"உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்."
(மத்தேயு.25:29)
இயேசு, செல்வந்தர் ஒருவர் தாலந்து கொடுத்த உவமையில் ஒரு தாலந்தைப் பெற்றவன் அதைக் கொண்டு எதுவும் ஈட்டாமல் அப்படியே திருப்பிக் கொடுத்ததைக் குறிப்பிடும்போது
"உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்."
என்று கூறினார்.
இறைவன் மனிதர்களைப் படைக்கும் போது ஒவ்வொருவரையும் ஏதாவது திறமைகளோடு படைக்கிறார்.
சிலருக்குப் பல திறமைகள் இருக்கலாம்.
சிலருக்குச் சில திறமைகள் இருக்கலாம்.
சிலருக்கு ஒரு திறமை இருக்கலாம்.
இருக்கிற திறமையை இறைப் பணியில் பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்துகிறவர்களுக்கு திறமைகள் அதிகமாகும்.
ஒருவருக்கு பாடும் திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தனது திறமையை இறைவனின் புகழ்பாட பயன்படுத்தினால் அவருக்கு இறைப் பண்கள் எழுதும் திறமை கொடுக்கப் படலாம்.
வேறு திறமைகளும் கொடுக்கப் படலாம்.
திறமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்.
இருக்கிற திறமையைப் பயன்படுத்தாதவருக்கு இருக்கிறதும் காணாமல் போகும்.
திறமைகளை மட்டுமல்ல, கிடைக்கும் வளங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்
நாம் பெற்றுள்ள எல்லா வரங்களும், திறமைகளும் கடவுளிடமிருந்து வந்தவை.
அவற்றை நாம் வெறும் சொத்தாக வைத்துக் கொள்ளாமல், அவற்றை வளர்த்து,
பிறருக்கு நன்மை செய்ய பயன்படுத்த வேண்டும்.
அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை மேலும் வளரும்.
விதை சிறியதாக இருக்கலாம். நாம் அதைப் நிலத்தில் ஊன்றி நீர் ஊற்றும்போது
ஒரு பெரிய மரமாக வளர்ந்து பலன் தரும்.
அதேபோல, நாம் நம் திறமைகளைப் பயன்படுத்தும் போது, அவை பெருகி, நமக்கு நிறைவான வாழ்க்கையைத் தரும்.
பயன்படுத்தாவிட்டால் இழப்பு ஏற்படும்.
ஒரு விவசாயி தனது நிலத்தை பயிரிடாமல் விட்டுவிட்டால், அது வீணாகிப்போகும்.
அதேபோல, நாம் நம் திறமைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால், அவையும் வீணாகிப்போகும்.
இதைப் பற்றி ஆன்மீக ரீதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது:
நாம் பெற்றுள்ள எல்லா வரங்களும் கடவுளிடமிருந்து வந்தவை.
நாம் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
நாம் அவற்றைப் பயன்படுத்தும் போது, நாமும் ஆன்மீகத்தில் வளர்வோம், யாருக்காக பயன்படுத்துகிறோமோ அவர்களும் ஆன்மீகத்தில் வளர்வார்கள்.
பிறரன்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்குதான் திறமைகள் பயன்படும்.
யாரோடும் கலந்து கொள்ளாமல் தனித்து வாழ்பவர்களுக்கு திறமைகளால் எந்தப் பயனும் இல்லை.
பேச்சாற்றல் உள்ளவர்கள் அதை இறைவனைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிக்கப் பயன்படுத்த வேண்டும்.
எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுத்து மூலம் இறைப்பணி ஆற்ற வேண்டும்.
அம்மா காய்கறிகளை Fridge க்குள்ளே பத்திரமாக வைத்திருந்தால் குடும்பத்தில் யாருக்கு வயிறு நிறையும்?
அம்மா அவற்றை அடுப்பாங்கரை வழியே சாப்பாட்டறைக்குக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தினர் பசி நீங்கும்.
நமது திறமைகளும் அப்படித்தான்.
அவை சமூகத்தில் ஆன்மீகப் பணிக்கு வரவேண்டும்.
அப்போது தான் திறமைகளும் வளரும், சமூகமும் பயன் பெறும்,
அவற்றை நமக்குத் தந்த இறைவனும் மகிழ்வார்.
இறைவன் தந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவோம்.
நமது வாழ்க்கையையும், பிறர் வாழ்க்கையையும் மேம்படுத்துவோம்.
நாம் பெற்றுள்ள வரங்களுக்கு கடவுளுக்கு நமது செயலால் நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment