Friday, September 27, 2024

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."(லூக்கா நற்செய்தி 10:5)

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."
(லூக்கா நற்செய்தி 10:5)

இயேசு 72 சீடர்களை நற்செய்தி அறிக்க அனுப்பிய போது அவர்களுக்கு அளித்த அறிவுரைகளில் ஒன்று,

"நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்."

மொத்த பைபிள் செய்தியையும் ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் 

"சமாதானம்."

சமம் + தானம் = சம நிலை.

சம நிலையில் உள்ளவர்களுக்கு இடையேதான் சமாதானம் நிலவ முடியும்.

கடவுள் அளவில்லாதவர். மனிதன் அளவுள்ளவன்.

கடவுள் நித்தியர். மனிதன் துவக்கமும் முடிவும் உள்ளவன்.

சமநிலையில் இல்லாத இவர்களுக்குள் எப்படி சமாதானம் நிலவ முடியும்?

அதற்காகத்தான் கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்து அவனோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

இயல்பில் மனிதன் ஒன்றுமில்லாதவன்.

அவனிடம் இருப்பதெல்லாம் இறைவன் கொடுத்தது.

கடவுள் பரிசுத்தர்.

பரிசுத்தமானவர்களால் தான் அவரோடு சமாதானமாக இருக்க முடியும்.

ஆகவேதான் மனிதனைப் பரிசுத்தமானவனாகப் படைத்தார்.

படைக்கப் படும்போது மனிதனிடம் பாவமில்லை.

மனிதன் பரிசுத்த நிலையில் இருந்ததால் பரிசுத்தரான கடவுளோடு சமாதானமாக இருந்தான்.

ஆனால் பாவம் செய்த வினாடியே மனிதன் பரிசுத்தத் தனத்தை இழந்தான், சமாதானத்தையும் இழந்தான்.

இது பழைய ஏற்பாட்டின் சுருக்கம்.

இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனுவுரு எடுத்தார்.

மனிதனை விண்ணகம் நோக்கி அழைக்க இறைமகன் மண்ணகம் நோக்கி இறங்கி வந்தார்.

இது புதிய ஏற்பாட்டின் சுருக்கம்.

இறைமகன் மனுவுரு எடுத்த நாளில் வானவர் பாடிய கீதம்,

"உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக.

பூமியில் நல் மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக."

ஆக பழைய ஏற்பாட்டில் மனிதன் இழந்த சமாதானத்தை 

புதிய ஏற்பாட்டில் கடவுள் மீட்டுத் தந்தார்.

மீட்டுத் தந்த சமாதானத்தை இழந்து விடாமல் பாதுகாப்பது தான் கிறிஸ்தவ வாழ்க்கை.

இயேசு கொண்டு வந்த சமாதானத்தின் நற்செய்தியை உலகெங்கும் பரப்புவதன் மூலம் 

உலக சமாதானத்திற்காக உழைக்க வேண்டும்.

இயேசுவின் அறிவுரைப்படி
யாரைப் பார்த்தாலும்,

 "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக." 

என்று வாழ்த்த வேண்டும்.


அதற்கு " பாவ மாசு இல்லாமல் பரிசுத்தராக வாழுங்கள்."    என்பது பொருள்.

பரிசுத்தர்களுக்குதான் பரலோக வீடு.

ஆகவே "சமாதானம் உண்டாகுக"
என்று வாழ்த்தும் போது 

"உங்களுக்கு விண்ணக வீடு உரித்தாகுக" என்று வாழ்த்துகிறோம்.

மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் போதெல்லாம் நமக்கு நமது விண்ணக வீடு ஞாபகத்துக்கு வரவேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு மத்தியானம் மணி அடித்தவுடன் 

சாப்பாடு ஞாபகத்துக்கு வருவது போல மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் போதெல்லாம் நமக்கு விண்ணக வீடு ஞாபகத்துக்கு வர வேண்டும்.

நாம் மற்றவர்களை ஒவ்வொரு நாளும் முதல் முறை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு விண்ணக வீட்டை ஞாபகப் படுத்த வேண்டும்.

நாமும் நம்மை ஆன்மப் பரிசோதனை செய்து 

நமக்கு நாமே விண்ணக வீட்டை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்போதும் விண்ணக வீட்டின் ஞாபகமாக வாழ்ந்தால் பாவம் செய்ய மாட்டோம்.

அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment