"நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்"
(லூக்கா.4:43)
இயேசு கப்பர்நாகூம் ஊரில் நற்செய்தியை அறிவித்த பின் அங்கிருந்து புறப்பட்டார்.
ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பயன்பெற்ற அவ்வூர் மக்கள் அவரைப் போக விடாதவாறு தடுத்தனர்.
ஆனால் இயேசு, "என்னைத் தடுக்காதீர்கள். நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்." என்றார்
கப்பர்நாகூம் மக்கள் இயேசு அவர்களுக்குச் செய்த ஆன்மீக, உடல் ரீதியான நன்மைகளை முன்னிட்டு அவர் அவர்களுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
ஆனால் இயேசு அவர்களுக்காக மட்டும் உலகிற்கு வரவில்லை.
உலகினர் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கவும் அனைவருடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் உலகிற்கு வந்தார்.
அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லி விட்டு
யூதேயாவுக்குச் சென்று அங்குள்ள தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றினார்.
இயேசுவிடமிருந்து நாம் தெரிந்து கொண்ட மறை உண்மை நமது கிறிஸ்தவ வாழ்க்கையையும் இயக்க வேண்டும்.
நாம் இயேசுவின் சீடர்கள்.
நாம் நமக்காக மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ வில்லை.
நமது ஊரினர், நாட்டினர், உலகினர் அனைவருக்காகவும் நாம் வாழ்கிறோம்.
நாம் நம்மை நேசிப்பது போல நம்மை சூழ்ந்துள்ள அனைவரையும் நேசிக்க வேண்டியதன் நோக்கம் இதுதான்.
நாம் மீட்பு பெறுவதற்காக ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்.
நாம் நம்மை உண்மையிலேயே நேசித்தால் நம்மைப் போல நம்மை சூழ்ந்துள்ளவர்களும் மீட்பு பெற வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
அதற்காக அவர்களும் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் அறிய வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல இயேசுவுக்காக வாழ வேண்டும்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை நமக்கும் பொருந்தும்.
நாம் பல வகைகளில் நற்செய்தியை அறிவிக்கலாம்.
இறை அழைத்தலை ஏற்று குருக்களாக மாறி நற்செய்திப் பணியாற்றலாம்.
குடும்பத்தில் இருந்து கொண்டே
நம்மைச் சந்திப்பவர்களுக்கு இயேசுவைப் பற்றி எடுத்துக் கூறலாம்.
நற்செய்திக்கு எழுத்து வடிவம் கொடுத்து செய்தியை WhatsApp மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதன் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து நம்மை பார்ப்பவர்களுக்கெல்லாம் இயேசுவை அறிவிக்கலாம்.
நற்செய்தி பணி ஆற்றுபவர்களுக்கு அவர்கள் பணியில் உதவுவதற்காகப் பொருளுதவி செய்யலாம்.
நமது நற்செயல்கள் நமது விசுவாசத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க உதவுகின்றன.
எண்ணங்களில் இருந்து வார்த்தைகளும் செயல்களும் பிறப்பது உண்மையானால்
நமது செயல்களிலிருந்து நமது எண்ணங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளலாம்.
நமது எண்ணங்களுக்கு நமது விசுவாசம் காரணம்.
நமது செயல்களுக்கு நமது எண்ணங்கள் காரணம்.
ஒரே படிக்கட்டு வழியாக மேடைக்கு ஏறலாம், மேடையிலிருந்து இறங்கலாம்.
விசுவாசம், எண்ணங்கள், செயல்கள் இவை படிகளானால்
விசுவாசத்திலிருந்து எண்ணங்கள் வழியாக செயல்களுக்கு இறங்கலாம்.
நமது செயல்களைப் பார்ப்பவர்கள் அதில் ஏறி எண்ணங்கள் வழியாக விசுவாசத்தை அடையலாம்.
நமது செயல்களைப் பார்ப்பவர்கள் நமது விசுவாசம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வார்கள்.
செயல்களைப் பிறப்பிக்கும் விசுவாசம் தான் உயிருள்ள விசுவாசம்.
அதனால் தான் செயல்கள் இல்லாத விசுவாசத்தை செத்த விசுவாசம் என்கிறோம்.
நமது நற்செயல்களை பார்ப்பவர்கள் நமது விசுவாசத்தைக் கண்டு பிடித்து
தாங்களும் நம்மைப் போல் நற்செயல்கள் புரிவதற்காக நமது விசுவாசத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
நமது நற்செயல்கள் மூலம் நமது விசுவாசத்தைப் பரப்புகிறோம்.
வேறு வார்த்தைகளில் நமது வாழ்க்கையின் மூலம் நமது விசுவாசத்தைப் பரப்புகிறோம்.
இயேசு நற்செய்தியை வாழ்ந்து அறிவிப்பதற்காகத்தான் ஏழையாகப் பிறந்தார்,
ஏழையாக வாழ்ந்தார்,
ஏழையாக மரித்தார்.
நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான்
சென்றவிடமெல்லாம் எல்லோருக்கும் நன்மையையே செய்தார்.
நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான்
நோயாளிகளைக் குணமாக்கினார்.
நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான்
ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளித்தார்.
நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான்
பாடுகளின் போது அடிப்பவர்களுக்கு உடலை கொடுத்தார்,
முள் முடி சூட்ட தலையைக் கொடுத்தார்,
சிலுவையை ஏற்ற தோள்களைக் கொடுத்தார்,
உறிந்தவர்களுக்கு உடையைக் கொடுத்தார்,
இறுதியில் சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் போது அவர்களுக்கெல்லாம் மன்னிப்புக் கொடுத்தார்.
நாமும் நமது வாழ்க்கையில் என்ன செய்தாலும் நற்செய்தி அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டே செய்வோம்.
அதற்காக சிலுவையைச் சுமக்க வேண்டியிருந்தாலும் சுமப்போம்.
சிலுவைப் பாதை தான் நமது விண்ணகப் பாதை.
சிலுவையில் தொங்கியதால் தான் நல்ல கள்ளனுக்கு உடனே மோட்சம் கிடைத்தது.
நமக்கும் மோட்சம் கிடைக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment