(மத்தேயு.19:24)
"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது" என்பது யூத மக்கள் பேசிய மொழியின் ஒரு சொல்லாடல்.
"நடப்பது மிகவும் கடினம்" என்பதைக் குறிக்க இதைப் பயன்படுத்துவார்கள்.
தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு,
"கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை."
கூழ் குடிக்க ஆசைப்படுகிறவன் மீசைக்கு ஆசைப்படக்கூடாது.
மீசை வைக்க ஆசைப்படுகிறவன் கூழ் குடிக்க ஆசைப்படக்கூடாது.
ஏன்?
கூழ் மீசையில் ஒட்டும்.
இது மீசைக்கு ஆசைப்படுவோர் கொடுக்கும் பதில்.
யூதச் சொல்லாடலை தமிழ்ப் படுத்தினால்,
"செல்வத்துக்கும் ஆசை, இறையாட்சிக்கும் ஆசை."
செல்வப்பற்று உள்ளவர்களுக்கு இறைப்பற்று இருக்காது, இருக்க முடியாது.
இறைப் பற்று உள்ளவர்களுக்கு செல்வப் பற்று இருக்காது, இருக்க முடியாது.
நமது உள்ளத்தில் ஒரு பற்றுக்குதான் இடம்.
இறைப்பற்று இருந்தால் செல்வப்பற்று உள்ளே வராது.
செல்வப் பற்று இருந்தால் இறைப்பற்று உள்ளே வராது.
இறைப்பற்றும், செல்வப் பற்றும் சேர்ந்து குடியிருக்க முடியாது.
அப்படியானால் இறையரசுக்குள் நுழைய விரும்புகிறவர்களிடம் பணம், வீடு, உடை, நிலம் உள்ளிட்ட சொத்துக்களே இருக்கக் கூடாதா?
இருக்கக் கூடாதது பற்று.
செல்வம், இறைவன் இரண்டில்
ஒருவர்மேல் தான் பற்று இருக்க முடியும், இருவர் மேலும் இருக்க முடியாது.
எப்படி ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியாதோ அதேபோல செல்வப் பற்று உடையவன் இறைவனை அடைய முடியாது.
உலகில் தான் பிறந்தோம்,
உலகில் தான் வாழ்கிறோம்.
ஆனால் உலகின் மீது பற்று இல்லாமல் வாழ வேண்டும்.
எதிர் பாராமல் மரணம் வருகிறது.
மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனிடம் உலகப் பற்று இல்லை.
மரணத்துக்குத் தப்பிக்க விரும்புகிறவனிடம் உலகப் பற்று இருக்கிறது.
இறைப்பற்று மட்டும் இருந்தால் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பான்.
புகைவண்டியில் தென்காசிக்கு டிக்கெட் எடுத்திருப்பவன் தென்காசி வந்தவுடன் இறங்குவானா அல்லது புகைவண்டியிலேயே தொடர்ந்து இருக்க விரும்புவானா?
இரயில் பற்று உள்ளவனால் ஊருக்கு ஒரு நாளும் போக முடியாது.
துறவிகள் கொடுக்கும் வார்த்தைப்பாடுகளில் முதன்மையானது தரித்திர (Poverty)வார்த்தைப்பாடு.
இந்த வார்த்தைப்பாடு கொடுப்பவர்கள் உலகப் பொருட்கள் மீது பற்றோ, உரிமையோ கொண்டாட முடியாது.
அவற்றை உலகில் வாழப் பயன் படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.
அவர்கள் பயன்படுத்தும் பேனாகூட அவர்களுக்கு உரியது அல்ல.
ஒரு மடத்தில் Superior பதவி வகிப்பவர் சமையல் உதவியாளராக மாற்றப் படலாம்.
பணிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உலகையே படைத்த இறைமகன் மனுமகனாகப் பிறந்த போது தலை சாய்க்க சொந்த இடமில்லாமல்தான் வாழ்ந்து வந்தார்.
பிறந்தது யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவம்.
படுக்கை மாட்டின் தீவனத் தொட்டி.
மரித்தது குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை.
அடக்கம் செய்யப்பட்டது வேறு யாருக்காகவோ வெட்டப்பட்ட கல்லறை.
அவர் அணிந்திருந்த உடை மீது கூட அவர் பற்று வைக்கவில்லை.
அதை அவருடைய உடலிலிருந்து உரியும்போது அவர் அதைத் தடுக்கவில்லை.
உரிந்தவர்களே தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டு எடுத்துக் கொண்டார்கள்.
அன்னை மரியாள் பின்னி மகனுக்குப் போட்ட ஆடை அவர் வளர வளர அவரோடு வளர்ந்தது.
தன்னிடம் இருந்த கடைசிப் பொருளாகிய ஆடையையும் அவரைப் பகைத்தவர்களுக்கு கொடுத்து விட்டுதான் மரித்தார்.
அவர் அவர்களை நேசித்தார், அதனால்தான் மன்னித்தார்.
உடுத்தியிருந்த உடைமீது கூட பற்றில்லாமல் வாழ்ந்தவர் இயேசு.
நாம் அவருடைய சீடர்கள்.
நாமும் உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாதவர்களாக வாழ்ந்தால்தான் இயேசுவின் சீடர்கள் என்ற பெயருக்குப் பொருத்தமானவர்கள்.
என்னுடைய உயர்நிலைப்பள்ளிக் காலத்தில்
(St. Mary's, Madurai. 1952-1955)
எங்களுடைய தமிழாசிரியர் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது.
"இரைப் பற்று இல்லாதவனிடம் தான் இறைப் பற்று இருக்கும்."
உண்மை.
இரைக்காக மட்டும் உழைப்பவன்
இறைக்காக உழைக்க மாட்டான்.
உண்பது வாழ்வதற்கு,
வாழ்வது உண்பதற்காக அல்ல.
வாழ்வது இறைவனுக்காக மட்டுமே.
இறைவன் மீது மட்டும் பற்று உள்ளவர்களாக வாழ்வோம்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" (குறள்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment