"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 9:35)
தாழ்ச்சி அனைத்துப் புண்ணியங்களின் அரசி என்பார்கள்.
Humility is the queen of all the virtues.
நமது உண்மையான நிலையை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.
நமது உண்மையான நிலை ஒன்றுமில்லாமைதான்.
நாம் தாயின் வயிற்றில் கருவுருவதற்கு முந்தைய நிலைதான் நமது உண்மையான நிலை.
நமது ஆன்மாவும் உடலும் அவற்றுக்குரிய பண்புகளும் இறைவனால் தரப்பட்டவை.
நான் என்றால் இறைவனால் படைக்கப்பட்ட நான் என்றுதான் அர்த்தம்.
நமக்குள்ள திறமைகள் இறைவனால் நமக்குத் தரப்பட்டவை.
வெளியூருக்குப் போகும் போது ஒரு லாட்ஜில் தங்குகிறோம்.
லாட்ஜ் என்றால் வாடகைக்கு அறைகள் எடுத்துத் தங்குமிடம்.
வாடகை அறை எவ்வளவு வசதிகள் உள்ளதாக இருந்தாலும் அது நமக்கு உரியது அல்ல.
லாட்ஜ் விதிமுறைகளுக்கு மாறாக நமது விருப்பம் போல் அதைப் பயன்படுத்த முடியாது.
நமது உடல் நாம் தங்கியிருக்க இறைவன் தந்தருளிய வாடகை அறை தான்.
இறைவன் தந்த விதிமுறைகளுக்கு மாறாக அதைப் பயன்படுத்தக் கூடாது.
விதிமுறைகளுக்கு மாறாக அதைப் பயன்படுத்தியதன் விளைவுதான் நமது இன்றைய நிலை.
இன்றைய இறைவசனம் நமக்குத் தரும் வாழ்க்கை நெறி என்ன?
முதல்வனாக இருக்க விரும்புவது சாதாரண மனிதனின் இயல்பு.
கடைசியானவனாக இருக்க விரும்வது உண்மையான ஆன்மீக வாதியின் இயல்பு.
நமது வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒரு உதாரணம்.
பேருந்து நிலையத்தில் பேருந்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
பேருந்து வருகிறது.
முதல் இடத்தில் உட்காருவதற்காக முண்டியடித்து முதலில் ஏறுபவன் சாதாரண மனிதன்.
ஏறி அமர மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு,
உட்கார இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை,
நின்று கொண்டு பயணிக்கலாம் என்று நினைத்து
கடைசியில் ஏறுபவன் உண்மையான ஆன்மீகவாதி.
இறைவன் முன் அவன்தான் முதல்வன்.
பந்தியில் அமர முதல் இடத்தில் உட்கார ஓடுபவன் சாதாரண மனிதன்.
மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு கடைசி இடத்தில் அமர்பவன்
உண்மையான ஆன்மீகவாதி.
இறைவன் முன் அவன்தான் முதல்வன்.
அப்படி அமர்ந்ததால் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அவன் பாக்கியசாலி.
ஏனெனில் அவன் தனது உணவை மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கிறான்.
மற்றவர்கள் மீது அதிகாரம் செய்ய ஆசைப்படுவது சாதாரண மனித இயல்பு.
அனைவருக்கும் தொண்டு செய்ய ஆசைப்படுபவன் உண்மையான ஆன்மீகவாதி.
இறைவன் முன் அவன்தான் ஆள்பவன்.
இதைச் செயல் மூலம் போதிப்பதற்காகத்தான் அரசரான இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.
உலக அரசில் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் வாதாடுகிறார்.
இறையரசில் குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று நீதிபதியே (இயேசுவே) பரிந்துரை செய்கிறார்.
குற்றவாளிகள் செய்ய வேண்டிய பரிகாரத்தை நீதிபதியே செய்கிறார்.
மனிதன் நித்திய காலமும் விண்ணகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக
மரிக்கவே முடியாத இறைவன் மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகத்
தானே மனிதனாகப் பிறந்து மரித்திருக்கிறார்.
நமக்கு உயிர் கொடுக்கத் தன் உயிரைக் கொடுத்தார் இறைமகன்.
மனித எண்ணங்களுக்கு எதிர் மாறானவை இறை எண்ணங்கள்.
நாமும் அவரைப் போலவே எண்ண வேண்டும் என்று ஆசிக்கிறார்.
கூட்டத்தில் கடைசி இடத்தைப் பிடி, அதுவே முதல் இடம்.
பிறருக்கு கொடுக்க வேண்டுமா, உன்னிடம் உள்ளதை இழக்க வேண்டும்.
இழப்பது தான் கொடுப்பது.
பேரின்பம் வேண்டுமா, சிற்றின்பத்தைக் கைவிடு.
வாழ வேண்டுமா, உயிரைக் கொடு.
நீ சம்பாதிக்கும் பொருள் எப்போதும் உன்னோடு இருக்க வேண்டுமா, பிறருக்கு தருமம் கொடுத்து உனது பொருளை அருளாக மாற்று.
விண்ணில் வாழ வேண்டுமா, மண்ணில் மரிக்க வேண்டும்.
புனித வெள்ளியின் ஆண்டவர் தான் , உயிர்ப்பு ஞாயிற்றின் ஆண்டவர்.
மரிப்பவனால் மட்டுமே உயிர்க்க முடியும்.
பிறருக்காக மரிப்பவன்தான் தனக்காக வாழ்கிறான்.
நினைவில் வைத்துக் கோள்வோம்,
இயேசு தனது மரணத்தின் மூலம்தான் நமக்கு நித்திய வாழ்வைத் தந்தார்.
நமது பிறரன்பு வாழ்விலும் இதையே பின்பற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment