Tuesday, August 6, 2024

நாம் ஏன் இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

நாம் ஏன் இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

கேள்வி ஒன்று, பதில்கள் பல.

பள்ளிக்கூட மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி,

நீ ஏன் தினமும் வீட்டுப் பாடம் படிக்கிறாய்?

கிடைத்த பதில்கள்:

1. படிக்க வேண்டியது என் கடமை.
2. எனது அறிவை அதிகரிக்க.
3. வீட்டுப் பாடம் படிக்காமல் பள்ளிக்குப் போனால் ஆசிரியர் அடிப்பார்.
4. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற.
5. வேறு வேலை இல்லை, ஆகவே படிக்கிறேன்.

இவற்றில் மிகவும் முக்கியமான பதில்கள் இரண்டு.

1. எனது அறிவை அதிகரிக்கப் படிக்கிறேன்.

2.வீட்டுப் பாடம் படிக்காமல் பள்ளிக்குப் போனால் ஆசிரியர் அடிப்பார். ஆகவே படிக்கிறேன்.

தனது அறிவை அதிகரிப்பதற்காகப் படிக்கிறவனின் அறிவு வளரும், அதோடு, எப்போதும் மகிழ்ச்சியுடனும், உற்சாகமாகவும் இருப்பான்.

ஆசிரியரின் அடிக்குப் பயந்து படிப்பவனின் அறிவு வளரும், ஆனால் மகிழ்ச்சி இருக்காது, பயம் மட்டும் தான் இருக்கும்.

நாம் ஏன் இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

 இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றார்கள்.

மனைவி கேட்டதைக் கேட்டவுடன் ஏன் கணவன் வாங்கிக் கொடுக்கிறவன்?

அவள் மீது கொண்ட அன்பின் காரணமாக.

அதுபோல ஆன்மீகத்தில் கடவுள் மீது உண்மையான அன்பு உள்ளவர்கள் அன்பின் காரணமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

அன்பின் அடிப்படையில் கீழ்ப்படிபவர்கள் ஒரு வகை.

கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு கடவுள் நித்திய பேரின்ப வாக்களித்திருக்கிறார்.

மோட்ச வாழ்வுக்காகக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள் இன்னொரு வகை.

கீழ்ப்படியாவிட்டால் பாவம்.
பாவ வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்தால் மோட்சத்தை இழக்க நேரிடும்.

அதற்குப் பயந்து இவர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

முதல் வகையினரின் ஆன்மீக வாழ்வை அன்பு இயக்குகிறது.

இரண்டாம் வகையினரின் ஆன்மீக வாழ்வை பயம் இயக்குகிறது.

இரண்டு வகையினரும் மோட்சத்திற்குச் செல்வது உறுதி.

அறிவுக்காகப் படிப்பவனும் தேர்வில் வெற்றி பெறுவான்.

அடிக்குப் பயந்து படிப்பவனும் தேர்வில் வெற்றி பெறுவான்.

ஆனாலும் அறிவுக்காகப் படிப்பவனது வாழ்க்கை 
அடிக்குப் பயந்து படிப்பவனுடைய வாழ்க்கையை விட சிறந்ததாக இருக்கும்.

ஆன்மீக வாழ்வின் செல்வம் இறையருள்.

பாவமின்றி வாழும் அனைவரின் வாழ்விலும் இனறயருள் இருக்கும்.

பயத்தின் அடிப்படையில் வாழ்பவனின் வாழ்க்கையை விட

அன்பின் அடிப்படையில் வாழ்பவனின் வாழ்க்கை அருள் செல்வம் மிகுந்ததாக இருக்கும்.

முழுக்க முழுக்க அன்பின் அடிப்படையில் வாழ்ந்த அன்னை மரியாளின் வாழ்க்கை அருளால் நிறைந்திருந்தது.

அவள் அளவுக்கு அருளைப் பெற்றவர்கள் உலகில் யாருமில்லை.

கடவுள் நமக்கு மோட்ச பேரின்ப வாழ்வைத் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை நேசிப்பவர்களின் அன்பை விட

கடவுளைக் கடவுள் என்பதற்காக 
நேசிப்பவர்களின் அன்பே சிறந்தது.

சிவாஜியின் நடிப்புக்காக மட்டும்,

(அவர் ஏதாவது தருவார் என்பதற்காக அல்ல)

 அவரை நேசிக்கிற இரசிகர்கள் இருக்கிறார்கள்.

இறைவனின் அன்புக்காக மட்டும்,

(அவர் நாம் கேட்டதைத் தருவார் என்பதற்காக அல்ல)

அவரை நேசிப்பவர்களே சிறந்த பக்தர்கள்.

நம்மைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமே.

இறைவனை இறைவன் என்பதற்க்காக வழிபட திருப்பலிக்குப் போகிறோமா?

அல்லது,

நமது கருத்துக்கள் நிறைவேறத் திருப்பலிக்குப் போகிறோமா?

"இறைவா, நான் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

வேலை கிடைத்துவிட்டால் வேளாங்கண்ணிக்கு வந்து மொட்டை போட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்."

இது போன்று செபித்திருக்கிறோமா?

விண்ணப்பிப்பது தப்பில்லை.

"கேளுங்கள்" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.

விண்ணப்பத்துக்கும் திருப்பலிக்கும் முடிச்சி போட வேண்டுமா?

விண்ணப்பம் நிறைவேறினாலும்,
நிறைவேறா விட்டாலும் திருப்பலியில் நன்றி சொல்லலாமே!

அவரை அறிந்து, 
அவரை நேசித்து,  
அவருக்கு சேவை செய்து, 
அதன் பயனாய் விண்ணகம் அடைய 
கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்.

கடவுளை அறிவதும், நேசிப்பதும், சேவை செய்வதும் மிக முக்கியம்.

இவற்றுக்காக வாழ்ந்து விட்டால் விண்ணகம் தானே வந்துவிடும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறைவனை அறிந்து, சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவருக்கு அன்பு செய்வது மட்டும்தான்.

மோட்ச வாழ்வு இறைவன் தரும் பரிசு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment