Tuesday, September 10, 2024

''பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். (லூக்கா நற்செய்தி 6:37)


"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 
(லூக்கா நற்செய்தி 6:37)

நாம் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்களுடைய வெளிப்புறம் மட்டும் தான் நமக்குத் தெரியும்.

ஒருவனுடைய செயலின் தன்மையை, (சரியானதா தவறானதா என்பதை) தீர்மானிப்பது அவனுடைய நோக்கம். (Intention)

நோக்கம் மனதைச் சார்ந்தது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்," என்பார்கள்.

அது சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்றாக இருப்பவர்களுக்குப் பொருந்தும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களுக்குப் பொருந்தாது.

சிந்தனை மனதைச் சார்ந்தது.

மனது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

ஆகவே ஒருவனுடைய செயலை வைத்து அவன் நல்லவனா கெட்டவனா என்று நம்மால் தீர்ப்பிட முடியாது.

ஆகவே தான் இயேசு,

"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.'' என்று சொல்கிறார்.

உண்மையிலேயே  அயோக்கியர்களாக வாழ்ந்தவர்கள் கூட சாகும் தருவாயில் மனம் திரும்பி சாக வாய்ப்பு இருக்கிறது.

கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை முயற்சி செய்பவன்கூட இறுதி வினாடியில் உத்தம மனஸ்தாபப்பட வாய்ப்பு இருக்கிறது.

மிகப்பெரிய பாவத்தின் அளவைவிட இறைவனின் இரக்கத்தின் அளவு பெரியது.

இறைவனின் இரக்கத்திற்கு அளவில்லை.

சிலர் கண்களுக்கு நல்ல காரியங்களில் உள்ள ஒருசில  வேண்டாத  அம்சங்கள் மட்டும் தெரியும்.  (pessimist)


சிலர் கண்களுக்கு கெட்ட காரியங்களில் உள்ள ஒருசில நல்ல அம்சங்கள் தெரியும்.
(Optimists)

யாரும் முழுமையாகக் கெட்டவன் அல்ல. 


தாய்த் திருச்சபை திருச்சிலுவை வழிபாட்டு செபத்தில்,

''ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!


இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால் பாக்கியமான குற்றமே!''

என்ற வார்த்தைகளைச் சேர்த்துள்ளது.

மீட்பர் பிறப்பதற்குக் காரணமாக இருந்ததால்

பாவத்தைப் "பாக்கியமான பாவமே" என்று திருச்சபை அழைக்கிறது.

கெட்டதில் கூட  ஒரு நன்மையான அம்சம்‌ இருக்கலாம்.


தற்கொலை செய்து கொண்ட யூதாஸ் கடைசி வினாடியில் மனம் திரும்பியிருக்கலாம் என்று நம்புபவர்கள் இறைவனின் இரக்கத்தில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள்.

இறைவனின் இரக்கத்தின் பயனை அவர்கள் அடைவார்கள்.

ஞானோபதேச வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"யூதாஸ் பற்றி உங்கள் கருத்து என்ன?"

ஒரு மாணவன் சொன்னான்,

''யூதாஸ் பணத்தை விட இயேசுவை அதிகம் நேசித்தான்."

"அவன் பணத்துக்காகத்தானே இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்!"

"உண்மைதான். அவன் பணத்தை அதிகம் நேசித்தான்.

பணத்துக்காகத்தான் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்.

ஆனால் இதற்கு முன் பல முறை நடந்தது இயேசு அகப்படாமல் போய்விடுவார் என்று நினைத்திருக்கலாம். 

ஆனால் அவனது எதிர்பார்ப்புக்கு மாறாக இயேசுவுக்கு மரணத் தீர்ப்புக் கிடைத்து விட்டதால் 

"மாசில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே"

என வருந்தி 

வாங்கிய பணத்தை வீசி ஏறிந்து விட்டான்.

இயேசுவை விடப் பணத்தை அதிகம் நேசித்திருந்தால் பணத்தை வீசி ஏறிந்திருப்பானா?''

அந்த மாணவன் தீமையிலுள்ள நல்லதையும் பார்த்தான்.

"அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்."

தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை
அறுப்பான். 

இது இயற்கையின் நியதி.

நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடாவிட்டால்

மற்றவர்கள் நம்மைத் தீர்ப்பிட மாட்டார்கள்.

நாம் மற்றவர்களை மன்னித்தால் கடவுள் நம்மை மன்னிப்பார்.

நாம் மற்றவர்களைப் பார்த்து நல்லவர்களா, கெட்டவர்களா என்று ஆராய்ச்சி செய்வதை விட நம்மை நாமே ஆராய்வோம்.

ஆன்மா பரிசோதனை செய்வோம்.

இயேசுவை எந்த அளவுக்கு நேசிக்கிறோம், எந்த அளவுக்கு அவரது கட்டளைகளை அனுசரிக்கிறோம் என்பதை ஆராய்வோம்.

நம்மிடம் இருக்கிற தவறுகளைக் கண்டு பிடித்து அவற்றைத் திருத்த முயல்வோம்.


அப்படியானால் மற்றவர்களைத் திருத்தக் கூடாதா?

முதலில் நமது கண்ணிலுள்ள விட்டத்தைக் கண்டு பிடித்து,

அதை அப்புறப்படுத்தி விட்டு தான் மற்றவர்கள் கண்ணிலுள்ள தூசியை அப்புறப்படுத்த விரும்பலாம்.

ஆசிரியர்  சரியான நேரத்தில் பள்ளிக்கு வரும்படி மாணவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்.

ஆனால் அவர் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் அவருடைய அறிவுரை செல்லுபடியாகும்.

இது பெற்றோருக்கும் பொருந்தும்,

ஆள்பவர்களுக்கும் பொருந்தும்,

நண்பர்களுக்கும் பொருந்தும்.

எல்லோருக்கும் பொருந்தும்.

நாம் சரியாக நடந்து காட்டுவோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மைப் போல நடப்பார்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment