Sunday, August 25, 2024

" வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்." (மத்தேயு.23:27)

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்."
(மத்தேயு.23:27)

இயேசு மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும்‌ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பிடுகிறார்.

கல்லறைகளின் உட்பகுதியில் அங்கு அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் கிடக்கும்.

ஆனால் வெளிப்புறம் வெள்ளையடிக்கப்பட்டு அழகாக இருக்கும்.

புறம் அழகு,  
அகம் அருவெறுப்பு.

அன்று வாழ்ந்த மறைநூல் அறிஞர்களைப் போலவும், ‌பரிசேயர்களைப் போலவும் இன்றும் வேடதாரிகள் வாழ்கிறார்கள்.

இவர்களுடைய 
அக வாழ்க்கைக்கும், 
புற வாழ்க்கைக்கும்
சம்பந்தமே இருக்காது.

 புறத்தில் பரிசுத்தவான்களைப் போல் நடமாடுவார்கள்.

அகம் பாவச் சிந்தனைகளால் நிறைந்திருக்கும்.

புறத்தில் பக்திமான்களைப் போல கோவிலுக்குப் போவார்கள், செபம் சொல்வார்கள், 

ஆனால் அகத்தில் ஆன்மீக வாழ்வே இருக்காது. உலக ஆசைகள் நிறைந்திருக்கும்.

புறத்தில் மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அத்தனை குறைகளும் அவர்கள் அகத்தில் செழித்து வளரும்.

புறத்தில் அனைவரையும் விட ஆன்மீகத்தில் வளர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வார்கள்.

அகத்தில் ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டார்கள்.

புறத்தில் செபமாலை மணிகளை உருட்டிக் கொண்டிருப்பார்கள்.

அகத்தில் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

புறத்தில் பைபிளும் கையுமாகச் சுற்றுவார்கள்.

அகத்தில் ஒரு வசனங்கூட பதிந்திருக்காது.

புறத்தில் எல்லா விசுவாச சத்தியங்களையும் பாராமல் சொல்வார்கள்.

அகத்தில் ஒரு விசுவாச சத்தியத்துக்குக் கூட விளக்கம் தெரியாது.

புறத்தில் மற்றவர்களின் ஆன்மீகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

அகத்தில் சுய ஆன்மீகப் பரிசோதனை செய்ய மாட்டார்கள்.

புறத்தில் தாழ்ச்சி உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.

அகத்தில் அகங்காரம் தலை விரித்து ஆடும்.

புறத்தில் வாழ்க்கைத் தத்துவங்களை மணிக் கணக்காய்ப் பேசுவார்கள்.

அகத்தில் முரண்பாடுகள் நிறைந்திருக்கும்.

புறத்தில் ஆன்மீகவாதிகள்.
அகத்தில் அரசியல்வாதிகள்.

அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும்,  நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமே இருக்காது.

புறத்தில் இருக்கும் இடத்திற்கு ஏற்ப வேசம் போடுவார்கள், பச்சோந்தியைப் போல.

அகத்தில் அவர்களாகவே இருப்பார்கள்.

புறத்தில் ஊருக்காக உழைப்பார்கள்.

அகத்தில் அகப்பட்டதைச் சுருட்டுவார்கள்.

யூதாசைப் போல புறத்தில் ஆண்டவரை வரவேற்பார்கள்.

அகத்தில் சாத்தானை வரவேற்பார்கள்.

சாவான பாவத்தோடு நற்கருணை வாங்குபவர்கள் இத்தகையோர்.

(அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். அரு.13:27)

வெளிவேடக்கார மறைநூல் அறிஞர்களைப் போலவும், பரிசேயர்களைப் போலவும் நாம் வாழக்கூடாது.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உத்தமர்களாக வாழ வேண்டும்.

நல்லதைச் சிந்தித்து, நல்லதைப் பேசி,
நல்லவர்களாக வாழ வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்முள் வாழும் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

உள்ளும் புறமும் பரிசுத்தர்களாக வாழ வேண்டும்.

சொல்லால் மட்டுமல்ல, நமது வாழ்க்கையாலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்று போல் இருக்க வேண்டும்.

லூர்து செல்வம் 

No comments:

Post a Comment