Wednesday, August 28, 2024

" வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."(மாற்கு.7:15)

"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. 
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."
(மாற்கு.7:15)

கடவுள் நம்மைத் தன் சாயலில் படைத்திருக்கிறார்.

இறைவனின் சாயலில் இருப்பது
நமது ஆன்மா, அவரைப் போல் ஆவி, அவரது பண்புகளைக் கொண்டது.

நமது உடல் புறம், புறக்கண்ணால் பார்க்கப்படக் கூடியது.

நமது ஆன்மா அகம், புறக்கண்ணால் பார்க்கப்பட முடியாதது.

உடல் அழியக் கூடியது,
ஆன்மா அழிய முடியாதது.

இப்போது சொல்லாமலே புரியும்
உடலைச் சார்ந்த வாழ்க்கையை விட நமது ஆன்மீக வாழ்வே முக்கியமானது.

நாம் சுத்தமாக வாழ ஆசைப்படுகிறோம், சுத்தமாக வாழ்ந்தால் நோய் நொடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்புகிறோம்.

சுத்தமாக வாழ்வதற்காக தினமும் குளிக்கிறோம், சுத்தமான உடை அணிகிறோம், சுத்தமான உணவை உட்கொள்ளுகிறோம், சமையல் பாத்திரங்களையும், சாப்பாட்டுப் பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.

ஆனால் உடல் சுத்தத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மாவின் சுத்தத்துக்குக் கொடுக்கிறோமா?

நோய் நொடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசைப்படும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசைப்படுகிறோமா?

ஆசைப்பட்டாலும் முயற்சி செய்கிறோமா?

கை கழுவி விட்டு சாப்பிடும் நாம் ஆன்மாவைப் பாவத்திலிருந்து கழிவி விட்டு ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையை உட்கொள்கிறோமா?

சிந்திக்க அழைக்கப் படுகிறோம்.

கை கழுவாமல் உண்டு கொண்டிருந்த சீடர்களைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டிருந்த பரிசேயர்கள் பார்த்து இயேசு,

"நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

 உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.'' என்று கூறுகிறார்.

பாவமின்றி வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் கடவுளின்  கட்டளைகள் ஆன்மாவைச் சார்ந்தவை.

உடல் சுத்தத்தை வலியுறுத்தும் மனித மரபுகள் உடலைச் சார்ந்தவை.

பரிசேயர்கள் கடவுளின் கட்டளைகளைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விட மனித மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

மனித மரபுகளை மீறும் போது 
வெளியேயிருந்து உள்ளே செல்வது அழுக்கு.‌‌ 

அது ஆன்மாவைத் தீட்டுப்படுத்தாது.

ஆனால் இறைவன் கட்டளைகளை மீறும் போது 

 பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, 
 
தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு  ஆகிய பாவ எண்ணங்கள் கண், காது போன்ற பொறிகள் வழியாக ஆன்மாவுக்குள் நுழைவதோடு

பாவச் செயல்களாக வெளிப்படுகின்றன.

ஆனால் பாத்திரங்களில் அழுக்கு இருந்தால் அது உணவோடு உட்சென்று கழிவோடு வெளியேறி விடும்.

ஆகவே பாத்திரச் சுத்தத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆன்மீக சுத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஐம்பொறிகளின் வழியே பாவ எண்ணங்கள் ஆன்மாவுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்." இது குறள்.

"இயேசு சிலுவைப் பொறியில் நமக்காக தனது ஐம்பொறிகளையும் பலியாக்கினார். (அவித்தார்)

அவருடைய சீடர்களாகிய நாம் அவர் நெறி நின்று நமது ஐம்பொறிகளை அடக்கி வாழ வேண்டும்."

ஐம்பொறிகளை அடக்கி வாழ்ந்தால் நமது ஆன்மா பாவ அழுக்கு படாமல் வாழும்.
 
மனிதரைத் தீட்டுப் படுத்துவது உள்ளத்திலுள்ள தீய எண்ணங்கள் தான்.

பரிசேயர்களின் எண்ணப்படி வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும்  அழுக்கு கலந்த உணவு அவர்களைத் தீட்டுப்படுத்தும்.

இயேசுவின் போதனைப்படி  மனிதரின் உள்ளத்திலிருந்து வெளிவரும் தீய எண்ணங்கள் தான்  அவர்களைத் தீட்டுப் படுத்தும்.

நாம் நமது உள்ளத்தில் பாவ எண்ணங்கள் ஏறாதபடி கவனமாய் இருக்க வேண்டும்.

 பாவ எண்ணங்கள் ஏறாமலிருக்க வேண்டுமென்றால் கருணை, இரக்கம், மன்னிப்பு, தூய்மை போன்ற நற்குணங்களால் உள்ளம் நிறைந்திருக்க வேண்டும்.
 
உடலழகு அழகல்ல,
உள்ளழகே அழகு.

நமது உள்ளம் இறைவன் வாழும் இல்லம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment