Friday, August 16, 2024

" உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்." (அரு. 6:58)

"உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்." (அரு. 6:58)

இறைவன் நம்மை நிரந்தரம் இன்றி வாழ்ந்து, ஒருநாள் மண்ணுக்குத் திரும்பி அழிந்து போகக்கூடிய உடலோடும்,

அழியாமல் என்றென்றும் வாழக்கூடிய ஆன்மாவோடும்
படைத்திருக்கிறார்.

இரண்டும் அததன் தன்மைக்கு ஏற்ப வாழ வேண்டும்.

உடல் மண்ணுக்குத் திரும்ப வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அது மண்ணுக்குத் திரும்பும் வரை வாழ வேண்டும்.

அதற்காக அது மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட தாவர உணவை உண்கிறது.

தாவரங்களைப் போலவே அதுவும் ஒரு நாள் மண்ணில் மக்கி, தாவரங்களுக்கு உணவாக மாறிவிடும்.

தாவர உணவை உண்ட உடல் தாவரங்களுக்கே உணவாக மாறிவிடும்.

நமது அழியாத ஆன்மாவுக்கும் உணவு வேண்டும்.

அது ஆன்மாவைப் போலவே அழியாத உணவாக இருக்க வேண்டும்.

ஆன்மாவைப் படைத்த இறைவனின் அருள்தான் ஆன்மாவின் உணவு.

அருள் இருவகை.

1. தேவ இஷ்டப் பிரசாதம்.
(Sanctifying grace)

2.உதவி வரப்பிரசாதம்.
(Actual grace)

தேவ இஷ்டப் பிரசாதம்தான் ஆன்மாவின் உயிர்.

இந்த உயிரைத்தான் நமது முதல் பெற்றோர் பாவத்தின் மூலம் இழந்தனர்.

நாம் பிறக்கும் போது இந்த உயிரின்றி, அதாவது, சென்மப் பாவத்தோடு பிறந்தோம்.

திருமுழுக்கின்போது நமது ஆன்மா உயிர் பெற்றது.

சாவான பாவத்தினால் நமது உயிரை இழக்காமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

சாவான பாவத்தினால் உயிரை இழக்க நேரிட்டால் அதைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.

நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருந்தால்தான் நமக்கு இறைவனோடு ஆன்மீக உறவு இருக்கும்.

இறைவனோடு ஆன்மீக உறவில் இருப்பவர்கள் தான் மோட்ச வாழ்வுக்குத் தகுதியானவர்கள்.

நாம் ஒவ்வொரு வினாடியும் மோட்ச வாழ்வுக்குத் தகுதியானவர்களாக வாழ வேண்டும்.

அப்போதுதான் நாம் எந்த வினாடியில் இறந்தாலும் மோட்ச வாழ்வை அடைவோம்.

உதவி வரப்பிரசாதம்:

நாம் நற்செயல் செய்வதற்கு சக்தி தரும் வரம்தான் உதவி வரப்பிரசாதம்.

உடலியல் ரீதியாகக்கூட நாம் உயிரோடு இருந்தால் மட்டும் போதாது.

நாம் எழுந்து நடக்க, செயல் புரிய சக்தி வேண்டும்.

ஆன்மீக ரீதியாக நமது ஆன்மா உயிரோடு இருந்தால் மட்டும் போதாது.

அது நற்செயல் புரிய சக்தி வேண்டும்.

அந்த சக்தியைத் தருவதுதான்
உதவி வரப்பிரசாதம்.

நாம் மனம் திரும்ப உதவி வரப்பிரசாதம் உதவுகிறது.

மனம் திரும்பியவுடன் திரு முழுக்கின் மூலம் நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாதத்தைப் பெற்று உயிர் பெறுகிறது.

உயிர் பெற்ற‌ ஆன்மா நற்செயல்கள் மூலம் ஆன்மீக வாழ்வு  வாழ உதவி வரப்பிரசாதம் உதவுகிறது.

இறைவன் தான் நாம் பெறும் அருளின் ஊற்று.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது அருளின் ஊற்றாகிய இறைவனே நமக்குள் உணவாக வருகிறார்.

இவ்வுணவை உண்ணும் நாம் என்றும் வாழ்வோம்.

உணவோடேயே, அதாவது, இயேசுவோடேயே என்றென்றும் வாழ்வோம்.

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்."

விவிலியத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகளை வாசித்து தியானித்தால் மட்டும் போதாது.

அவரது வார்த்தைகள் நமது உணர்வோடு உணர்வாக ஒன்றிக்க வேண்டும்.

ஒன்றித்தால் உரிய தயாரிப்புடன் திருவிருந்தை அருந்துவோம்.

நிலைவாழ்வின் முன்ருசியுடன் அருந்துவோம்.

ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று ருசித்துப் பார்த்துக் கொண்டே அருந்துவோம்.

திருவிருந்து வெறும் சடங்காக இருக்காது, அனுபவிக்கும் இறை அனுபவமாக இருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் நமது உடல் உயிர் வாழ எப்படி மூச்சு இன்றியமையாததோ

அப்படியே ஒவ்வொரு வினாடியும் நாம் ஆன்மீக வாழ்வு வாழ இறையருள் இன்றியமையாதது.

அருளின் உதவியின்றி நாம் செய்யும் செயல்கள் முழுக்க முழுக்க லௌகீகமானவை.

ஆன்மீக ரீதியாகப் பயனற்றவை.

ஒவ்வொரு வினாடியும் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டுமென்றால் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

காலையில் இறைவன் பெயரால் எழுவதோடு,

அன்றைய ஒவ்வொரு செயலையும் "இறைவா உமக்காக" என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

அப்போதுதான் நாம் உண்பது, உடுப்பது, நடப்பது, உறங்குவது உட்பட அனைத்தும் ஆன்மீக வாழ்வாக மாறும்.

நமது ஆன்மீக வாழ்வு மண்ணுலகில் தொடங்கி, விண்ணுலகில் தொடர வேண்டும்.

இவ்வுலக மரணம் கூட இறைவனுக்காகத்தான்.

மரணம்தான் நமக்கு விண்ணக வாசல்.

வாசல் வழியாகத்தானே வீட்டிற்குள் நுழைய முடியும்.

அருள் இருந்தால்தான் ஆன்மீக வாழ்வு.

அருள் இருந்தால்தான் நிலை வாழ்வு.

"அருள் நிறைந்த மரியின் புதல்வா,

எங்களையும் உம் அருளால் வழிநடத்தும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment