Thursday, August 15, 2024

கடவுள் இயற்கையை படைத்து விட்டு அதை ஆள்வதற்காக மனிதனைப் படைத்தார்.

கடவுள் இயற்கையை படைத்து விட்டு அதை ஆள்வதற்காக மனிதனைப் படைத்தார்.

இயற்கை மனிதனுக்காகப் படைக்கப்பட்டது.
(தொடக்கநூல் 1:28-31)

மனித உடல் இயற்கையிலிருந்து (மண்) எடுக்கப்பட்டது.

ஆகவே தான் இயற்கையில் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் மனித உடலைப் பாதிக்கின்றன.

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.

மனித ஆன்மாவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது.

இயற்கை ஒருநாள் அழியும், மனித ஆன்மா அழியாது.

மனிதனின் பாவம்  
இயற்கையைப் பாதித்தது.

 (நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது;)
(தொடக்கநூல் 3:17)

மனித உடல் இயற்கையின் ஒரு அங்கமாகியதால் மனித வாழ்வு இயற்கையோடு பின்னி பிணைக்கப்பட்டுள்ளது.

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தால் மனிதனும் பிழைப்பான் இயற்கையும் பிழைக்கும்.

மனிதன் இயற்கையை வெட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறான், அதன் விளைவு தான் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள்.

தென்னிந்தியாவின் நீர் வளத்துக்கும் நில வளத்துக்கும் ஒரே காரணம் மேற்கு தொடர்ச்சி மலை.

மலையின் மேல் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்கள் பருவ மழைக்குக் காரணமாக இருப்பதோடு மலையையும் பாதுகாக்கின்றன.

பின்னிப் பிணைந்து மலைக்குள் வளரும் மர வேர்கள் மலையில் பிளவுகள் ஏற்படாதவாறு இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன.

ஆனால் மனிதன் செயற்கையாக தோட்டங்கள் போடுவதற்காக இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டி விட்டது தான் மலைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்குக் காரணம்.

மரவேர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பகுதிகள் வேர்கள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் இடம்பெயர்ந்து சரிய ஆரம்பித்துவிட்டன.

விளைவு அதன் மேல் வாழ்ந்து வந்த மனிதர்களும் அவற்றோடு சேர்ந்து சரிந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டார்கள்.

வயநாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம் மனிதன் மட்டும் தான்.

மனிதன் இயற்கையைக் காப்பாற்றினால் இயற்கை மனிதனை காப்பாற்றும்.

மனிதன் இயற்கையை அழித்தால் இயற்கை மனிதனை அழிக்கும்.

இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை இறைவன் மனிதன் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

"இயற்கையை மறந்ததாலேயே, நாம் அழிந்து வருகிறோம்"


புனித பிரான்சிஸ் அசிசியின் கருத்துப்படி

இயற்கையின் அனைத்துப் பொருட்களும் நமது சகோதரர்கள்.

இத்தகைய உடன்பிறந்த உணர்வு இல்லாமல், இயற்கையை நாம் அணுகும்போது, அதனை ஆள்பவர்களாக, நுகர்பவர்களாக, பரிவின்றி பறிப்பவர்களாக மாறிவிடுகிறோம். 

இதற்கு மாறாக, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் அனைத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களாக மாறினால், அவற்றைப் பாதுகாக்கும் வகையில், நம் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம்.

இயற்கையில் வாழும் பறவைகளையும் மற்ற உயிர்ப் பிராணிகளையும் தனது உறவுகளாக கருதினார் அசிசியார்.

அவைகளுக்காக இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

புவி வெப்பமடைதலால் (Global warming) ஏற்படும் தீமைகளுக்கு‌க் காரணம்‌ மனிதனுடைய நடவடிக்கைகள் தான்.

வயநாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த பகுதியிலும் ஏற்படும் இயற்கை அழிவுகளுக்கு காரணம் மனிதன் மட்டுமே.

இவற்றுக்குப் பரிகாரம் செய்ய வேண்டியது மனிதனின் கடமை.

இந்த அழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டியது சக மனிதர்களுடைய கடமை.

இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து மனிதர்களகன் கடமை.

இயற்கையை ஒரு பொருளாகக் கருதாமல்,

அசிசி பிரான்சிஸ் கருதியது போல,

நமது பிறனாகக் கருதினால் இயற்கையை நாம் நேசிப்போம்.

அழிக்க மாட்டோம்.

இயற்கையும் நம்மை அழிக்காது.

எதிர் காலத்திலாவது வயநாட்டை வாழ வைப்போம்.

நாமும் வாழ்ந்திடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment