Monday, August 12, 2024

" விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " (அரு. 6:51)

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " 
(அரு. 6:51)

நமது முதல் தாய் ஏவாள் விலக்கப்பட்ட உணவை (கனியை) உண்டு, பாவம் செய்தாள்.

கனி உடலுக்குரிய உணவு.

"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்றாள். 
(தொடக்கநூல் 3:3)

அது உணவாக இருந்தாலும் விலக்கப்பட்டிருந்ததால் அதை உண்டது பாவமாயிற்று.

பாவம் அவர்களின் ஆன்மாவைச் சாகடித்து விட்டது.

ஆன்மாவின் உயிர் தேவ இஷ்டப் பிரசாதம் (sanctifying grace).

ஏவாள் உண்டு பாவம் செய்ததால் ஆன்மாவின் உயிரை இழந்தாள்,

இறை உறவையும் இழந்தாள்.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசு.

முதல் ஏவையை ஏமாற்றிய பாம்பின் தலையை நசுக்க இரண்டாவது ஏவை பிறந்தது போல,

விலக்கப்பட்ட உணவை உண்டதால் ஆன்மீக வாழ்வை இழந்த மனு குலத்திற்கு நிலை வாழ்வு அளித்திட 

விண்ணகத்திலிருந்து வாழ்வு தரும் உணவாக இறங்கி வந்தார் 
இரண்டாவது ஏவையின் வித்தாகிய இயேசு.

விலக்கப்பட்ட உணவை உண்டதால் இறை உறவை இழந்த மனுக்குலம் இறை உறவில் வளர இறைவனே தன்னை உணவாகத் தருகிறார்.

"இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்."

இயேசுவாகிய உணவை உண்ண வேண்டுமென்றால் நமது ஆன்மா பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடு நாம் இறைவனை உணவாக உண்டால்‌ நாம் உண்ட உணவோடு,

அதாவது இயேசுவோடு என்றென்றும் நிலை வாழ்வு வாழ்வோம்.

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே." (அரு.14:6)

இயேசுதான் வாழ்வு. ஆகவே இயேசுவை உட்கொள்ளும்போது வாழ்வையே உட்கொள்கிறோம்.

ஏவாள் விலக்கப்பட்ட கனியை உட்கொள்ளும் போது சாவை உட்கொண்டாள்.

நாம் இரண்டாவது ஏவாளின் கனியை உட்கொள்ளும் போது 
வாழ்வை உட்கொள்கிறோம்.

"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்."

தனது சதையை உணவாகக் கொடுப்பதற்காகவே இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

நாம் திவ்ய நற்கருணையை உட்கொள்ளும் போது அன்னை மரியாளின் வயிற்றில் உற்பவித்த அதே உடலைத் தான் உண்கிறோம்.

நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிய அதே இயேசுவின், அதே உடலைத்தான் உண்கிறோம்.

அன்று அவர் சிலுவையில் மரித்து விட்டாலும்

இன்று அவர் உயிர்த்த இயேசு.

நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு.

உலக இறுதியில் நம்மை உயிர்த்தெழச் செய்யப் போகும் இயேசுவைத்தான் இன்று உணவாக உட்கொள்கிறோம்.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது இந்த உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.

இந்த உணர்வு இருந்தால் நற்கருணை நாதரைத் தகுந்த தயாரிப்பு இல்லாமல் வாங்க மாட்டோம்.

அலுவலக வேலைக்குப் போகும் போது சுத்தமான உடையணிந்து போக வேண்டும் என்று தெரிபவர்களுக்கு

நற்கருணை நாதரை வாங்க வரும் போது பரிசுத்தமான உள்ளத்தோடு வர வேண்டும் என்று ஏன் தெரியவில்லை?

நம்மைப் படைத்தவர் முன் 
முழந்தாள் படியிட வேண்டும் என்று ஏன் தெரியவில்லை?

இடது கையால் வாங்குவது அவரை அவமானப் படுத்துவதற்குச் சமம் என்று ஏன் தெரியவில்லை?

குழந்தைக்குத் தாய் வாயில் தான் உணவை ஊட்டுவாள்.

இறைவனுக்கு முன் நாம் அனைவரும் குழந்தைகள் தான்.

வாழ்வு தரும் உணவை வாயில் வாங்க வேண்டும் என்று ஏன் தெரியவில்லை?

வீடு தேடி வந்த விருந்தினரோடு உரையாடுவது நமது இயல்பு.

இறைவனே நமது இல்லம் தேடி வந்திருக்கும் போது அவரோடு பேச மட்டும் நமக்கு ஏன் நேரம் கிடைக்கவில்லை?

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் மட்டும் போதாது. ஆண்டவர் சொல்லும் வார்த்தைகளுக்கும் செவி மடுக்க வேண்டும்.

அமைதியாக இருந்தால்தான் ஆண்டவர் பேசுவார்.

நற்கருணை நாதரோடு ஒரு கால் மணி நேரமாவது அமைதியாக இருந்து அவரது குரலுக்குச் செவி சாய்ப்போம்.

நமக்கு நிலை வாழ்வைத் தரவிருக்கும் இயேசுவையே உணவாக உட்கொள்கிறோம் என்பதை உணர்ந்து அவரை உட்கொள்வோம்.

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment