Tuesday, August 27, 2024

''இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை."(மாற்கு.6:26)

"இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை."
(மாற்கு.6:26)

தன் சகோதரன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருந்த ஏரொது அரசன் ஏரோதியாளை திருப்தி படுத்துவதற்காக,

தனது தவற்றைச் சுட்டிக் காட்டிய திருமுழுக்கு அருளப்பரைக் கைது செய்து சிறையில் பாதுகாப்பில் வைத்திருந்தான்.

ஏரோதியாள் அருளப்பரைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மன்னனது பிறந்த நாள் விழாவில் நடனமாடிய ஏரோதியாளின் மகளிடம்  ஏரோது  "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். 

அவள் தனது தாயின் ஆலோசனைப் படி அருளப்பரின் தலையைக் கேட்டாள். 

இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பாமல் அவள் கேட்டதைக் கொடுத்தான். 

ஏரோதுவுக்குத் தான் தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது தெரியும்.

அருளப்பர் பரிசுத்தமானவர் என்பதும் தெரியும்.

ஏரோதியாளின் மகள் அருளப்பர் தலையைக் கேட்டது தவறு என்பதும் தெரியும்.

இவ்வளவும் தெரிந்திருந்தும் அவர் தலையை வெட்டியது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

அதுவும் தவறாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக ஒரு கொலை செய்தான்.

நாம் எப்போதாவது ஏரோதுவைப் போல் நடந்து கொண்டிருக்கிறோமா?

நிச்சயமாக யாரையும் கொலை செய்யவில்லை.

ஆனால் ஏரோதியாளைத் திருப்திப் படுத்துவதற்காக அவன் தப்பு செய்ததைப் போல நாமும் யாரையாவது திருப்திப் 
படுத்துவதற்காக ஏதாவது தப்பு செய்திருக்கிறோமா?

சிறிய தப்பாக இருந்தாலும், பெரிய தப்பாக இருந்தாலும் தப்பு தப்புத் தான்.

ஏன் ஞாயிறு திருப்பலிக்கு வரவில்லை?

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக அவர்களோடு வீட்டில் இருந்து விட்டேன்.

மது அருந்தியிருப்பது போல் தெரிகிறது?

ஆமா. நண்பனுக்கு கம்பெனி கொடுப்பதற்காகக் கொஞ்சம் குடித்தேன்.

இலஞ்சம் வாங்குவது தவறு எனத் தெரிந்தும் ஏன் வாங்கினாய்?

கிறிஸ்துமசுக்கு காஞ்சிபுரம் பட்டு தான் வேண்டுமென்று மனைவி அடம் பிடிக்கிறாள். அவளைத் திருப்திப் படுத்தா விட்டால் வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. பணம் வேண்டுமே!

அமைதியாக அமர்ந்து ஆன்மப் பரிசோதனை செய்து பார்த்தால் மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக எத்தனை தவறுகள், பாவங்கள் செய்திருக்கிறோம் என்பது புரியும்.


கடவுள்: நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயா?"  . 

ஆதாம்:  "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்,

அவளைத் திருப்திப் படுத்த நானும் உண்டேன்" . 

தகப்பனைப் போல பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் திருப்திப் படுத்த வேண்டியது கடவுளை 
மட்டும்தான்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே இயேசு உலகிற்கு வந்தார்.

நாமும் தந்தையின் சித்தத்தையே நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

"விண்ணுலகில் உள்ள எங்கள் தந்தையே, உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல பூவுலகிலும் நிறைவேறுக."

இது இயேசு கற்பித்த செபம்.

"இதோ ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்."

இது அன்னை மரியாளின் செபம்.

நம்மைப் படைத்தவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மட்டுமே நிறைவேற்றுவது நமது பணி.

நாம் ஏன் பிறரை அன்பு செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் இவ்வுலகில் வாழ்கிறோம்?

ஏனெனில் அது கடவுளின் விருப்பம்.

நாம் ஏன் பாவம் செய்யக்கூடாது?

ஏனெனில் பாவம் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது.

ஆக நாம் கடவுளுக்கு விருப்பமான அனைத்தையும் செய்ய வேண்டும்.

கடவுளுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யக்கூடாது.

உலகில் யாரையும் திருப்திப் படுத்த நாம் வாழவில்லை.

கடவுள் விரும்புவதை நாம் விரும்ப வேண்டும்.

நமக்கு வேண்டியதைச் செய்தாலும்,

பிறருக்கு வேண்டியதைச் செய்தாலும்

கடவுளுடைய மகிமைக்காகவே
செய்ய வேண்டும்.

"எல்லாம் உமக்காக.

இயேசுவின் திரு இருதயமே,

எல்லாம் உமக்காக."

லூர்து செல்வம்.





.

No comments:

Post a Comment