Tuesday, September 17, 2024

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 9:13)

 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 9:13)

இயேசு எதற்காக உலகுக்கு வந்தார்?

நம்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக, 

தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்து நம்மை மீட்பதற்காக.

காரணம் இரக்கம்,
காரியம் பலி.

Cause mercy.
Effect sacrifice.

அன்பின் காரணமாக நம்மைப் படைத்தார்.

நாம் அன்பை மீறி பாவம் செய்தோம்.

இரக்கத்தின் காரணமாக நமது மீட்புக்காகத் தன்னையே பலியாக்கினார்.

இயேசுவின் சிலுவை மரணத்தில் இரக்கமும், பலியும் பின்னிப் பிணைந்துள்ளன.

Mercy and sacrifice are intertwined.

ஏன் இயேசு பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்று சொல்கிறார்?

புரிவதற்காக,

ஒரு பசு ஒரு கயிற்றினால் மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அப்பா மகனைப் பார்த்து சொல்கிறார்,

"பசுவைத் தொடக்கூடாது. அதை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்."

அப்பா சொல்வதன் பொருள் மகனுக்குப் புரிந்து விட்டது.

அவன் கயிற்றைத்தான் தொட்டு இழுத்தான்.

மாடு அவன் பின்னால் சென்றது.

ஏன்?

மாடும் கயிறும் பிணைக்கப் பட்டுள்ளன.

வகுப்பில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் கையில் பிரம்பை எடுத்தார்.

மாணவர்கள் அமைதியானார்கள்.

பிரம்புக்கும் அமைதிக்கும் என்ன‌ சம்பந்தம்?

பிரம்பைப் பார்த்தவுடன் அடி ஞாபகத்துக்கு வருகிறது.

 அடி ஞாபகத்துக்கு வந்தவுடன் வலி ஞாபகத்துக்கு வருகிறது.

வலி ஞாபகத்துக்கு வந்தவுடன் அமைதி வந்து விடுகிறது.

அதேபோல் தான் இறைவனின் செயல்களிலும் 

அன்பு ---> இரக்கம் ---> பலி.

நம்மிடமிருந்தும் அதையே விரும்புகிறார்.

நம்மிடம் உள்ள அன்பிலிருந்து இரக்கம் பிறக்க வேண்டும்.

இரக்கம் இருந்தால் நமது அயலான் ஏதாவது தேவையில் இருக்கும்போது அவனுக்கு உதவுவோம்.

அது நற்செயல்.

உதவி செய்யும்போது நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும், நமது நற்செயலையும் இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்போம்.

இரக்கம் இல்லாத பலி பலியே அல்ல.

வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை.

ஞாயிற்றுக்கிழமை.

8 மணிக்குத் திருப்பலி.

ஏழு மணிக்குத் திருப்பலிக்கு இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது,

மனைவி ஏதோ சொல்ல,

கணவன் கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.

அடித்த அறையில் அவள் கீழே விழுந்து விட்டாள்.

"அப்படியே கிட. பூசைக்கு நேரம் ஆகிறது." என்று சொல்லி விட்டு கோவிலுக்குப் போய் விட்டான்.

திருப்பலி ஆரம்பிக்கும் முன்பே கோவிலுக்கு வந்து விட்டான்.

அவன் ஒப்புக் கொடுத்த பலி இறைவனுக்கு ஏற்றதாக இருக்குமா?

ஆண்டவர் சொல்வார்,

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

இரக்கம் இன்றி உனது மனைவியை அடித்துவிட்டு எனக்கு வந்து கொடுப்பதற்குப் பெயர் பலியா?

நான் விரும்புவது இரக்கத்தை.
இரக்கம் நற்செயல்களை விளைவிக்கும். நற்செயல்களை எனக்கு ஒப்புக் கொடு.

இரக்கத்தினால் பெறப்படும் பலியே எனக்கு ஏற்ற பலி.

இரக்கம் இல்லாமல் ஒப்புக் கொடுக்கப் படுவது பலியே அல்ல."

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." 


 "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 
(மத்தேயு நற்செய்தி 22:37,39)

பிறரன்பு இறையன்புக்கு இணையானது என்று ஆண்டவர் சொல்கிறார்.

நமது ஒவ்வொரு பிறனிலும் இறைவன் இருக்கிறார்.

நம்மிடம் உண்மையாகவே இறையன்பு இருந்தால்,

 பிறரன்பு தானாகவே வந்துவிடும்.

நம்மிடம் பிறர் அன்பு இல்லாவிட்டால் இறையன்பும் இல்லை என்று தான் அர்த்தம்.

பிறர் அன்பு இல்லாதவன்

"நான் கடவுளை நேசிக்கிறேன்."

என்று சொன்னால் அவன் பொய்யன். 

வீட்டின் முன் வந்து நிற்கும் ஏழைக்கு ஒரு வாய் உணவு கொடுக்காமல்

கோவிலில் இலட்சக்கணக்கில் செலவழித்து அசன விருந்து போட்டால் அதை இறைவன் ஏற்க மாட்டார்.

ஒரு ஏழைக்கு வயிறார உணவு போட்டு விட்டு, 

அந்த நற்செயலைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் 

அதுதான் அவருக்கு ஏற்புடையதாக இருக்கும்.


"ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். 

ஏனெனில் என்று சொன்னாலே அதற்கு பின்வரும் வார்த்தைகள் அதற்கு முந்திய கூற்றுக்கான
காரணம் என்று அர்த்தம்.

இயேசு இரக்கத்தையே விரும்புவதற்கான காரணம் அவர் பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததுதான்.

அவர் இரக்கத்தின் காரணமாக பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததால்தான் நம்மிடமும் இரக்கத்தை விரும்புகிறார்.

அவர் பாவிகளை விரும்புவதற்குக் காரணம் அவரது இரக்கம்.

 அவர் இரக்கம் உள்ளவர் ஆகவே நம்மிடமும் இரக்கத்தை விரும்புகிறார். 

அவர் எல்லோரிடமும் இரக்கமாக இருக்கிறார். ஆகவே நாமும் அவரைப் போலவே எல்லோரிடமும் இரக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவர் நம்மைத் தனது சாயலில் படைத்தார். இரக்கம் அவரது சாயலில் ஒரு அம்சம். நாம் இரக்கமாக இல்லாவிட்டால் அவரது சாயல் நம்மிடம் இருக்காது.

அவரது சாயலில் நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். 

"தாயைப் போல பிள்ளை" என்பது தமிழ்ப் பழமொழி.

"படைத்தவரைப் போல படைக்கப்பட்டவன்" 
என்பது இறை மொழி.

 "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்."
(தொடக்கநூல் 1:26)

நாம் அனைவரும் பாவிகள். 

இயேசு பாவிகளை அழைக்க உலகுக்கு வந்ததால் நாமும், மற்றவர்களும் மனம் திரும்பி நல்லவர்களாக மாற வேண்டும்.

நாம் மனம் திரும்புவதோடு மற்றவர்களும் மனம் திரும்ப அவர்களுக்கு உதவ வேண்டும். 

இது நமது முக்கியமான பிறரன்புப் பணி.

"நேர்மையாளரை அல்ல."

இயேசு நேர்மையாளரை அழைக்க வரவில்லையா?

எதிர்க் கேள்வி,

நோயாளிக்கு மருத்துவர் தேவை, 

அப்படியானால் நோய் இல்லாத மருத்துவரின் மனைவிக்கு அவளுடைய மருத்துவ கணவர் தேவை இல்லையா?

நோயாளி என்னும் முறையில் நோயாளிக்கு மருத்துவர் தேவை.

மனைவி என்னும் வகையில் அவளும் அவருக்குத் தேவை. 

பாவிகள் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ஆகவே அவர்களுக்கு மீட்பர் தேவை. 

மீட்பரைப் பயன்படுத்தி பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் நேர்மையாளர்.

எல்லா பாவிகளும் நேர்மையாளர்களாக மாற வேண்டும் என்பதையே இயேசு விரும்புகிறார்.

எல்லோரும் நேர்மையாளர்களாக மாறி இயேசுவோடு இணைந்து மோட்சத்துக்குச் சென்று விட்டால் 

அதன் பின் இறைமகன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.

தான் உலகிற்கு வந்ததன் முக்கியமான நோக்கத்தை நமக்கு விளக்குவதற்காகத் தான் இயேசு,

"நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று கூறினார். 

இயேசு மனிதனாக பிறந்ததன் நோக்கம் நிறைவேறிய பின் 

அவரது மீட்பை ஏற்றுக் கொண்ட அனைவரும் அவரோடு விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment