Sunday, August 25, 2024

இறையரசின் அன்பும், நீதியும் Vs மனித அரசின் அன்பும், நீதியும்.

இறையரசின் அன்பும், நீதியும் Vs
மனித அரசின் அன்பும், நீதியும்.

இறைவன் தனது பண்புகளை மனிதனோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் அவனைத் தனது சாயலில் படைத்தார்.

அவர் மனிதனோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் முக்கியமானவை‌ அன்பும், நீதியும்.

இறைவன் தனது பண்புகளில் அளவில்லாதவர், மனிதன் அளவுள்ளவன்.

இறைவன் நமது அரசர்.

மனித ரீதியாகவும் நமக்கு ஒரு அரசு இருக்கிறது.

இறையரசரும், மனித அரசும் அன்பு, நீதி ஆகிய பண்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

மனித, அன்பும் நீதியும் இணைந்து செயல்படுகின்றனவா?

அரசு தனது குடிமக்களை அன்பு செய்ய வேண்டும்,

அதாவது,

குடிமக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

குடிமக்களில் யாராவது அரசின் சட்டங்களை மீறினால் அரசு அவனைக் கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.

நீதிபதி குற்றவாளியை விசாரிக்கிறார்.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டனைத் தீர்ப்பு வழங்குகிறார்.

குற்றம் நிரூபிக்கப் படாவிட்டால் அவனை விடுதலை செய்கிறார்.

நீதிபதி ஒரு மனிதர்.

அவரிடம் இறைவன் அவரோடு பகிர்ந்து கொண்ட அன்பும், நீதியும் உள்ளன.

அன்பு குற்றவாளி மீது இரக்கப்படும்.

குற்றவாளி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடும்.

ஆனால் மன்னிப்புக் கேட்டாலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியை நீதிபதியால் மன்னிக்க முடியாது,

தண்டனை கொடுத்து தான் ஆகவேண்டும்.

நீதிபதியைப் பொறுத்த மட்டில் அன்பும், நீதியும் எதிர் எதிர் பண்புகள்.

குற்றவாளியை அன்பு மன்னிக்கும், நீதி தண்டிக்கும்.

"கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆயினும் அவன் மன்னிப்புக் கேட்டான்.

நானும் அன்புடன் அவனை மன்னித்து விட்டேன்."

என்று நீதிபதி தீர்ப்பு எழுத முடியாது.

மன்னித்தால் அரசின் முன் அவர் குற்றவாளி ஆகிவிடுவார்.

இறைவனிடம் எதிர் எதிர் பண்புகள் இருக்க முடியாது.

அவரைப் பொறுத்த மட்டில் அன்பும், நீதியும் இணைந்தே செயல்படுகின்றன.

நமது முதல் பெற்றோரைக் கடவுள் பரிசுத்த நிலையில் தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் அவரது கட்டளையை மீறிப் பாவம் செய்தார்கள்.

மனுக்குலமே பாவத்தில் விழுந்தது.

அளவு கடந்த அன்பாலான கடவுள் அவர்களை மன்னிக்கத் திட்டமிட்டு விட்டார்.

ஆனால் நீதிப்படி மன்னிப்புப் பெற  மனிதன் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு எதிராகச் செய்யப் பட்ட பாவத்துக்குப் போதிய பரிகாரம் செய்ய முடியாது.

ஏனெனில் பரிகாரமும் அளவில்லாததாக இருக்க வேண்டும்.

ஆகவே அன்பே உருவான அளவில்லாத கடவுள் மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தை தானே செய்யத் தீர்மானித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்ய முடியாது.

பரிகாரம் செய்யத் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் தேவ சுபாவத்தில் துன்பப்பட முடியாது.

ஆகவே மனிதன் மீது அளவுகடந்த அன்புள்ள கடவுள் பரிகாரம் செய்வதற்காக மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தார்.

ஆகவே தான் இறைமகன் மனுமகனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து மனித பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

இயேசு நினைத்திருந்தால் இவ்வளவு பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரிக்காமலேயே‌ அனைத்து மக்களுடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்திருக்கலாம்.

அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.

அவர் ஒரு நாள் நோன்பு இருந்திருந்தால் கூட அதற்கு அளவில்லாத பரிகாரப் பலன் உண்டு, ஏனெனில் அவர் அளவில்லாதவர்.

ஆனாலும், நம்மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்

எவ்வளவு அதிகம் பாடுகள் பட முடியுமோ அவ்வளவு பாடுகள் பட்டார்.

மனிதன் எல்லாவற்றையும் விட தன் உயிரை அதிகம் நேசிக்கும் இயல்பினன்.

அதனால் தான் அவனைத் 
தன்பால் ஈர்க்கத் தன் உயிரையே தியாகம் செய்தார்.

இயேசுத் தன் உயிரைத் தியாகம் செய்து செய்த பாவப் பரிகாரம் தான் நமக்கு பாவ மன்னிப்பைப் பெற்றுத் தந்தது.

மனிதன் நீதியைப் புரிந்து கொள்வது போல கடவுள் மனிதனுக்குத் தண்டனை கொடுக்க நினைத்திருந்தால் ஆதாம் ஏவாளோடு மனித குலம் அழிந்திருக்கும்.

இயேசுவின் அன்பும், நீதியும் இணைந்து செயல்பட்டதால்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதை நாம் அறிந்தால் மட்டும் போதுமா?

அதிலிருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

என்ன வாழ்க்கைப் பாடம்?

நமக்கு விரோதமாக யாராவது எதாவது தவறு செய்தால் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக நாமும் ஏதாவது செய்து விடுகிறோம்.

இது பழைய பல்லுக்குப் பல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதற்குப் பதில் இயேசுவின் தத்துவத்தைப் பின்‌ பற்றுவோம்.

அவர்கள் செய்த தவறுக்கு நாம் பரிகாரம் செய்வோம்.

அவர்களை மனதார மன்னிப்போம்.

அவர்கள் செய்த தீமைக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மை செய்வோம்.

அவர்கள் ஆன்மீக மீட்பு பெற ஆண்டவரை வேண்டுவோம்.

அப்போது தான் நாம் இறைவனின் பிள்ளைகள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment