ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன்
முதல் நான்கு நாட்களில் சூரிய சந்திர நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு,
ஐந்தாம் நாளில் உலகில் நீர்வாழ் உயிரினங்களையும், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளையும் படைத்தார்.
ஆறாம் நாளில் நிலத்தில் வாழும் உயிர்ப் பிராணிகளைப் படைத்துவிட்டு
இறுதியாக மனிதனைப் படைத்தார்.
மனிதனைத் தன் உருவிலும், சாயலிலும் படைத்தார்.
மிருகங்களுக்கு உடலும் உயிரும் மட்டும் இருந்தது.
மனிதனை ஆன்மாவோடு படைத்தார்.
உடல் மற்ற மிருகங்களின் உடலைப் போல மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.
மண்ணிலுள்ள
ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், கால்சியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம், சோடியம், குளோரின், மக்னீசியம்
ஆகியவற்றால் ஆனதுதான் நமது உடல்.
(Oxygen, hydrogen, nitrogen, carbon, calcium, and phosphorus. Another five elements make up about 0.85% of the remaining mass: sulfur, potassium, sodium, chlorine, and magnesium)
மண்ணில் உள்ள இப் பொருள்களைச் சாப்பிட்டு தான் தாவரம் வளர்கிறது.
தாவரத்தை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இந்தப் பொருள்கள் சேர்கின்றன.
தாவரம் எப்படி மண்ணில் புதைந்தால் மக்கி மண்ணோடு மண்ணாகி விடுமோ
அப்படியே நமது உடலும் ஒரு நாள் மண்ணுக்குத் திரும்பி மண்ணோடு மண்ணாகி விடும்.
உலகமே இப்பொருட்களால் ஆனது தான்.
அவற்றின் மொத்த அளவு கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது.
மனித இனம் தோன்றி இந்நாள் வரை வாழ்ந்த கோடானு கோடி மனிதர்களின் உடல்கள் பூமிக்குள் தான் மண்ணோடு மண்ணாக இருக்கின்றன.
உலகம் அப்படியே இருக்கிறது.
மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடலோடு தன்னைப் போல் ஆவியான ஆன்மாவைப் படைத்துச் சேர்த்தார்.
ஆன்மாவும், உடலும் சேர்ந்தவன்தான் மனிதன்.
கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.
நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கும் நமது ஆன்மாவுடன் தனது பண்புகளாகிய
அன்பு,
இரக்கம்,
நீதி,
சிந்தனை, செயல் சுதந்திரம்
ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
ஆகவே நாம் இறைவனின் சாயலைப் பெற்றிருக்கிறோம்.
ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.
கடவுள் தனது பண்புகளில் அளவில்லாதவர்,
நாம் அளவுள்ளவர்கள்.
கடவுள் பண்புகளால் ஆனவர்,
நாம் பண்புகள் உள்ளவர்கள்.
கடவுள் அன்பு மயமானவர்,
நாம் அன்பு உள்ளவர்கள்.
கடவுளிடம் எதிர் எதிர்ப் பண்புகள் இருக்க முடியாது.
நாம் பாவம் செய்யும்போது
கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்பிலிருந்து மாறுபடுகிறோம்.
பரிசுத்த நிலையில் நம்மிடம் இறையன்பு இருக்கிறது.
சாவான பாவம் செய்பவர்கள் இறையன்பை இழந்து விடுகிறார்கள்,
அதாவது,
இறைவனின் சாயலை இழந்து விடுகிறார்கள்.
கடவுள் எதற்காக நம்மை அவரது சாயலில் படைத்தார்?
எந்த பண்புகளை நம்மோடு பகிர்ந்துள்ளாரோ அந்த பண்புகளால் வாழ வேண்டும்.
அந்த பண்புகளால் கடவுளைப் போல் வாழ வேண்டும்.
தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போய்ப் பார்க்க வேண்டாம் என்ற ஒரு தமிழ் சொல்லாடல் உண்டு.
மகனுக்கு பெண் பார்க்க வருகின்றவர்கள் வீட்டிற்குப் போகாமல் தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்து விட்டுப் போய் விடுவார்களாம், தாயைப் போல பிள்ளை என்ற உண்மையின் அடிப்படையில்.
நாம் கடவுளைப் போல் அன்பாகவும், இரக்கத்துடனும், நீதியோடும் வாழ்ந்தால்
நம்மைப் பார்ப்பவர்களுக்கு,
நமது முன்மாதிரிகை காரணமாக
கடவுள் மீது நம்பிக்கை ஏற்படும்.
இதற்குப் பெயர் தான் வாழ்ந்து நற்செய்தி அறிவித்தல்.
கடவுள் அனைவரையும் நேசிக்கிறார்.
நல்லவர் கெட்டவர் என்று பார்க்காமல் அனைவரையும் பராமரித்து வருகிறார்.
நாமும் சாதி, சமய, இன, குண வேறுபாடின்றி அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்,
வார்த்தையால் அன்பு செய்வதோடு,
செயலிலும் அனைவருக்கும் நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.
தன்னை நம்பாதவர்களையும் கூட கடவுள் நேசித்துப் பராமரிக்கிறார்.
ஏனெனில் அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
நெருப்பினால் தொட்டதைச் சுடாமல் இருக்க முடியாது.
தண்ணீரினால் பட்டதை நனைக்காமல் இருக்க முடியாது.
அப்படியே கடவுளால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
உறவினர்களாக இருந்தாலும்,
முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும்,
நமக்கு உதவியவர்களாக இருந்தாலும்,
உபத்திரவம் கொடுப்பவர்களாக
இருந்தாலும்,
அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.
கடவுள் இயேசு பாவிகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தது போல
நம்மைப் பகைப்பவர்களுக்காகவும் நாம் நமது உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான இறையன்பு.
இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட தன் சாயலுக்குப் பழுது ஏற்படாமல் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment