Friday, August 16, 2024

"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்."(மத்தேயு.19:14)

"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்."
(மத்தேயு.19:14)

இயேசு அனைவரையும் தான் அழைக்கிறார்.

ஏன் விசேசமாக 
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்." என்று கூறுகிறார்?

பெரியவர்களுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பெரியவர்கள் உலகுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

சிறு பிள்ளைகள் உலகுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

பல ஆண்டுகளுக்கும் சில ஆண்டுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் வித்தியாசம்.

சிறு பிள்ளைகளிடம் இருக்கும் அநேக குணங்கள் பெரியவர்களிடம் இல்லாமல் போனதுதான் வித்தியாசம்.

என்ன குணங்கள்?

குழந்தை பிறப்பதற்கு முன் பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருக்கிறது.

அங்கு அதற்கு சுயமாக எந்த அனுபவமும் கிடையாது.

பிறக்கும் போது அது அது வரைப் பார்த்திராத உலகைப் பார்க்கிறது.

அப்போது அதற்குள் இருக்கும் குணம்தான் அதனுடைய குணம்.

வளர வளர சமூகத்திலிருந்து பாடம் கற்கிறது, அதன் இயற்கைக் குணம் மாறிக்கொண்டே வருகிறது.

அதன் இயற்கைக் குணங்கள் எவை?

ஆர்வம். (Curiosity)
மாசு மறுவற்ற தன்மை.(Innocence)
திறந்த மனது.(Open-mindedness)
தாழ்ச்சி (Humility)
கற்க ஆர்வம்.(willingness to learn)

பிறந்தவுடன் அதன் முதல் பார்வை தாயின் மேல் படுகிறது.  

அது யார் என்று அறிய ஆர்வத்துடன் பார்க்கிறது.

அவள் மகிழ்ச்சியோடு கையில் எடுக்கும் போது அவளது புன்னகை பூத்த முகத்தைப் பார்க்கிறது.

அது கற்றுக் கொண்ட முதல் அனுபவம் புன்னகை.

அதன் சிறுபிள்ளைப் பருவத்தில் அதற்கு அழகூட்டுவது அதன் குழந்தைப் பருவப் புன்னகை தான்.

தாய் குழந்தையை மார்போடு அணைத்துப் பாலூட்டும் போது,

தாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே,

தாயை அடையாளம் தெரிந்து கொள்கிறது.

அன்று ஆரம்பிக்கிற‌ அன்பு அதன் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

அதன் சிறுபிள்ளைப் பருவம் முழுவதும் புன்னகையும் அன்பும் நீடிக்கும்.

தாயைப் பார்க்காமல் பிள்ளையால் இருக்க முடியாது.

தாயைப் பார்த்தவுடன் மனதில் கவலைகள் இருந்தாலும் மாயமாய் மறைந்து போகும்.

புன்னகை மாறாது.

அதே தன்மை வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.

இருக்கிறதா?

குழந்தைகளும், , சிறுபிள்ளைகளும் மனதில் மாசுமருவின்றி, சூதுவாதின்றி  இருக்கிறார்கள்.

அதே தன்மை வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.


சிறு பிள்ளைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார்கள்.

சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்று போல் இருக்கும்.

சிறு பிள்ளைகளிடம் தாழ்ச்சி இருக்கும்.

பெரியவர்களிடம் பழகும் போது சிறு பிள்ளைகளாகவே பழகுவார்கள்.

தங்கள் உண்மையான நிலை அவர்களுக்குத் தெரியுமாகையால் அவர்களுக்கு புதிதாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

அவர்கள் உள்ளம் பரிசுத்தமாக இருக்கும்.

அவர்களிடம் நற்குணங்களைக் கருதிதான்

இயேசு "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்." என்கிறார்.

விண்ணரசு இத்தகைய குணம் உள்ளவர்களுக்கே உரியது என்று இயேசு கூறுகிறார்.

சிறு பிள்ளைகளிடம் இயல்பாய் உள்ள இக்குணங்கள் பெரியோர்களிடம் இருக்க வேண்டும்.

அதோடு பெரியவர்கள் தங்கள் வீட்டில் வாழும் சிறு பிள்ளைகளின் இயல்பான குணங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக வளர்க்க வேண்டும்.

இந்த நற்குணங்கள் அவர்களது வாழ்நாளெல்லாம் நீடிக்கும்படி செய்ய வேண்டும்.

பெற்றோர் தங்கள் சிறுபிள்ளைகளின் மனதில் விசுவாசத்தையும், இறைப் பற்றையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

 தாங்கள் காலை, மாலை செபம் சொல்லும் போது சிறுவர்களையும் அருகில் அமரவைத்து

அவர்களுக்கும் செபிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

திருப்பலிக்கு சிறுவர்களைத் தங்களோடு அழைத்துச் செல்வதோடு,

தாங்களும் பராக்குக்கு இடம் கொடுக்காமல் பக்தியுடன் திருப்பலி காண வேண்டும்,

 தங்கள் பிள்ளைகளையும் பக்தியுடன் திருப்பலியில் கலந்து செபிக்கக் கற்றுத் தர வேண்டும்.

சுவாமியார் பிரசங்கத்தில் என்ன சொன்னார் என்று பூசைக்குப் பின் அவர்களிடம் கேட்பதைப் பழக்கமாக வைத்திருந்தால்

பிள்ளைகள் பிரசங்கத்தைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடக் கல்வியில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் அதைவிட அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்கு வராமல் 
Tution க்குப் போகிற பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

புதுநன்மை எடுக்கும் போது திவ்ய நற்கருணையின் மகத்துவத்தைப் பிள்ளைகள் உணர்ந்திருக்க வேண்டும்.

பிள்ளைகள் பிறக்கும்போது இயேசுவுக்கு ஏற்ற நல்ல பண்புகளுடன்தான் பிறக்கிறார்கள்.

அவர்கள் அந்த பண்புகளில் வளரும்படி கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் பெரியோராகிய நமது கடமை.

நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.

நற்கருணைப் பேழையில் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்."

நமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரிடம் வருவோம்.

விண்ணரசு நமக்கு உரியது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment