Sunday, August 11, 2024

நான் யார்?

நான் யார்?

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பார்த்து கேட்க வேண்டிய கேள்வி,

"நான் யார்?''

இலக்கணப்படி நான் பேசுகின்ற ஆளைக் குறிக்கும்.

எனக்கு உடை இருக்கிறது, ஆனால் உடை நான் அல்ல.

எனக்கு வீடு இருக்கிறது, ஆனால் வீடு நான் அல்ல.

எனக்கு ஒரு உடல் இருக்கிறது,
ஆனால் உடல் மட்டும் நான் அல்ல.

எனக்கு ஒரு ஆன்மா இருக்கிறது.
ஆன்மா மட்டும் நான் அல்ல என்று சொல்ல முடியுமா?

முடியாது.

எனது உடலும், ஆன்மாவும் சேர்ந்துதான் நான் என்றாலும்

நான் மரணம் அடையும் போது என் உடல் என்னை விட்டுப் பிரிந்து 

தான் வந்த மண்ணுக்கே போய் விடும்.

ஆனால் எனது ஆன்மா என்னை விட்டுப் பிரியுமா?

பிரியாது, பிரிய முடியாது,

ஏனென்றால் என் ஆன்மாதான் நான்.

இறைவன் என்னைத் தன் உருவில் படைத்திருப்பதால் அவரைப் போல நானும் எப்போதும் வாழ்வேன்.

எனக்குத் துவக்கம் இருந்தாலும் முடிவு இல்லை.

இப்போது உலகில் வாழ்கிறேன் எனது உடலோடும், உணவு, உடை, இருப்பிடம் போன்ற உலகியல் பொருட்களோடும்.

எனக்கு முக்கியம் நானா? உடல் உட்பட மற்ற பொருட்களா?

 ஒரு கேள்வி.

நாம் வயநாட்டில் மழை வெள்ளத்தில் நிலச் சரிவில் மாட்டிக் கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமது உடை உட்பட அனைத்துப் பொருட்களும் வெள்ளத்தில் போகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

நாம் நம்மைக் காப்பாற்ற முயற்சிப்போமா?

நமது உடமைகளைக் காப்பாற்ற முயற்சிப்போமா?

நிச்சயமாக நம்மைக் காப்பாற்றத்தான் முயற்சிப்போம்.

இது உலகியல்.

ஆன்மீகத்துக்கு வருவோம்.

நமது ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் வகிக்க வேண்டியது நமது ஆன்மாவா? நமது உடலா?

ஒருவர் நம்மிடம் சொல்கிறார்,

"நீ இயேசுவை மறுதலித்தால் உனக்கு அரசில் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மறுதலிக்க மறுத்தால் கொல்லப்படுவாய்.''

மறுதலித்தால் உத்தியோக உயர்வு கிடைக்கும். நிறைய சம்பளம் கிடைக்கும். வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

மறுதலிக்க மறுத்தால் உடல் நம்மை விட்டுப் பிரிந்து விடும்.

உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் நமது ஆன்மா இறைவனோடு சேர்ந்து விடும்.

உடலை இழந்து இறைவனை அடைவது முக்கியமா?

இறைவனை இழந்து உலகில் அமோகமாக வாழ்வது முக்கியமா?

நமது உடலின் இச்சையைப் பூர்த்தி செய்ய நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் பாவத்தால் நமது ஆன்மாவைக் கொல்கிறோம்.

ஆன்மாவைவிட உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவுதான் பாவம்.

ஏவாள் தின்ற கனி அவளது நாவிற்கு ருசியாக இருந்தது.

ஆனால் ஆன்மா இறந்து விட்டது.

அவளுடைய நாவின் ருசி அவளது ஆன்மாவை மட்டுமா கொன்றது,

அவளது சந்ததியாரையும் சென்மப் பாவத்தோடு பிறக்க வைத்தது.

நமது ஆன்மாவிற்கு உயிர் கொடுக்க நம்மைப் படைத்த இறைவனே தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டியிருந்தது.

நம்மைப் படைத்தவருக்கு நாம் கொடுத்த பரிசு சிலுவை மரணம்!

ஆனால் மனிதர்களுக்கு நன்றி உணர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றி உணர்ச்சி இருந்தால் பாவம் செய்வோமா?

நமது உடலை இயக்குவது நமது ஆன்மா.

ஆன்மாவின் விருப்பத்துக்கு ஆன்மா இயங்க வேண்டும்.

ஆனால் எதிர் மாறாக உடலின் விருப்பத்துக்கு நமது ஆன்மா இயங்கிக் கொண்டிருக்கிறது.

கோவிலுக்கு வந்தால் திவ்ய நற்கருணை முன்பு முழந்தாள் படியிட உடலுக்கு விருப்பமில்லை.

முழந்தாள் படியிடாமல் தலை மட்டும் குனிய ஆன்மா உடலுக்கு அனுமதி கொடுத்து விடுகிறது.

நற்கருணை வாங்குமுன் ஒரு மணி நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்க உடலுக்கு மனம் இல்லை.

 ஆன்மாவும் சாப்பிட அனுமதி கொடுத்து விடுகிறது.

 நாமும் சாப்பிட்டுக் கொண்டே கோவிலுக்கு வந்து, தயாரிப்பு இல்லாமல் நற்கருணையும் வாங்கி விடுகிறோம்.

ஆன்மீக விழா நாட்களில் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை

ஆன்மாவை பரிசுத்தத் தனத்தில் வளர்க்கும் பாவ சங்கீர்த்தனத்துக்குக் கொடுக்கிறோமா?

திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.

திருமணம் என்றாலே நகைக்கடையும், ஜவுளிக் கடையும், பணமும், விருந்தும்தானே ஞாபகத்துக்கு வருகிறது!

இவற்றில் ஏதாவது ஒன்றில் பிரச்சினை என்றால் திருமணமே பிரச்சினை ஆகிவிடுகிறது.

உடலுக்கும், உலகத்துக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நாம் ஆன்மாவுக்குக் 
கொடுக்காததினால்தான் 

உலகில் பாவம் கொண்டாட்டம் போடுகிறது.

ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டுமா?

உடலின் வீணான ஆசைகளை மறுப்போம்.

ஆன்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்.

நிலை வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment