணகத் திருவிருந்துக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார்.

அழைப்பைப் பெற்ற அனைவரும் திருச்சபையின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும்.

இன்று திருச்சபையில் இருப்பவர்களில் அநேகர் ஆண்டவரின் அழைப்பை ஏற்றதற்காக இருக்கவில்லை.

தங்கள் சுய விருப்பங்களுக்காகவே இருக்கிறார்கள்.

அவர்கள் செபம் சொல்வதும், கோவிலுக்குப் போவதும், பூசையில் கலந்து கொள்வதும்

தாங்கள் நலமுடன் வாழ வேண்டும், 
தங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டும்,
 தங்கள் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், 
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும், 
இன்னும் இவை போன்ற கருத்துகளுக்காகத் தான்.

வாசிக்கப்படும் பூசைக் கருத்துக்களைக் கேட்டால் இது புரியும்.

தங்கள் கருத்துகள் தங்கள் விருப்பப்படி நிறைவேறாவிட்டால் அவர்களது பக்தி குறைந்துவிடும்.

சிலர் கோவிலுக்குச் செல்வதையே நிறுத்தி விடுவார்கள்.

சிலர் செபம் சொல்வார்கள்.

ஆனால் செபமா அல்லது TV யா என்று கேட்டால் TV க்கு தான் முதலிடம்.

செபம் சொல்ல வேண்டிய நேரத்தில் TVயில் ஒரு படம் போட்டால் படம் பார்த்து விட்டு தான் செபம் சொல்வார்கள்.

TVபார்த்துக் கொண்டே செபம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் போக வேண்டும்.

அதே நேரத்தில் நண்பர் வீட்டில் ஒரு விழா.

விழாவுக்குப் போகாவிட்டால் நண்பர் வருந்துவார்.

பூசையை Cut அடித்து விட்டு விழாவுக்குச் சென்று விடுவார்கள்.

கடன் பூசை மனதை உறுத்தாது.

ஞாயிற்றுக்கிழமை வயலில் வேலை செய்யக் கூடாது, இது திருச்சபையின் கட்டளை.

அன்று உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சாவிட்டால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும்.

வயலுக்குப் போய் விடுவார்கள்.

ஆன்மீக வளர்ச்சியை விட பயிர் வளர்ச்சி தான் அவர்களுக்கு முக்கியம்.

அருட் செல்வத்தை விட பொருட் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு விண்ணக விருந்து ஒரு பொருட்டேயில்லை.

ஒழுக்கமாய் வாழ்ந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை அடையலாம்.

ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப் படாமல் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பமாய் வாழலாம்.

பார்த்தால் பாவம் வரும் என்றால் பார்க்கக்கூடாது என்பது ஒழுக்கவிதி.

சினிமா எடுப்பவர்களுக்கு ஒழுக்க விதிகளைவிட பணம்தான் முக்கியம்.

அரைகுறை ஆடைகளோடு பெண்களை ஆடவிட்டு எடுக்கப்படும் சினிமாக்களைப் பார்ப்பவர்களின் கண் வழியே பாவம் நுழைகிறது.

விண்ணக விருந்துக்கு அழைக்கப்பட்ட நம்மவர்களிலும் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

தீமை செய்பவர்களை மன்னியுங்கள் என்கிறது இறைவாக்கு.

மன்னிப்பவர்களுக்குதான் மன்னிப்புக் கிடைக்கும்.

மன்னிப்புக் கிடைத்தால்தான்ற விண்ணக விருந்து.

நம்மவர்களில் எத்தனை பேர் மன்னிக்கிறோம்?

சிந்தித்துப் பார்ப்போம்.


நமக்கு வருமானம் வருகிறது.

தருபவர் கடவுள்.

கடவுள் நமக்காக மட்டும் நமக்கு வருமானம் தரவில்லை.

நமது அயலானுக்கு உதவுவதற்காகவும் சேர்த்துதான் நமக்குத் தருகிறார்.

பிறருக்கு தங்களால் இயன்ற உதவி செய்பவர்களுக்கு மட்டும் தான் விண்ணக விருந்து.

விண்ணக விருந்துக்கான அழைப்பை ஏற்காதவர்கள்தான் பிறருக்கு இயன்ற உதவியைச் செய்ய மறுப்பார்கள்.

அநேகருக்கு இவ்வுலகில் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ள அளவுக்கு

மறுவுலகில் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை   இருப்பதில்லை.

அநேக சமயங்களில் உலகில் சொத்து சேர்ப்போர் அதை அனுபவிக்க வாழ்வதில்லை.

ஆயிரம் கோடிகள் செலவழித்துக் கட்டப்படும் பல மாடிக்கட்டடங்கள் ஒரு நில நடுக்கத்தைத் தாங்காது.


1999ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்
 33 மாடிக் கட்டிடம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சில வினாடிகளில் ஒன்றுமில்லாத ஓட்டாண்டி ஆகிவிட்டார்.

விண்ணகத்தில் சேர்த்து வைக்கும் சொத்து ஒருபோதும் அழியாது.

அநேகருக்கு அறிவியலில் இருக்கும் ஆர்வம் ஆன்மீகயியலில் இருப்பதில்லை.

செய்தித்தாள் படிப்பதில் உள்ள ஆர்வம் விவிலிய வாசிப்பில் இருப்பதில்லை.

செய்தித்தாள் அறிவைக் கொடுக்கும்.

விவிலியம் ஞானத்தைக் கொடுக்கும்.

ஞானம்தான் விண்ணக விருந்துக்கு அழைத்துச் செல்லும்.

நல்ல விசயங்களைப் பற்றி பேசும் போது நமது கருத்துக்களுக்கும், உலகப் பெரியோரின் கருத்துக்களுக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை விவிலியக் 
கருத்துக்களுக்குக் கொடுக்கிறோமா?

பிள்ளைகளின் திருமணம் பற்றிப் பேசும் போது

அழகு, வசதி, வேலை, சம்பளம், வீடு, நிலம், பணம் பற்றி பேசுகிறவர்கள்

தெய்வபக்தி, குணம், அன்பு, பொறுமை போன்ற ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசுகிறார்களா?

முந்தியவை இவ்வுலகில் கொஞ்ச நாள் வாழவைக்கும்.

பிந்தியவை விண்ணுலகில் நிரந்தரமாக வாழவைக்கும்.

முடிந்து போகும் வாழ்வு முக்கியமா?

நிலை வாழ்வு முக்கியமா?

சிந்திப்போம்.

நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

அதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment