Thursday, August 15, 2024

''மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."(மத்தேயு.19:5)

" மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."
(மத்தேயு.19:5)

இந்த வசனத்தைத் தியானிப்பதற்கு முன்,

கடவுள் கணவனையும், மனைவியையும் எப்படிப் படைத்தார் எனக் கூறும் வசனத்தைத் தியானிக்க வேண்டும்.


" கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; 

கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; 

ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."
(தொடக்கநூல் 1:27)

இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்

"உருவம்" தொடர்பான இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.


"சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா?"

என்ற பரிசேயர்களின் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு

இயேசு தெனாரியம் நாணயத்தில்
யாருடைய உருவம் (Image) பொறிக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.

சீசருடையது என்ற பதில் வந்தது


 இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் 

கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். 

இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கும், மனிதனைப் படைத்ததற்கும் என்ன சம்பந்தம்?

தெனாரியத்தில் சீசரின் உரு இருப்பதால் அது சீசருக்குச் சொந்தம்.

எதில் யாருடைய உரு இருக்கிறதோ அது அவருக்குச் சொந்தம்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்.

மனிதனில் கடவுளின் உரு இருக்கிறது.

ஆகவே மனிதன் கடவுளுக்குச் சொந்தம்.

''ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

நம்முடைய முதல் பெற்றோரை ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்.

கடவுள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல.

அவர் ஆவி.‌ (Spirit)

ஆணும், பெண்ணுமாகப் படைக்கப் பட்டவர்களில் அவருடைய உரு எப்படி இருக்கும்?

ஆதாமும் ஏவாளும் உடலளவில் வேறுபட்டவர்கள்.

ஆன்மா அளவில் ஒன்றுபோல் உள்ளவர்கள்.

இருவருடைய ஆன்மாக்களும் ஆவி.

அவர்களுடைய ஆன்மாக்கள் கடவுளுடைய உருவைப் (Image) பெற்றுள்ளன.

கடவுள் அன்பு, இரக்கம், நீதி, சுதந்திரம் போன்ற பண்புகளையும் அவர்களுடைய ஆன்மாக்களோடு பகிர்ந்து கொண்டார்.

ஆகவே அவர்கள் கடவுளின் உருவை, அதாவது, சாயலைப் பெற்றிருந்தார்கள்.

இருவருடைய ஆன்மாக்களும், இருவருடைய உடல்களும் சேர்ந்து ஒரு குடும்பம்.

இருவரும் சேர்ந்து ஒரு குடும்பம் என்ற அமைப்பு ஏதோ ஒரு வகையில் கடவுளை ஒத்திருக்கிறது.

எந்த வகையில்?

"மூன்று ஆட்கள், ஒரு கடவுள்."

"இரண்டு ஆட்கள், ஒரு குடும்பம்."

ஆணிலிருந்து எடுக்கப்பட்டதுதான் பெண்ணின் உடல்.

ஆக, ஈருடல் = ஓருடல் 

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர்." இவையும் இயேசுவின் வார்த்தைகள்தான்.

"ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

"கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; "

என்ற ஆதியாகம வசனங்களையும்

"இருவரும் ஒரே உடலாய் இருப்பர்"

என்ற இயேசுவின் வசனத்தையும் பொருத்திப் பாருங்கள்.

மனித குடும்பத்தில் பரிசுத்த தம திரித்துவத்தின் சாயல் இருப்பது புரியும்.

மனுக்குலத்தில் கடவுளின் சாயல் இருப்பதால் அது கடவுளுக்குச் சொந்தம் என்பதும், அது கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதும் புரியும்.

இப்போது ஆரம்ப வசனத்துக்கு வருவோம்.

"மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."

கடவுள் முதல் கணவன் மனைவியின் உடலை அவர் ஏற்கனவே படைத்திருந்த மண்ணிலிருந்து உண்டாக்கி விட்டு ஆன்மாவை நேரடியாகப் படைத்து உடலோடு சேர்த்தார்.

இப்போது மனித உடலை உண்டாக்கும் பொறுப்பை மனிதனிடமே விட்டு விட்டார்.

ஆன்மாவை மட்டும் அவர் படைக்கிறார்.

உடலை உண்டாக்கும் பொறுப்பை திருமணமான தம்பதியரிடம் விட்டிருக்கிறார்.

தம்பதியர் படைப்புத் தொழிலை இறைவனோடு சேர்ந்து செய்வதால் அவர்களது குடும்பம் இறைவனின் சாயலைப் பெற்றிருக்கிறது.

இறைவன் சுயமாகச் செயல்படுவது போல அவர்களும் சுயமாகச் செயல்பட வேண்டும். 

ஆகவே தங்கள் தாய் தந்தையரை விட்டுவிட்டுத் தனியாக ஒன்றித்திருக்க வேண்டும்.

இனப் பெருக்க விசயத்தில் இறைவனின் சாயலைப் பெற்றிருப்பதால் அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.

அவர்களுடைய பெற்றோர் அவர்களுடைய உரிமைகளில் குறிக்கிடும் போதுதான் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கணவன் மனைவியைத் தன் உடலாகவும், மனைவி கணவனைத் தன் உடலாகவும் கருதி வாழ வேண்டும்.

இருவரும் ஒருவர், ஒருவருக்குள் ஒளிவு மறைவு இருக்க முடியாது.

நம்மை நாமே திருத்திக் கொள்வது போல இருவரும் தங்கள் குறைகளைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும், ‌குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களின் சொல் கேட்டு அல்ல.

அவர்கள் வயிற்றில் குழந்தை உற்பவித்தாலும் அது கடவுளுடைய குழந்தை.

அதை அழிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.

உற்பவிக்கும் குழந்தை கடவுளின் உருவைப் பெற்றிருப்பதால் அது அவருக்கே முற்றிலும் சொந்தம்.

கணவனையும் மனைவியையும் ஓரே குடும்பமாக இணைத்திருப்பது கடவுள்,

அதைப் பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்களே ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக முடியாது.

கடவுளின் சாயலுக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும்.

இதை உணர்ந்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment