Friday, September 27, 2024

"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(மத்தேயு நற்செய்தி 18:3)

 "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:3)

சவுளிக் கடையிலிருந்து வாங்குகின்ற வேட்டி வாங்கும் போது மிகவும் சுத்தமாக இருக்கிறது.

ஏனெனில் அது இன்னும் அழுக்குகள் நிறைந்த வெளி உலகுக்கு வரவில்லை.

ஆனால் அதை உடுத்திக் கொண்டு ஒருநாள் தெருவில் நடந்தால் சுற்றுப் புறத்தில் உள்ள தூசிகள் பட்டு அழுக்கானதாக மாறி விடும்.

திரும்ப அதைச் சுத்தமானதாக மாற்ற வேண்டுமென்றால் அதைச் சோப்புப் போட்டு, அடித்துத் துவைக்க வேண்டும்.

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உள்ளம் பாவ மாசு இன்றி பரிசுத்தமாக இருக்கும்.

பிறக்கும் போதும் அப்படியே இருக்கும்.

ஏனெனில் அதற்கு பாவம் என்றால் என்னவென்றே தெரியாது.

ஆகவே பாவம் செய்ய முடியாது.

ஆகவே சிறு குழந்தைகளின் ஆன்மா மிகவும் பரிசுத்தமானதாக இருக்கும்.

பரிசுத்தமான ஆன்மாவால்தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.

ஆனால் குழந்தை வளர வளர அதற்குப் பாவ புண்ணியம் பற்றி விபரம் தெரிய ஆரம்பிக்கும்.

என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற விபரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

அதன் பிறகுதான் பாவம் அதற்குள் நுழைய ஆரம்பிக்கிறது.

நாம் வளர்ந்தவர்கள்.

பாவம் செய்யக் கூடாது என்று அறிந்தவர்கள், ஆனால் செய்யக் கூடியவர்கள்.

நம்மால் எப்போதும் சிறு பிள்ளைகளாக வாழ முடியாது.

ஆனால் சிறு பிள்ளைகளைப் போல பரிசுத்தமானவர்களாக வாழலாம்.

சிறு பிள்ளைகள் பாவம் செய்யாமல் இருப்பது போல நாமும் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும், அவ்வளவு தான்.

பாவச் சுவையோடு நம்மால் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

ஆகவே தான் நாம் சிறு பிள்ளைகளைப்போல் மாற வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

சிறு பிள்ளைகளின் முக்கியமான குணம் தாழ்ச்சி.

தனது இயலாமையை அது ஏற்றுக் கொள்ளும்.

அதனால் தான் அது முழுக்க முழுக்க தனது பேற்றோரைச் சார்ந்திருக்கும்.

தனது பெற்றோரை அது நம்பும்.

அவர்கள் சொன்னபடி செய்யும்.

சிறு பிள்ளைகளிடம் எளிமை
(Simplicity) இருக்கும்.

திறந்த மனது இருக்கும்.
(Open minded)

கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும்.,

அனைத்துக்கும் மேலாக மாசு மருவற்ற தன்மை இருக்கும்.

நாம் பிள்ளைகளைப் போல் மாற வேண்டுமென்றால் 

நம்மிடம் தாழ்ச்சி,

 இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல்,

ஆன்மா சார்ந்த செயல்களுக்கு ஆன்ம குருவை (Spiritual Director)
சார்ந்திருத்தல், 

அவரை நம்புதல்,

அவர் காட்டும் வழியில் நடத்தல்

எளிமை,

திறந்த மனது,

கற்றுக் கொள்ள ஆர்வம்,

மாசு மருவற்ற தன்மை 

போன்ற பண்புகள் நமக்கு இருக்க வேண்டும்.

சிறுவர்களின் பண்புகள் நம்மிடம் இருந்தால்‌ நமது ஆன்மீக வாழ்வு பரிசுத்தமானதாக இருக்கும்.

இந்த பண்புகள் அனைத்தும் நம்மிடம் இருந்தால் தாய்த் திருச்சபையின் சொற்படி நடப்போம்.

சிறுவர்கள் தான் தாயின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குவார்கள்.

சிறுவர்கள் தான் தாயின் அருகிலேயே இருக்க ஆசைப்படுவார்கள்.

சிறுவர்கள் தான் தாயை மகிழ்ச்சிப் படுத்த ஆசைப் படுவார்கள்.

சிறுவர்கள் தான் தாய் மகிழும் போது மகிழ்வார்கள்.

சிறுவர்களுக்கு தாய்தான் எல்லாம்.

நாமும் சிறுவர்களைப் போல, தாய்த் திருச்சபையின் அரவணைப்பில் பாவ மாசில்லாமல் பரிசுத்தர்களாய் வாழ்வோம்.

விண்ணக வாழ்க்கையை உரிமையாக்குவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment