Friday, August 9, 2024

" கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(அரு. 12:24)

" கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(அரு. 12:24)

தங்கம் விலை கூடிய உலோகமாக இருக்கலாம்.

ஆனால் அது உருக்கப்படட்டு, கம்பியாக்கப் பட்டு, வெட்டப்பட்டு, சுத்தியலால் அடிக்கப்பட்டு, நகையாக்கப் பட்டால்தான் அதை அணிய முடியும்.

விலை கூடிய துணியாக இருக்கலாம்.

ஆனால் அதைக் கத்தரிக்கோலால் வெட்டிக் கிழித்துத் தைத்தால்தான் அது சட்டையாகும்

நிலத்தை உழுதால்தான் அதில் பயிரிட முடியும்.

விதையை விதைக்காமல் வைத்திருந்தால் விதையாகத்தான் இருக்கும்.

அதை மண்ணில் விதைத்து அது மடிந்தால் தான் அது தளிர்த்து, வளர்ந்து, மரமாகி, பூத்துக் காய்க்கும்.

ஆயிரக்கணக்கான விதைகளையும் ஈணும்.

நாமும் அப்படித்தான்.

பிறந்து வளர்ந்தால் மட்டும் போதாது, 

நம்மால்  மற்றவர்கள் பயன்பெற வேண்டுமானால் நாம் கஷ்டப்பட வேண்டும், உலகியலுக்கு (worldliness) மடிய வேண்டும்.

நமது மடிவு மற்றவர்களை வாழ வைக்க வேண்டும்.

இறை மகன் மனுமகனாகப் பிறந்ததே‌ சிலுவையில் மடிந்து நம்மை நிலை வாழ்வு வாழ வைப்பதற்காகத்தான்.

நாம் சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியதே

அவரைப் போல நாமும் நமது சிலுவையால் மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வுலகில் வாழ வைப்பதற்காக அல்ல.

மறுவுலகில் வாழ வைப்பதற்காக.

இவ்வுலகில் உண்டு, உடுத்தி, உறங்க மட்டும் நாம் உதவி செய்தால் அதனால் ஆன்மீக ரீதியாக அவர்களுக்கும் பயனில்லை, நமக்கும் பயனில்லை.

நாம் மற்றவர்களுக்காக சிலுவையைச் சுமக்கும் போது அது அவர்களின் ஆன்மீக நலனுக்குப் பயன்பட வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி கேட்கலாம்.

ஆன்மீக ரீதியாக குருக்களால் மட்டும் தானே உதவ முடியும்,

நம்மால் உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் தானே கொடுக்க முடியும்.  இதனால் என்ன ஆன்மீக பலன் ஏற்படும்?

இறுதித் தீர்ப்பு நாளில் இயேசு,

" நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;

 தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;

 அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 

 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;

 நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;"

 என்று குருக்களை மட்டுமா பார்த்துச் சொல்வார்?

நம்மையும் பார்த்துத்தானே சொல்வார்!

நாம் உலக ரீதியாகச் செய்யும் உதவிகளை இயேசுவுக்காகச் செய்தால் அதற்கு ஆன்மீக ரீதியாக உறுதியாகப் பயன் இருக்கும்.

எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்ற கண்ணோக்கில் இறைவனில் நமது சகோதரன் என்ற‌ முறையில் நாம் செய்யும் உதவி இறைவன் முன் ஒரு நற்செயல்.

நமது நற்செயல் நமக்கு மட்டுமல்ல நமது உதவியைப் பெறுபவருக்கும் அருள் வரங்களை அள்ளி வரும்.

இறைவன் பெயரால் உதவி செய்யும் நம்மில் உதவி பெறுபவர் இறைவனின் சாயலைக் காண்பார்.

அதுவே அவருக்கு ஆண்டவரின் அருள் வரங்களை அவருக்குப் பெற்றுத் தரும்.

நமது அருட்சகோதரிகள் நடத்தும் மருத்துவ மனைகளில் அவர்களிடம் மருத்துவ உதவி பெறுவோர் 

உடல் நோயிலிருந்து மட்டுமல்ல, ஆன்மீக நோயிலிருந்தும் விடுதலை பெற்று 

மனம் திரும்பி இறைவனிடம் வருவதை அனுபவப் பூர்வமாகப் பார்த்திருக்கிறோம்.

நமது பிறனும் நமது சகோதரன். நமது உதவி நமது சகோதரனுக்கும் நமக்கும் உள்ள உறவை மட்டுமல்ல,

அவனுக்கும் நமது தந்தைக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும்.

 நமது இறைக்குடும்பத்தின் உறவு நெருக்கமாகும்.

புனித கல்கத்தா தெரசா இறந்து கொண்டிருந்த தொழு நோயாளிகளுக்குச் செய்த உதவி நிச்சயம் அவர்களை விண்ணக வாழ்வுக்கு அனுப்பியிருக்கும்.

நமது சேசு சபைக்கருக்கள் செய்துகொண்டு வரும் கல்விப்பணி ஒரு ஆன்மீகப் பணிதானே.

அரசுக் கல்லூரிகளில் உலகக் கல்வி மட்டும் கொடுக்கப் படுகிறது.

நமது கல்லூரிகளில் ஆன்மீகக் கல்வியும் கலந்து கொடுக்கப் படுகிறது.


 நமக்காக மட்டும் வாழ நாம் படைக்கப்படவில்லை.

அதனால் தான் நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். 

பிறருக்காகத் தம் வாழ்வை இழப்பவர்   நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். 


 இயேசுவுக்குத் தொண்டு செய்வோர் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் தொண்டு செய்வர். 

அவர் இருக்கும் இடத்தில்தான் அவரது தொண்டரும் நித்திய காலம் இருப்பார். 

நம்மை நாம் ஒரு ஆன்மீகத் தாவரமாகக் கற்பனை செய்து கொள்வோம்.

விதையாகிய நாம் ஆன்மீக மண்ணில் மடிவோம்.

பின் தளிர்த்து வளர்ந்து ஆன்மீக மரமாகிப் பூத்துக் காய்த்து வருவோர் போவோருக்கெல்லாம் ஆன்மீகக் கனி தந்து மகிழ்விப்போம்.

அவர்களும் நம்‌ செயலைப் பின் பற்றுவார்கள். இறைவனது 
சாம்ராச்சியம் உலகெங்கும் பரவும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment