Monday, August 19, 2024

" கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்."(மத்தேயு.20:12)

"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்."
(மத்தேயு.20:12)

இறைப்பணி ஆற்றி மரிப்பவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

எல்லோரும் ஒரே மாதிரியாக இறைப்பணி ஆற்றுவதில்லை.

சிலர் பிறப்பு முதல் இறப்பு வரை இறைப்பணி ஆற்றுகிறார்கள்.

வாலிபப் பருவம் வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி இறைப்பணி ஆற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

முதிய வயது வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி இறைப்பணி ஆற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்வின் இறுதிக் கட்டம் வரை இஷ்டப்படி வாழ்ந்து விட்டு அதன்பின் மனம் திரும்பி, இறைப்பணி ஆற்ற நேரம் இல்லாமல் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட அனைவருக்குமே விண்ணக வாழ்வு கிடைக்கிறது.

வாழ்நாள் முழுவதும் இறைவனுக்காக அர்ப்பண வாழ்வு வாழ்ந்து விட்டு மரித்த அன்னை மரியாள்  வாழ்கின்ற அதே மோட்சத்தில்தான்

வாழ்நாள் முழுவதும் திருடியே வாழ்ந்துவிட்டு இறுதி வினாடியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனும் வாழ்கிறான்.

The good thief thieved heaven itself at the last moment.

நல்ல கள்ளன் இறுதிக் கட்டத்தில் மோட்சத்தையே திருடிவிட்டான் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள்.

முப்பது வயது வரை பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு அதன் பின் மனம் திரும்பிய புனித அகுஸ்தீனார் இன்று
 Doctor of the church.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பொறுப்பேற்று 
அவரைச் சிலுவையில் அறைந்ததுமல்லாமல் அவரது விலாவை ஈட்டியால் குத்திய நூற்றுவர் தலைவர் லோன்சினுஸ் இன்று திருச்சபையில் புனிதர்.
(Saint Longinus)

கிறிஸ்தவத்தை அழிப்பதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட சவுல் 
இன்று திருச்சபையின் இரண்டு தூண்களில் ஒருவர்.
(St. Peter and St. Paul are  the pillars of the Church.)

வாழ்நாளெல்லாம் பாவிகளாக வாழ்ந்து விட்டு பரிசுத்தர்களாக மரித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வாழ்நாளெல்லாம் புனித வாழ்வு வாழ்ந்து விட்டு மோட்சத்திற்குச் சென்றிருப்பவர்களோடு

வாழ்நாளின் பெரும் பகுதியை இறைவனுக்கு எதிராக வாழ்ந்து விட்டு மனம் திரும்பியவர்களும்  சென்றிருப்பது எதைக் காட்டுகிறது?

இறைவனின் அளவு கடந்த அன்பையும், தாராள குணத்தையும் காட்டுகிறது.

இறைவன் பாவிகளை அதிகம் நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் உவமையில் நாள் முழுவதும் வேலை செய்தவர்கள்

"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" 

என்று கேட்டபோது தோட்ட உரிமையாளர் 

 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 

எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார். "

இறைவன் நல்லவர். அளவில்லாத வரங்களுக்கு உரிமையாளர்.

தாராள குணமுள்ளவர்.

தனது வரங்களை அள்ளிக் கொடுப்பதற்காகவே நம்மைப் படைத்தவர்.

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கையில் வெகு மந்தமான மாணவனின் விடைத்தாள் வந்தால் அவனை எப்படியாவது வெற்றி பெற வைப்பதற்காக மாற்குப் போட பேப்பரின் மூலைமுடுக்கெல்லாம் தேடுவார்.

தவறான விடையாக இருந்தாலும் சரியான விடை அருகில் வந்தாலும் மாற்குப் போட்டு விடுவார்.

ஒரு பையன் பாஸ் செய்ய ஒரு மாற்கு தேவை.

எங்காவது இடம் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறார்.

"இந்தியா 1947 ஆகஸ்டு 14ல் சுதந்திரம் பெற்றது"

அதற்குத் X போட்டிருந்தார்

தப்பை அடித்து ✓ போட்டார்.

பையன் வெற்றி.

Chief எப்படிப் போடலாம் என்று கேட்டபோது,

"சார், நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் கிடைத்தது.

14ஆம் தேதி முடியும் நேரமும் 15ஆம்  தேதி ஆரம்பிக்கும் நேரமும் ஒரே நேரம் தானே!" என்றார்.

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மனம் திருப்ப ஒவ்வொரு வினாடியும் தனது அருளைத் தொடர்ந்து பொழிந்து கொண்டேயிருப்பார்.

பாவங்களுக்கு மனஸ்தாபப் பட்ட வினாடியில் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவார்.

மனஸ்தாபப்பட அரை வினாடி போதும்.

அந்த அரை வினாடியில் மரித்தால் மோட்சம் உறுதி.

யூதாஸ் அப்படித்தான் மோட்சத்திற்குச் சென்றிருப்பான்.

நம் ஒவ்வொருவருக்காகவும் தனது 33 ஆண்டு கால வாழ்வையும் அர்ப்பணித்தவர் இயேசு.

வாழ்வின் பெரும்பகுதியை வீணடித்து விட்டோமே என்று நம்பிக்கையை கைவிட்டு விட வேண்டாம்.

மீதி இருப்பதைப் பயன் படுத்தினாலே விண்ணகம் செல்ல முடியும்.

வாழ் நாளெல்லாம் பாவத்தில் வாழ்ந்து விட்டோமே, மரணம் நெருங்கி விட்டதே என்று அதைரியப்பட வேண்டாம்,

மரண நேரத்தில் மனம் திரும்பினாலும் விண்ணகம் சென்று விடலாம்.

இறைவன் ஒவ்வொரு வினாடியும் நமது முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நாம் அவர் முகத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

நம்மை அள்ளி அணைத்துக்  கொள்வார் விண்ணகம் அழைத்துச் செல்ல.

போனது போகட்டும்,

இருப்பதை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment