Sunday, August 4, 2024

நற்செய்தி என்றால் என்ன?

நற்செய்தி என்றால் என்ன?

ஒரு குருவானவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கி விட்டு, இரவு11.30க்கு களைப்பாக படுக்கைக்குச் செல்கிறார்.

படுக்கையில் சாயப்போகும் நேரத்தில் அவரது Cell phone அலறுகிறது.

phoneஐ எடுத்துக் காதில் வைக்கிறார்.

"ஹலோ! பங்குச் சாமியார் பேசுகிறேன்."

"சுவாமி, வணக்கம்.
சுவாமி, Sr. Philomina பேசுகிறேன்."

"Sister, வணக்கம். சொல்லுங்க."

"இங்கே மருத்துவ மனையில் ஒரு நோயாளி சாகக் கிடக்கிறார்.

நீங்கள் வந்து அவருக்குப் பாவ சங்கீர்த்தனம் கேட்டு, நோயில் பூசுதல் கொடுத்து விண்ணகத்துக்கு அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும்."

சுவாமியார் உடனே எழுந்து, உடை மாற்றிக்கொண்டு மருத்துவ மனைக்கு விரைகிறார்.

நோயாளியின் அருகே சென்று அமர்கிறார்.

''சுவாமி, பாவ சங்கீர்த்தனம் கேட்க வந்தீர்களா? 

வேண்டாம்.

நான் பெரிய பாவி.

கடவுளால் மன்னிக்க முடியாத அளவுக்குப் பெரிய பாவம் செய்தவன்."

"கடவுளின் அளவு கடந்த இரக்கத்துக்கு முன் மன்னிக்கப்பட‌ முடியாத பாவம் எதுவுமே கிடையாது.''

"நான் சொல்வதைக் கேளுங்கள். கேட்டால் நீங்களே இவ்வளவு பெரிய பாவத்துக்கு மன்னிப்புக் கிடையாது என்று சொல்லி விடுவீர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு railway signaller வேலை பார்த்தேன்.

ஒரு நாள் குடித்து விட்டு குடி போதையில் வேலைக்கு வந்தேன்.

போதையில் நான் செய்த தவற்றினால் இரயில் தவறான தண்டாவளத்தில் ஓடியதால் ஏற்பட்ட விபத்தினால் காரில் வந்து கொண்டிருந்த குடும்பமே சாக நேர்ந்தது.

குடி போதையால் ஒரு குடும்பத்தையே சாகடித்த எனக்கு எப்படி சாமி மன்னிப்புக் கிடைக்கும்?"

சுவாமியார் விபத்து நடந்த ஆண்டையும், இடத்தையும் கேட்டு அறிந்து பின் சொன்னார்,

"விபத்தில் மாட்டிய காருக்குள் இருந்த‌ அனைவரும் சாகவில்லை.

காருக்குள் ஒரு அப்பாவும், அம்மாவும், இரண்டு வயது பையனும் இருந்தார்கள்.

அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டார்கள்.

இரண்டு வயது பையன் 
பிழைத்துக் கொண்டான்.''

''அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"அந்தப் பையன் நான்தான். உங்களுக்கு மோட்ச பாக்கியம் கிடைக்க‌ வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னைக் காப்பாற்றி, குருவானவராகவும் ஆக்கியிருக்கிறார்."

நோயாளி அழ ஆரம்பித்தார்.

"அழாதீர்கள்.‌பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள். நோயில் பூசுதலும் பெறுங்கள்.

உங்களுக்காக மோட்ச வாசல் திறந்திருக்கிறது.

கடவுளின் வழிகள் வித்தியாசமானவை."

நோயாளி பாவ சங்கீர்த்தனம் செய்தார்.‌‌ நோயில் பூசுதல் பெற்றார். பாக்கியமான மரணம் அடைந்தார்.

நிலை வாழ்வுக்குள் நுழைந்தார்.

இப்போது 
முதல் கேள்வியைத் திரும்பவும் கேட்போம்.

நற்செய்தி என்றால் என்ன?

இறை இரக்கத்தின் செய்தி.

மனுக்குலத்தில் மீது இறைவன் கொண்டிருந்த இரக்கத்தின் காரணமாக 

மனு மகனாகப் பிறந்த இறை மகனின் செய்தி.

பாவத்தின் காரணமாக இழந்த விண்ணரசுக்கான உரிமையை மீட்டுத் தர மனிதனாகப் பிறந்தவர் இயேசு.

அதனால் தான் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பிக்கும்போதே,

"மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி விட்டது" என்று போதித்தார்.

விண்ணகம் எய்துமுன் கொடுத்த நற்செய்தி,

" இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 

 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்."
(மாற்கு நற்செய்தி 16:15,16)

இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தது பாவிகள் மீது பாவிகள் மீது கொண்டுள்ள அளவு கடந்த இரக்கத்தினால்.

அதனால்தான் அவரது பாடுகளும் மரணமும்.

விளைவு பாவிகளின் மீட்பு.

மீட்பு இரக்கத்தின் விளைவு.

தண்டனை ?

இயேசுவின் வார்த்தைகளை அவரது பண்புகளின் அடிப்படையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் அவரது எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அளவில்லாத அன்பு, அளவில்லாத இரக்கம்,
.அளவில்லாத நீதி,
அளவில்லாத வல்லமை.

அவர் பண்புகள் உள்ளவர் அல்ல,
பண்புகள் ஆனவர்.

அன்பே உருவானவர்.
God is Love.
இரக்கமே உருவானவர்.
God is mercy.
நீதியே உருவானவர்.
God is justice.

ஒரு அளவில்லாத பண்பானவர் அதற்கு எதிர்ப்  பண்பானவராக இருக்க முடியாது.

அன்போடு வெறுப்பு இருக்க முடியாது.

உலகியலில் நீதிமன்றங்களில் விடுதலை கிடைக்கும் அல்லது தண்டனை கிடைக்கும், இரக்கம் கிடைக்காது.

இறையியலில் எதிர் எதிர் பண்புகள் இருக்க முடியாது.

இரக்கமும், நீதியும் எதிர் எதிரான பண்புகளா?

இல்லை.

உலக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் கிடைப்பது தண்டனை, மன்னிப்பு அல்ல.

இறைவனது நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் குற்றவாளி குற்றத்துக்காக வருத்தப் பட்டால் அவன் மன்னிக்கப்படுவான்.

இறையியலில் இரக்கம் நீதிக்கு எதிரானது அல்ல.

இறையியலில் உலக அர்த்தத்தில் தண்டனை கிடையாது.

அப்படியானால் நீதியின் வேலை?

கடவுள் அன்பே உருவானவர், நீதியே உருவானவர்.

கடவுளின் அன்பு குற்றவாளியை மன்னிக்கும்.

நீதிப் படி குற்றவாளி குற்றத்துக்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

அன்பே உருவான கடவுள் நாம் செய்த பாவத்துக்கு அவரே பரிகாரம் செய்தார்.

அதற்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவரே பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

தேவ சுபாவத்தில் செய்ய முடியாததை மனித சுபாவத்தில் செய்தார்.

பாவமன்னிப்புப் பெற நாம் நமது பாவங்களுக்காக வருத்தப்பட வேண்டும்.

நாமும் பரிகாரம் செய்ய வேண்டும், நமது பரிகாரத்துக்கு பலன் கொடுப்பது இயேசு செய்த பரிகாரம்.

நாம் மனச் சுதந்திரத்தோடு செய்த பாவத்துக்கு 

மனச் சுதந்திரத்தோடு வருத்தப் பட்டால் மன்னிப்புக் கிடைக்கும்.

வருத்தப் படாவிட்டால் விளைவை மனச் சுதந்திரத்தோடு நாம் தான் ஏற்றுக் கொள்கிறோம்.

பாவ மன்னிப்புப் பெற்று மோட்ச பேரின்பத்துக்குள் போக வேண்டுமா,

பாவ மன்னிப்புப் பெறாமல் பேரிடர் நிலைக்குப் போக வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மனிதன் தான், கடவுள் அல்ல.

பேரிடர் நிலை கடவுள் மனிதனுக்கு விரும்பித் தருவதல்ல.

அவனை அதற்காகப் படைக்கவில்லை.

மனிதன் சுயமாகத் தேர்வு செய்யும் இறை எதிர் நிலை.

கடவுள் இரக்கத்தோடு பாவங்களை மன்னிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்.

கடவுள் இரக்கமே உருவானவர்,
அவரது நற்செய்தி‌ இரக்கத்தின் செய்தி.

சர்வ வல்லவ கடவுள் பாவிகளாகிய நம்மைத் தான் தேடி உலகத்துக்கு வந்தார்.

அவர் தொலைந்து போகாத 99 ஆடுகளை ஒரு இடத்தில் விட்டு விட்டு தொலைந்து போன ஆடுகளைத் தேடி அலையும் ஆயனுக்குத் தன்னை ஒப்பிடும்போது.

பாவத்தால் தொலைந்து போன பாவிகளாகிய நம்மைத் தேடிக் கண்டுபிடித்து தனது கூடாரமாகிய திருச்சபையில் சேர்க்கிறார்.

திருச்சபையே பாவிகளின் கூடாரம் தான்.

நாம் நல்லவர்கள் என்பதற்காக நம்மை நேசிக்கவில்லை.

அவர் நல்லவர் என்பதால் நம்மை நேசிக்கிறார்.

ஒரு தாய் நலமாக உள்ள பிள்ளைகளிடம் காட்டும் அக்கறையை விட சுகமில்லாத பிள்ளையிடம் அதிக அக்கறை காட்டுவாள்.

இயேசுவும் அப்படித்தான்.

புண்ணியவான்களிடம் காட்டும் அக்கறையை விட பாவிகளகடமே அதிக அக்கறை காட்டுகிறார்.

நாம் அன்புக்கு ஏற்றவர்கள் என்பதற்காக நம்மை அன்பு செய்யவில்லை.

நாம் மீட்புப் பெற அவரது அன்பு நமக்குத் தேவை என்பதற்காக நம்மை அன்பு செய்கிறார்.

இயேசுவின் அன்பு தண்ணீரைப் போன்றது, தாழ்வான இடத்தை. நோக்கிதான் பாயும்.

இயேசு நமது காணிக்கைகளுக்காகவும், நன்கொடைகளுக்காகவும் நம்மை அன்பு செய்யவில்லை.

நமது பலகீனங்களுக்காகவும், நமது பாவங்களுக்காகவுமே நம்மை அன்பு செய்கிறார்.

ஊதாரிப்பிள்ளை உவமையில் தந்தை வீட்டில் வாழ்ந்தவன் மீது காட்டும் அக்கறையை விட

ஓடிப் போனவன் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பது போல் தான்

கடவுள் பாவிகளாகிய நம்மீது காட்டும் அக்கறை அதிகமாக இருக்கிறது.

நல்ல சமாரித்தன் உவமையில் அடிபட்டுக் கிடப்பவன் மீது சமாரித்தன் அக்கறை காட்டுவது போல இயேசுவும் நம்மீது அக்கறை காட்டுகிறார்.

இயேசு பாவிகளாகிய நம்மீது இரக்கம் உள்ளவர்.

இயேசுவின் இரக்கத்தை ஏற்று, அதற்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment