Wednesday, August 7, 2024

சிலுவையடியில் தியானம்.

சிலுவையடியில் தியானம்.

கல்வாரி மலை உச்சி.

மூன்று சிலுவைகள்.

நடுச் சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்கிறோம்.

நம்முடன்  இயேசுவின் தாயும்,

 தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், 

மகதலா மரியாவும் நின்று கொண்டிருக்கிறார்கள். 

சிலுவையில் இயேசு மூன்று ஆணிகளால் அறையப்பட்டு,

தாங்க முடியாத வேதனையுடன் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

நாம் வாழும் உலகையும்,

வானிலுள்ள சூரிய நட்சத்திரக் குடும்பங்களையும்

"உண்டாகுக" என்ற ஒற்றை வார்த்தையால் படைத்துப் பராமரித்து வரும் திரி ஏக தேவனின் ஒரே மகன்

அவரால் படைக்கப்பட்ட மனிதர்களாலேயே

அவமானப் படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு

தன் உடலே மூன்று ஆணிகளால் தாங்கப்பட்டுத் தொங்கிக்
கொண்டிருக்கிறார்!

அதுவும் கள்வர்கள் மத்தியில்!

வலியே அறிய முடியாத இறைமகன் ஏன் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே மனுமகனாகப் பிறந்தார்?

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள் ஏன் பிறப்புக்கும் இறப்புக்கும்,  

அதுவும் சிலுவையில் இறப்புக்கும்,  உட்பட்ட மனிதனாகப் பிறந்தார்?

அன்பினால், அளவு கடந்த அன்பினால்.

அன்பு செய்வதற்கென்றே நம்மைப் படைத்த கடவுள்

தனது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதற்கென்றே மனிதனாகப் பிறந்தவரை

 நாமே நமது பாவங்களால் சிலுவை அறைந்துவிட்டு

 அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவரது முகத்தில் வேதனையால் ஏற்படும் உணர்ச்சி தெரியவில்லை,

மாறாக நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த இரக்கம் தெரிகிறது,

பரிவு தெரிகிறது.

இதோ அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்கிறார்.

"பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்."

நாம் பாவம் என்று அறிந்து தான் பாவம் செய்தோம்.

ஆனால் இயேசு தனது தந்தையிடம் எப்படிப் புரிந்து பேசுகிறார் பாருங்கள்!

நமது வீட்டில் நாம் ஏதாவது தப்பு செய்யும் போது அப்பாவிடம் அம்மா பரிந்து பேசுவது போல,

"நாம பெத்த பிள்ளைதானே! மன்னித்து விடுங்கள். இனிமேல் செய்ய மாட்டான்."

இதைப் போல நம்மை மன்னிக்கும்படி தந்தையிடம் பரிந்து பேசுகிறார்.

இதைவிட இரக்கம் நிறைந்த ஒரு சகோதரரை எங்காவது பார்க்க முடியுமா?

இவ்வளவு இரக்கம் நிறைந்த இயேசுவுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?

கொஞ்சம் கவனியுங்கள்.

வலது பக்கத்தில் சிலுவையில் தொங்கும் கள்ளன் இயேசுவிடம் ஏதோ சொல்கிறான்.

 "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்." 

அந்தக் கள்ளன் மனம் திரும்பி இயேசுவை‌ மீட்பராக ஏற்றுக் கொண்டு இவ்வாறு கூறுகிறான்.

இயேசு மறுமொழியாக,

 "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்று சொல்கிறார். 

எவ்வளவு இரக்கம் பாருங்கள்!

வாழ்நாள் முழுவதும் திருடியே வாழ்ந்தவனை இயேசு ஒரு வினாடியில் மன்னித்ததோடு 

அவனையும் அவரோடு விண்ணக வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறார்!

நாம் எவ்வளவு காலம் பாவ வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்திருந்திலும்,

நாம் மன்னிப்புப் கேட்டவுடன்

 இயேசுவின் அளவு கடந்த இரக்கத்தின் முன் அது ஒன்றுமில்லாதது ஆகிவிடும்.


இதோ இயேசு நம்மை நோக்கிப் பார்க்கிறார்.

நம்மோடு நின்று கொண்டிருக்கும் அவரது தாயையும், சீடராகிய அருளப்பரையும் பார்க்கிறார்.


 தம்முடைய தாயை நோக்கி, அருளப்பரைக் காண்பித்து  : "பெண்ணே, அதோ, உன் மகன்" என்று கூறுகிறார். 

பின்பு அருளப்பரை நோக்கி: "அதோ, உன் தாய்" என்று கூறுகிறார். 

ஏன் தன் தாயை "அம்மா" என்று அழைக்காமல்‌, "பெண்ணே" என்று அழைக்கிறார்?

சிலுவையில் தொங்கி  நமது பாவத்துக்குப் பரிகாரம் செய்வதில்,

அன்னை மரியாளுக்கு இருக்கும் பங்கை நமக்கு நினைவு படுத்துவதற்காகத்தான்.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

 அவள் உன் தலையை நசுக்குவாள்."

இந்த வசனத்தில் வரும் பெண் அன்னை மரியாள்.

அவளுடைய வித்து இயேசு.

அவளுடைய வித்து தான் நம்மை மீட்பதற்காகச் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

அன்னை மரியாள் இரண்டாம் ஏவாள் என்பதை நமக்கு நினைவு 
படுத்தவே தாயைப் "பெண்ணே" என்று அழைக்கிறார்.

அது மட்டுமல்ல, சாத்தானின் தலையை நசுக்கிய பெண்ணை அருளப்பர் மூலமாக நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

ஆகவே மகன் தரும் மீட்பைத் தாயின் பரிந்துரை மூலம் நாம் பெறலாம்.

இயேசுவின் தாயாகிய மரியாள் அவர் நிறுவிய திருச்சபைக்கும் தாய்.

ஏனெனில் திருச்சபை அவரது ஞான உடல்.

மரியாள் தேவையில்லை என்பவர்களுக்கு இந்த வசனம் ஒரு சவுக்கடி.

மரியாள் தேவையில்லை என்று சொல்பவர்கள் இயேசு நிறுவிய திருச்சபையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

மணி மூன்று ஆகிறது.

இயேசு கூறுவதைக் கவனியுங்கள்.

 "ஏலி, ஏலி லெமா சபக்தானி?"

 அதாவது, 

"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" 

இயேசு இறைவன் என்பது நமக்குத் தெரியும்.

அவரே அவரைக் கைவிட மாட்டார் என்பதும் நமக்குத் தெரியும்.

ஏன் "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" 

என்று கூறுகிறார்?

கொஞ்சம் தியானித்தால் உண்மை புரியும்.

இயேசு நாம் செய்கிற அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்யவே பாடுகள் பட்டார்.

தேவ சுபாவத்தில் பரிகார வேதனையை அனுபவிக்க முடியாது.

அதற்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டார்.

என்னென்ன பலகீனங்களின் காரணமாக என்னென்ன பாவங்களைச் செய்வோமோ அந்தந்த பலகீனங்களை அவர் ஏற்றுக் கொண்டார்.

பயம் என்ற‌ பலகீனத்தின் காரணமாக கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்தார்.

அது இறைவன் சித்தத்தை நிறைவேற்றாமை என்னும் பாவத்துக்குப் பரிகாரமாக.

இந்த வசனம் எந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக?

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment