Thursday, August 22, 2024

" உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."(மத்தேயு.22:39)

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."
(மத்தேயு.22:39)


 " திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?"

 என்ற திருச்சட்ட அறிஞர் ஒருவரின் கேள்விக்குப் பதிலாக இயேசு 

 "உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."

இரண்டு வசனங்களையும் நான்கு கூறுகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. கடவுளை நமது முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனத்தோடும் நேசிக்க வேண்டும்

"We should love  God with all our heart, and with all our soul and with all our mind.'"

2. நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

3.நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

4. பிறரன்பு இறையன்புக்கு இணையானது.

முதல் கட்டளையைத் தியானிக்கும்போது மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.

நமக்கு இருப்பது ஒரு இதயம், ஒரு ஆன்மா, ஒரு மனது.

இவற்றை எல்லாம் முழுமையாகக் கடவுளுக்குக் கொடுத்து விட்டால்,

நம்மை எப்படி நேசிப்பது, நம்மைப் போல் நமது பிறனை எப்படி நேசிப்பது?

நமது சிந்தனை எப்போதும் நேர்மறையாக (Positive) இருக்க வேண்டும். 

எதிர்மறையாக (Negative) இருக்கக் கூடாது.

இறைவன் சர்வ வியாபி.

படைக்கப்பட்டவை அனைத்தும் அவரது சிந்தனையில்.

குடத்திற்குள் தண்ணீர் இருக்கிறது.

குடம் பத்திரமாக இருந்தால் குடத்தோடு தண்ணீரும் பத்திரமாக இருக்கும்.

கடவுளை நேசிக்கும் போது அவருள் இருக்கும் மனுக்குலத்தையும் நேசிக்கிறோம்.

அதாவது கடவுளையும் அவரது படைப்பாகிய மனுக்குலத்தையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு.

அதனால் தான் பிறரன்புக் கட்டளையைத்‍‌ தனியாகக் கொடுக்கும் போது

அதை முதல் கட்டளைக்கு இணையான கட்டளை என்று கூறுகிறார்.

இயேசு கடவுளை நமது முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லும் போது 

கடவுளையும், மனுக்குலத்தையும் அன்பு செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறார்.

ஆகவே இறையன்பும் பிறரன்பும் பிரிக்க முடியாதவை.

 இரண்டாவது கட்டளை முதல் கட்டளைக்கு இணையானது.

கடவுளை நேசிக்காதவனால் அவனது பிறனை நேசிக்க முடியாது.

கடவுள் இல்லை என்று கூறுகிறவர்கள் மனிதத்தை நேசிக்கிறோம் என்று சொல்வது அடிப்படையில் பொய்.

ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்கிறது.

ஆனால் காந்தி படம் இருக்கும் நோட்டெல்லாம் ரூபாய் நோட்டல்ல. அரசு வெளியிடும் நோட்டுதான் ரூபாய் நோட்டு.

அதேபோல் இறையன்பிலிருந்து புறப்படும் பிறரன்புதான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறரன்பு.

அதுதான் இறைவன் முன் செல்லத் தக்கது.

அன்பு ஆன்மாவைச் சேர்ந்தது.
ஆன்மாவை நம்பாதவர்களால் அன்பு செய்ய முடியாது.

நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்திருக்கிறாரா?

கடவுள் நம்மைப் படைக்கும் போதே இயல்பிலேயே அன்பு உள்ளவர்களாகப் படைத்திருக்கிறார்.

நாம் நம்மை இயல்பாகவே நேசிக்கிறோம். அதனால் தான் வாழ விரும்புகிறோம்.

தன்னை நேசிப்பதால்தான் குழந்தை பிறந்தவுடன் மூச்சு விடவும், பால் குடிக்கவும் விரும்புகிறது.

நாம் வாழ விரும்புவது சுய அன்பு.

அதேபோல் மற்றவர்களும் நம்மைப் போல் வாழ விரும்புவது பிறரன்பு.

நமக்கு நாம் உணவு கொடுப்பது சுய அன்பு.

அதேபோல் மற்றவர்களுக்கும் நாம் உணவு கொடுப்பது பிறரன்பு.

நாம் மோட்சத்தில் இறைவனோடு வாழ ஆசைப் படுவது சுய அன்பு.

நம்மைப் போல் மற்றவர்களும் 
மோட்சத்தில் இறைவனோடு வாழ ஆசைப் படுவது பிறரன்பு.

நாம் மீட்புப் பெற நற்செய்தியை அறிய விரும்புவது சுய அன்பு.

மற்றவர்களும் மீட்புப் பெற அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரும்புவது பிறரன்பு.

இறையன்பு உள்ளவர்களிடம் சுய அன்பும் இருக்கும், பிறரன்பும் இருக்கும்.

ஆகவே நாம் இறைவனை நேசித்தால் நாமும் நற்செய்தியை வாசிப்போம்,

பிறருக்கும் நற்செய்தியை அறிவிப்போம்.

நாமும் நற்செய்தியை வாழ்வோம், மற்றவர்களும் வாழ உதவுவோம்.

ஆக, நாம் கடவுளை முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் நேசித்தால்

நம்மையும் நேசிப்போம், நமது பிறனையும் நேசிப்போம்.

அன்பு செய்வோம்.

அன்புக்கு பங்கம் ஏற்படாமல் விருப்பப்படி வாழ்வோம்.

“Love and do what you like”.
(St. Augustine)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment