Thursday, August 22, 2024

" அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். (அரு.1:46)

"அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். 
(அரு.1:46)

 இயேசு பிலிப்பைப் பார்த்து, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறுகிறார். 

ஆனால் பிலிப்பு நத்தனியேலிடம் செல்கிறார்.

அவரைப் பார்த்து,

" இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம்.

 நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று கூறுகிறார்.

இயேசு அழைத்தது பிலிப்புவை.

அவர் உடனே தன் அழைப்பை நத்தனியேலோடு பகிர்ந்து கொள்கிறார்.

தனக்குக் கிடைத்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் உள்ள ஆர்வத்தைப் பாருங்கள்!

இதுதான் அப்போஸ்தலிக்க ஆர்வம்.

அவரை இயேசு அப்போஸ்தலராக நியமிப்பதற்கு முன்பே அவரிடம் அப்போஸ்தலிக்க இருந்தது!

பிலிப்புவுக்குப் பதில் கூறும் விதமாக நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்கிறார். 

நத்தனியேல் பைபிள் வாசிப்பிலும், தியானிப்பதிலும்
ஆர்வம் உள்ளவர்.

"அத்திமரத்தடியில் உம்மைக் கண்டேன்" என்ற வார்த்தைகளே இதை உறுதிப்படுத்தும்.

" நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். "
(மீக்கா 5:2)

என்ற வசனப்படி மெசையா பெத்லகேமில் தோன்றுவார் என்று அவர் நம்பியிருந்திருப்பார்.

ஆகவே வெள்ளை மனதுடன் மனதில் பட்டதைச் சொல்லி விட்டார்.

"இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் இதை உறுதிப் படுத்துகின்றன.

பிலிப்பு நத்தனியேலுக்குச் சொந்த விளக்கம் எதுவும் கொடுக்காமல்

"வந்து பாரும்" என்று கூறுகிறார். 

நத்தனியேலும் பிலிப்புவோடு இயேசுவிடம் வருகிறார்.

 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்கிறார்.

 நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்க,

 இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளிக்கிறார். 

 நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்கிறார்.

பிலிப்பு அவரிடம்.

"நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று தான் சொன்னார்.

ஆனால் நத்தனியேல்,

"ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்று நேரடியாகவே உண்மையைச் சொல்லிவிட்டார்.

இது அத்திமரத்தடியில் இருந்து தியானித்ததன் விளைவு!

திராட்சைக் கொடி,  ஒலிவ மரம், அத்தி மரம் ஆகியவை யூத மக்களுக்குப் பிடித்தமான தாவரங்கள்.

அத்திமர நிழலில் அமர்ந்து பைபிள் வாசிப்பது, இறை வார்த்தைகளைத் தியானிப்பது யூத மக்களின் வழக்கம்.

நத்தனியேல் அவ்வாறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக இயேசு கூறுகிறார்.

நாமும் இறை வார்த்தையை வாசிப்பதிலும், தியானிப்பதிலும் ஆர்வம் காட்டினால் இயேசு அவரது பணிக்கு நம்மையும் அழைப்பார்.

இறை அழைத்தல் பெற நமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்பதற்கு நத்தனியேல் ஒரு 
முன்னுதாரணம்.

நசரேத் குறித்து நத்தனியேலின் வார்த்தைகளைச் சிறிது தியானிப்போம்.

நசரேத் ஒரு சிறிய நகரம்.

வல்லமை வாய்ந்த கடவுள் சிறிய நகரைத் தன் வருகைக்குத் தேர்ந்தெடுப்பாரா

என்று  நத்தனியேல் நினைத்திருக்கலாம்.

அதனால் தான் 

"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். 

இப்பதில் இயேசுவின் முக்கியமான போதனையை நினைவூட்டுகிறது.


" ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" 
(மத்தேயு.19:30)

முக்கியமற்றவை என்று நாம் நினைப்பவை இறைவன் முன் முக்கியமானவையாய் இருக்கும்.

நத்தனியேல் ஒரு பைபிள் அறிஞர்.

அவர் கண்ணுக்கு முக்கியமற்றதாகத் தோன்றிய நாசரேத்தை இயேசு மீட்பின் வரலாற்றில் முக்கிய நகராகத் தேர்வு செய்தார்.

அவர் பெத்லகேமில் பிறந்தாலும்

அவரை நசரேத் ஊர் இயேசு என்று தான் அழைக்கிறோம்.

தந்தை இறைவன் நசரேத்துக்குதான் தனது தூதரை அனுப்பி மீட்பின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்.

இது நமக்கு ஒரு பாடம்.

யாரையும் சிறியவர் என்று ஒதுக்கக்கூடாது.

புனித சிறுமலர் தெரசா புனித சவேரியார் அளவுக்குப் பெரிய வேத போதக நாடுகளின் பாதுகாவலர்.

புனித சவேரியார் உலகம் எங்கும் வலம் வந்து மனம் திருப்பிய ஆன்மாக்களின் அளவுக்கு 

புனித சிறுமலர் தெரசா மடத்தில் இருந்து கொண்டே தன் செபவாழ்வால் மனம் திருப்பினார்.

நத்தனியேல் இயேசுவால் பன்னிரு சீடர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

நத்தனியேலின் இன்னொரு பெயர் பர்த்தலேமியு.

இவர் ஆர்மேனியாவில் நற்செய்தியை அறிவித்து வேத சாட்சியாக மரித்தார்.

நாமும் அவரைப் போல உண்மையான, கபடற்ற சீடராக வாழ்ந்து இயேசுவுக்கு சாட்சி சொல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment