Wednesday, August 28, 2024

" எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."(மத்தேயு.25:13)

" எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு.25:13)

நமது இவ்வுலக வாழ்வின் இறுதி நேரமாகிய மரணத்தைத்  தனது வருகை என்று இயேசு குறிப்பிடுகிறார்.

மரணம் இவ்வுலக வாழ்வின் இறுதி, மறுவுலக வாழ்வின் ஆரம்பம்.

அந்த வினாடியில் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக இயேசு வருவார்.

நாம் விண்ணக அரசுக்குள் நுழைய வேண்டுமென்றால் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

பரிசுத்தமான ஆன்மாக்கள் தான் விண்ணக அரசுக்குள் நுழைய முடியும்.

ஆகவே மரண நேரத்தில் நமது ஆன்மா பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் விண்ணக அரசை இழந்து, பேரிடர் நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

ஆகையால் நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமது மரணத்தை எதிர் பார்த்து, எப்போதும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

இயேசு கூறிய உவமையில் வரும் ஐந்து கன்னியர் விளக்குகளில் எண்ணெய் இல்லை.

ஆகவே அவர்களால் திருமண வீட்டிற்குள் நுழைய முடியவில்லை.

இயேசு வரும்போது தேவ இஷ்டப் பிரசாதம் இல்லாத ஆன்மாக்களின் நிலையும் அதுதான்.

பாவநிலையில் உள்ளவர்கள் மரண நேரத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்கக் கூடாது.

ஏனெனில் மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

ஆகவே எப்போதும் தூய ஆன்மாவோடு இயேசுவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் வருகைக்காக வேறு என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது,

கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

அதாவது இயேசுவின் சித்தத்தின்படி வாழ வேண்டும்.

இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்து,

நம்மை நேசிப்பது போல நமது பிறனையும் நேசித்து,

தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து,

நம்மைப் பகைப்பவர்களையும் நேசித்து,

நமக்கு தீமை செய்தவர்களை மன்னித்து, அவர்களுக்கு நன்மை செய்து,

தளராத விசுவாசத்தோடு எப்போதும், ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

மரணம் குழந்தைகளுக்கும் வரும்,

பையன்களுக்கும் வரும்,

வாலிபர்களுக்கும் வரும்,

திருமணம் ஆனவர்களுக்கும் வரும், ஆகாதவர்களுக்கும் வரும்,

வயதான முதியவர்களுக்கும் வரும், 

ஆறிலும் வரும், நூறிலும் வரும்.

ஆகவே எல்லோரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நாட்டில் இறுதி நேரப் பேர்வழிகள் நிறைய இருக்கிறார்கள்.

10 மணிக்கு Train என்றால் 9.59 க்குதான் நிலையத்துக்கு வருவார்கள்.

பள்ளிக்கூடத்துக்கு assembly
 நேரத்தில்தான் வருவார்கள்.

நாளைய தேர்வுக்கு இன்றுதான் படிப்பார்கள்.

வாழ்க்கையில் அப்படி இருக்கக் கூடாது.

நல்ல வாழ்க்கை வாழ இறுதி வரைக் காத்திருக்கக் கூடாது.

ஆரம்பம் முதல் வாழ்க்கை முழுவதும் நல்லவர்களாக வாழ வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வு நமது மரணத்துக்குப் பின்னும் நித்திய காலம் நீடிக்கும்.

நாம் பிறக்குமுன் இயேசுவின் உள்ளத்தில், நித்திய காலத்திலிருந்தே, எண்ணமாக இருந்தோம்.

பிறந்த பின் இயேசு நமது உள்ளத்தில், இவ்வுலக வாழ்வு முழுவதும், வாழ்கிறார்.

இறந்த பின் நாம் இயேசுவுக்குள்ளும், இயேசு நமக்குள்ளும், நித்திய காலமும் இருப்போம்.
(In everlasting union.)

எந்த சக்தியாலும் இயேசுவையும், நம்மையும் பிரிக்க முடியாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment