''ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:20)
இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றாகக் கூடியிருந்தால்தான் இயேசு நம்முடன் இருப்பாரா?
நாம் தனியாக இருந்தால் நம்மோடு இருக்கமாடாடாரா?
தனியாக இருந்தாலும், கூட்டத்தோடு இருந்தாலும் இயேசு நம்மோடுதான் இருக்கிறார்.
பின் ஏன் இந்த வார்த்தைகள்?
ஒரு மனிதன் தன்னிலே ஒரு ஆள் என்றாலும் வாழ்க்கையில் தனி ஆள் அல்ல.
நாம் உலகிற்குள் வருவதற்கே இருவர் உதவி தேவைப்படுகிறது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி.
(Social animal)
சமூக வாழ்வுக்கு குறைந்தது இருவர் வேண்டும்.
அந்த இருவரும் 'இயேசுவின் பெயரின் பொருட்டு' வாழ்ந்தால் தான் அது இறைச் சமூகம்.
நாம் இறைச் சமூகத்தில் இறைவன் பெயரால், இறைவனுக்காக வாழ வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தவே
"இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
என்று இயேசு கூறுகிறார்.
"உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்."
(மத்தேயு நற்செய்தி 18:19)
இறைவனிடம் கேட்போர் தங்களுக்குள் ''மனமொத்திருக்க வேண்டும்."
அதாவது சமாதான உறவோடு வாழ வேண்டும்.
இறைவனோடு சமாதான உறவில் வாழ வேண்டுமென்றால் முதலில் நமக்குள் சமாதானம் வேண்டும்.
இறையன்பு இல்லாதவர்களிடம் பிறரன்பு இருக்க முடியாது.
பிறரன்பு இல்லாமல் இறையன்பு பூர்த்தியாகாது.
பிறரன்புக்கு குறைந்தது இருவர் தேவை.
இருவரும் இறைவன் பொருட்டு வாழ வேண்டும்.
அவர்களை இறைவன் உடனிருந்து வழி நடத்துவார்.
நாம் தனியாக இருக்கும் போதும் உள்ளத்தளவில் சமூகத்தில் இருக்க வேண்டும்.
தனியாக செபிக்கும் போது நமக்காக மட்டும் செபிக்கக் கூடாது.
அதனால் செபம் சொல்லக் கற்றுத் தந்த இயேசு,
"விண்ணகத்திலிருக்கிற
"எங்கள் தந்தையே" என்று கடவுளை அழைக்கச் சொன்னார்.
பாவ மன்னிப்பு கேட்கும் போது கூட
"எங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னியும் "
என்று கேட்கச் சொன்னார்.
நாம் பிறரை மன்னித்து விட்டுதான் நமக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஆக தனியே இருந்தாலும் உள்ளத்தில் சமூகத்தில் வாழ வேண்டும்.
இருவர் சமாதானத்தோடு இறைவன் பெயரில் சேர்ந்திருக்கும் போது இறைவன் எப்படி நம்மோடு இருக்கிறார்?
1. அன்று இயேசுவின் சீடர்கள் சேர்ந்திருக்கும் போது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கி வந்தது போல
இப்போது நாம் இருவர் இயேசுவின் பெயரால் சேர்ந்திருக்கும் போது
தூய ஆவி நம்முடன் இருந்து நம்மை வழி நடத்துவார்.
2. இருவர் இயேசுவோடு இணைந்திருந்தால் அவரும் அவர்களோடு இணைந்திருப்பார்.
"நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது."
(அரு.15:4)
3. நாம் சமூகத்தோடு இயேசுவோடு இணைந்திருந்தால் சுமூகமான ஆன்மீக வாழ்வுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருவார். அவற்றில் இறைவாக்கினால் நம்மை வழி நடத்துவார்.
4. பகைவரும் நண்பராவார்.
பேருந்தில் பயணிப்பதற்காக ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு இருவர் இருக்கையில் நம்மைப் பகைப்பவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
நாம் சமாதான விரும்பியாக இருந்தால் அவர் அருகில் அமர வேண்டும்.
நமது புன்னகையாலும், சாந்தமான பேச்சாலும் சமாதான விதையை அவருள் தூவ வேண்டும்.
நம் இருவரிடையே அமர்ந்திருக்கும் சமாதானத்தின் தேவன் இயேசுவின் அருள் வரத்தால் அவருக்குள் இருக்கும் பகைமை உணர்ச்சி பஞ்சாய்க் காற்றில் பறந்து விடும்.
பேருந்தை விட்டு இறங்கும் போது நண்பர்களாய் இறங்குவோம்.
5.இயேசுவை அறியாதவர்கள் மத்தியில் நாம் அமர நேர்ந்தால் நமது விவேகமான பேச்சின் மூலம் அவர்களுக்குள் நற்செய்தியை விதையை விதைக்க வேண்டும்.
விதைத்த விதை முளைக்க வேண்டிய நேரத்தில் முளைக்கும்.
அதை இயேசு பார்த்துக் கொள்வார்.
6.கடவுள் நம்பிக்கை அற்றோர் கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
இயேசு நம்மோடு தான் அமர்ந்திருப்பார்.
நாம் மற்றவர்களின் விசுவாச ஏற்புக்காக இயேசுவிடம் செபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிப்
பேச வேண்டும் என்பதை அவரே நமக்கு உணர்த்துவார்.
அந்த நேரத்தில் நமக்கு அருளப்படுவதையே பேசினால் போதும்.
ஏனெனில் பேசுவோர் நாம் அல்ல. மாறாக, தூய ஆவியாரே நமக்காகப் பேசுவார்.
7. உலகில் இறைவன் படைத்த சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இறைவன் சர்வ வல்லவர்.
அவர் நினைத்திருந்தால்,
ஒரே வார்த்தையில் உலகைப் படைத்தது போல, ஒரே வார்த்தையில்
மனிதர்கள் அனைவரையும் அவரே கதி என்று அவருடைய காலில் விழ வைத்திருக்கலாம்.
ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.
மனிதர்களே
கட்டாயத்தினால் அல்லாமல், சுதந்திரமாக அவரை நேசித்து, அவரைத் தேடி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அதற்காக ஏற்கனவே அவரை அறிந்து அவருடைய சீடர்களாக வாழும் நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்.
நாமும் நமது சீடத்துவ வாழ்க்கையை பிறருக்கு முன் மாதிரிகையாக வாழ்ந்தால்
நம்மைப் பார்த்து மற்றவர்கள் அவரைத் தேடி வருவார்கள்.
நமது முன் மாதிரிகை வாழ்க்கையில் இயேசுவும் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.
அவர் நம்மோடு இருக்கிறார் என்பதை மற்றவர்கள் உணரும் படியாக நடந்து கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment