Friday, August 23, 2024

" சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு. 6:68)

"சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு. 6:68)

  இயேசு நாம் அவரது உடலையும், உதிரத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் அருந்த வேண்டும் என்று கூறியது அவரது பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த பலருக்குப் பிடிக்கவில்லை.

அவர்கள் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

இயேசு தனது பன்னிரு சீடர்களைப் பார்த்து,

 "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். 
 
அதற்குப் பதில் கூறும் வகையில் சீமோன் இராயப்பர்,

"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்று கூறினார்.

இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை.

அவற்றை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நிலை வாழ்வளிக்க வல்லவை.

இவ்வுலக உணவை அருந்துவோர் இவ்வுலகில் மட்டும் வாழ்வர்.

இறைவார்த்தையின்படி வாழ்பவர்களும், இறைவனலயே உணவாக அருந்துபவர்களும் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வர்.

நாம் படைக்கப் பட்டிருப்பதே நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான்.

இயேசு உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

அவர் எதற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதை நிறைவேற்ற அவர் பயன்படுத்தியது

வாழ்வின் இறுதி நாட்களாகிய வியாழனையும், வெள்ளியையும்.

வியாழனன்று திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

வெள்ளியன்று நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டுத் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியதும், சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததும் நமது நித்திய கால பேரின்ப வாழ்வுக் காகத்தான்.

இறைவனுக்கு பலி ஒப்புக் கொடுக்கிறவர்கள் அதன் பலனை அடையும் பொருட்டு பலிப் பொருளை உண்ண வேண்டும்.

புனித வியாழனன்று இயேசு தனது சீடர்களுக்குப் பலிப் பொருளாகிய தன்னை உணவாகக் கொடுத்தார்.

உலகம் முடியுமட்டும் வாழப் போகும் தனது சீடர்களுக்குத் தன்னை உணவாகக் கொடுப்பதற்காகத்தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தினமும் திருப்பலி நிறைவேற்றி, பலிப் பொருளை நமக்கு உணவாகத் தருவதற்காகத்தான் குருத்துவமும், திருப்பலியும்.

நாம் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளும் போது நம்மை நாமே நித்திய பேரின்ப வாழ்வுக்குத் தயாரிக்கிறோம்.

பாவமாசின்றி திருவிருந்தில் கலந்து கொள்வதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.

நாம் நிலை வாழ்வை அடையும் பொருட்டு பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பிறந்ததே இறப்பதற்காகத்தான்,

உலகில் வாழ்வதும் இறப்பதற்காகத்தான்,

 இறப்பு தான் விண்ணகத்தின் வாசல்.

விண்ணகத்தில்தான் நித்திய பேரின்ப வாழ்வு.

குற்றாலத்துக்குப் போகின்றவர்கள் குளிப்பதற்காகத்தான் போவார்கள்.

குற்றாலத்தில் ஹோட்டல்கள் இருக்கும்.

சென்னையிலிருந்து குற்றாலம் வரைப் பயணம் செய்து, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் திரும்புகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விண்ணகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்பவர்களும் அப்படிப் பட்டவர்கள் தான்.

சென்னையிலிருந்து குற்றாலம் வந்து குளிக்காமல் ஊருக்குத் திரும்பி விடலாம்.

ஆனால் விண்ணகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்பவர்கள் ஒரு பக்கமும் திரும்ப முடியாது.

பேரின்பம், பேரிடர் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டும்.

இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யக் கடவுள் மனிதனுக்கு பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டும் வேண்டாம் என்று கூற‌ முடியாது.

நாம் பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைமகன் மனுமகனாகப் பிறந்து நமக்காகப் பாடுகள் பட்டு மரித்தார்.

நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பைப் புரிந்து கொண்டு,

பேரின்ப வாழ்வைத் தேர்வு செய்வோம்.

பாவமின்றி வாழ்வோம்.

பலகீனத்தால் விழ நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.

நமக்கு வேண்டிய உதவி செய்ய நற்கருணை நாதர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்வோம்.

நற்கருணை நாதரை உரிய தயாரிப்போடு உணவாக உட்கொண்டால் நமக்கு பேரின்ப வாழ்வு உறுதி.

''எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்."
(அரு. 6:54)

இயேசு நம்மோடு.

நமது பேரின்ப வாழ்வு அவரோடு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment