உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
மன்னர் பல்லக்கில் போவதைப் பார்ப்பவர்களுக்கு
அவர்களும் மன்னரைப் போல பல்லக்கில் போக வேண்டும் என்ற ஆசை வருமா,
அல்லது
பல்லக்கைத் தூக்குபவர்களைப் போல பல்லக்கைத் தூக்க வேண்டும் என்ற ஆசை வருமா?
எப்போதும் நமது ஆசை உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)
மகனுக்கும், தூய ஆவிக்கும் மட்டுமே தந்தையைப் போல இருக்க முடியும்.
ஆனால் பாவிகளாகிய நம்மைப் பார்த்து இயேசு,
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்று சொல்கிறார்.
எந்த மனிதனுக்கும் கடவுளைப் போல் நிறைவு உள்ளவராக இருக்க முடியாது என்பது இயேசுவுக்குத் தெரியும்.
ஆனாலும் இயேசு நாம் இறை தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆன்மீக வாழ்வில் எப்போதுமே நமது நோக்கம் உயர்வு உள்ளதாக இருக்க வேண்டும்.
நாம் தாழ்ந்தவர்களாக இருக்கலாம்,
ஆனால் நமது நோக்கம் இறைவனை அடைவது.
Our position may be low, but our aim must be high.
உலகியலில் ஏற்ற, தாழ்வை அளப்பதற்கு அளவுகோல் இருக்கிறது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
8848 மீட்டர்.
ஆன்மீகத்தில் இப்படிப்பட்ட அளவுகோல் கிடையாது.
பரிசுத்தத் தனத்தில் அன்னை மரியாளின்உயரம் இவ்வளவு,
அந்தோனியாரின் உயரம் இவ்வளவு என்று கூற முடியாது.
" வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். ''
(லூக்கா நற்செய்தி 1:52)
இவ்வளவு தாழ்நிலையிலிருந்து
இவ்வளவு உயர்நிலைக்கு என்று அளந்து கூற முடியாது.
அப்படியானால் ஆன்மீகத்தில் தாழ் நிலை, உயர் நிலை என்று எப்படித் தீர்மானிப்பது?
இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவின் நெருக்கத்தின் அளவு தான் அதைத் தீர்மானிக்கும்.
ஆனால் உறவின் நெருக்கத்தை உணரத்தான் முடியும்,
அளந்து கூற முடியாது.
உணரும் படியாகக் முயற்சிக்கலாம்.
ஆன்மாவும் இறைவனும் ஒருவருள் ஒருவராக இணைந்து விட்டால் நெருக்கம் மிக அதிகம் என்று கூறலாம்.
" நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக."
(அரு.17:23)
அவர்களை மனித ஆன்மாவாக எடுத்துக் கொள்வோம்.
"தந்தையே, நீர் என்னுள் இருப்பதால் நாம் ஒருவர்.
நான் மனித ஆன்மாவுக்குள் இருக்கும் போது நாம் இருவரும் ஒருவராய் ஆன்மாவுக்குள் இருப்பதால்
மனித ஆன்மாவும் நாமும் ஒருவராய் ஒன்றித்து விடுவோம்."
பரிசுத்த தம திரித்துவம் நமது ஆன்மாவில் குடியேறுவது அவரது இயல்பு.
எந்த அளவுக்கு நமது ஆன்மா அவரோடு ஒன்றிக்கிறதோ அந்த அளவுக்கு கடவுளோடு நமது நெருக்கம் இருக்கும்.
தன் மகன் உடலில் பட்ட வேதனை மிகுந்த பாடுகளை எல்லாம் அன்னை மரியாள் அவளுடைய உள்ளத்தில் பட்டாள்.
அந்த அளவுக்கு அவளது ஆன்மா இயேசுவோடு ஒன்றித்திருந்தது.
இப்போது நமக்கு வருவோம்.
நம்மால் புனிதர்களாக வாழ முடியுமா?
நம்மால் என்ற வார்த்தை குறிப்பிடுவது தாழ் நிலையில் உள்ள சாதாரண மக்களாகிய நம்மை.
நமக்கு அன்னை மரியாள் மீது பக்தி இருக்கிறது.
அவளை நோக்கி செபிக்கிறோம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
அவளது திருத்தலங்களுக்குத் திருயாத்திரைகள் போகிறோம்.
தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும் என்ற நாமும் அன்னையைப் போல புனிதர்கள் ஆக முடியுமா?
கேள்வியைப் பார்த்தால் வினோதமாகத் தெரியும்.
குளத்துக்குத் தண்ணீர் குடிக்க வந்த பசுவைப் பார்த்த தவளை ஒன்று,
"நாமும் பசுவைப் போல ஆகலாமா?"
என்று கேட்பது போல் தோன்றும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
ஆனாலும் எப்படி மரியாள் இறைவனின் தாய் ஆவதற்கு முன்பே இறைவனின் பிள்ளையாகப் பிறந்தாளோ
அப்படியே நாமும் இறைவனின் பிள்ளைகளாகப் பிறந்தோம்.
இயேசுவே அவரது தந்தையை நாமும் தந்தை என்று அழைக்கச் சொல்லியிருக்கிறார்.
நாம் விண்ணகத் தந்தையின் சின்னப் பிள்ளைகளாக இருக்கலாம், ஆனால் செல்லப் பிள்ளைகள்.
ஏனெனில் நாம் பாவிகள்.
சுகம் இல்லாத பிள்ளையின் மீது தாய்க்குத் தனி அக்கறை இருக்கும்.
ஆகவேதான் பாவிகளாகிய நம் மீது கடவுளுக்கு தனி அக்கறை இருக்கிறது.
சுகம் இல்லாத குழந்தை தாயை அதிகம் தேடும்.
நாமும் அப்படியே செய்வோம்.
தந்தையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு தந்தையின் அன்புள்ள முகத்தையே பார்ப்போம்.
"அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்."
புனிதர்களாக முதல் படி கடவுளை நேசிப்பது தான்.
நேசிப்பதற்கு அன்னை மரியாளைப் போல பெரிய ஆளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல கள்ளனைப் போல இருந்தாலே போதும்.
புனித சவேரியாரைப் போல கடல் கடந்து பயணித்து வேத போதகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சிறு மலர் தெரெசா மடத்திலேயே இருந்தது போல உள்ளூரிலேயே இருந்தால் போதும்.
இறையன்புடன் நம்மால் இயன்ற சிறு சிறு நற்செயல்களைச் செய்தாலே புனிதர்கள் ஆகிவிடலாம்.
காலையில் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் எழுந்து மூச்சு விடுவது உட்பட அன்றைய செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
இதற்குப் பெயர்தான் இறைவனுக்காக இறைவனோடு வாழ்வது.
சாப்பிடுவது கூட நற்செயலாக மாறிவிடும்.
பாவப் பரிகாரமாகத் தவ முயற்சி செய்வது எப்படி?
ஆண்டவருக்காக அளவோடு சாப்பிடுவது கூட தவ முயற்சி தான்.
நான்கு மணிக்கு குடிக்க வேண்டிய காபியை ஆண்டவருக்காக நாலரை மணிக்குக் குடிப்பது கூட ஒரு தவ முயற்சிதான்.
திருப்பலியின் போது பராக்குப் பார்க்காமல் திருப்பலி நிறைவேற்றும் குருவானவரை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவ முயற்சி தான்.
பிரசங்கத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதே ஒரு தவ முயற்சி தான்.
உட்காருவது, எழுவது, நடப்பது போன்ற சிறு செயல்களை கூட கடவுளுக்கு பாவ பரிகாரமாக ஒப்புக் கொடுப்பது ஒரு தவ முயற்சி தான்.
நமது உடல் உட்பட அனைத்துப் பொருட்களிலும் கடவுளை காணும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால்
அவரை நேசிப்பதும், அவருக்கு நன்றி கூறுவதும் எளிது.
நமது கையைப் பார்க்கும் போது கூட "இறைவா இதைத் தந்த உமக்கு நன்றி" என்று கூறலாமே.
சாப்பிடும் போது சாப்பாட்டைத் தந்த இறைவனுக்கு நன்றி உணர்வோடு சாப்பிட வேண்டும்.
நம்மை நாம் நேசிப்பது போல நமது உடன் இருப்பவர்களையும் நேசிக்க வேண்டும்.
அவர்களுக்கு நம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்ய வேண்டும்.
அன்னை தெரசா அளவுக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும்,
நமது தின்பண்டத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடியாதா?
இதற்கு கூட விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கிறது.
'இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். "
(மத்தேயு நற்செய்தி 10:42)
ஆண்டவரையே நினைத்துக் கொண்டு வாழ்பவர்களால் சாவான பாவம் செய்ய முடியாது.
அற்பப் பாவங்களுக்காக கூட அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.
இறைவனையே நாவில் வாங்கும் உணர்வோடு திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
திவ்ய நற்கருணை உட்கொண்டபின் இயேசுவோடு உரையாட வேண்டும்.
அசிசியார், அந்தோனியார் போன்ற புனிதர்களைப் போல பெரிய காரியங்களைச் செய்து வாழ முடியாவிட்டாலும்,
நம்மால் இயன்ற சிறு சிறு செயல்களை ஆண்டவருக்காகச் செய்து வாழ்ந்தாலே நாம் புனிதர்கள் தான்.
நாம் சிறியவர்கள் தான்.
We are little ones.
நமது செயல்களும் சிறியவை தான்.
ஆனால் சிறு துளிகள் சேர்ந்தது தானே பெரிய கடல்!
But little drops of water make a mighty ocean.
குதிரை ஓடுகிறது.
நத்தை ஊர்ந்து செல்கிறது.
நத்தையால் குதிரை அளவுக்கு ஓட முடியாவிட்டாலும்,
அது ஊர்ந்து செல்லும் போதே இறைவன் சித்தப்படிதான் செயல்படுகிறது.
நாமும் அப்படியே செயல்படுவோம்.
புனிதத்துவம் அதில் தான் அடங்கியிருக்கிறது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment