Saturday, September 14, 2024

" இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.". (லூக்கா நற்செய்தி 7:32)


"இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்."
(லூக்கா நற்செய்தி 7:32)

திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றினார். 

 மக்களில்  வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். 

ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். 

இவர்களைக் குறித்து தான் இயேசு 


"இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்."

என்று உருவகத்தில் கூறுகிறார்.


சந்தைவெளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன விளையாட்டு?

 ஒரு குழந்தை மற்றவர்களைப் பார்த்து கூறுகிறது,

"நாங்கள் சந்தோசமான‌ இசையில் பாடினோம்.  ஆனால் நீங்கள் அதற்கு ஏற்றபடி நடனமாடவில்லை.

நாங்கள் ஒப்பாரி வைத்தோம், நீங்கள் அதற்கு ஏற்றபடி அழவில்லை."

இப்படி ஒருவருக்கொருவர் சொல்லி விளையாடுகிறார்கள்.

இது இயேசுவின் கால யூத சிறுவர்களின் விளையாட்டு.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம் காலத்துக்கு வருவோம்.

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.

Mike setல் மகிழ்ச்சிகரமான பாட்டு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதைக் கேட்கும் அங்குள்ள சிறுவர்கள் நடனம் ஆடுவார்கள், ஆடா விட்டால் அவர்கள் இசையை ரசிக்கவில்லை என்று அர்த்தம்.

ஒரு இழவு வீட்டுக்குப் போகிறோம்.  அங்கு ஒப்பாரி பாடல் போடுகிறார்கள்.

அதற்கு ஏற்றபடி இழவு வீட்டுக்கு வந்தவர்கள் அழ வேண்டும்.

அழுவதற்குப் பதில் சிரித்தால் என்ன அர்த்தம்?

அழுவாரோடு  சிரிப்பவர்களும்,
சிரிப்பாரோடு அழுபவர்களும் 
எப்படிப் பட்டவர்கள்?

திருமுழுக்கு அருளப்பரின் போதனைப்படி நடக்காத பரிசேயர்களும் அப்படிப் பட்டவர்கள்.

என் வயதுள்ள பெரியவர்களுக்கு நான் சொல்லப் போவது புரியும்.

நான் சிறுவனாக இருக்கும் போது பெரிய வியாழன் இரவு ஆரம்பிக்கும் நற்கருணை ஆராதனை பெரிய வெள்ளிக் கிழமை சிலுவைப் பாதை வரை இடைவிடாது தொடரும்.

விடிய விடிய ஏராளமானோர் நற்கருணை நாதர் முன் மண்டியிட்டும், அமர்ந்தும் இருப்பார்கள்.

விடிய விடிய வியாகுலப் பிரசங்கம் பக்தி உணர்வுடன் வாசிக்கப் படும்.

மக்கள் விடிய விடிய ஆண்டவரின் பாடுகளைக் கேட்டு அழுது கொண்டேயிருப்பார்கள்.

நானும் என் தம்பியும் சிறுவர்கள். எங்களை அம்மா அவர்கள் பக்கத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.

அம்மா அழுவதைப் பார்த்து நாங்களும் அழுவோம்.

வியாகுலப் பிரசங்கம் வாசிப்பவர் அவ்வளவு உருக்கமாக வாசிப்பார்.

இப்போது அன்பியம் வாரியாக நள்ளிரவு வரை தானே ஆராதனை இருக்கிறது.

காலம் மாறிப் போச்சு.

பரிசேயர்களைப் பொறுத்தவரை திருமுழுக்கு அருளப்பரிடம் மட்டுமல்ல, இயேசுவிடமும் அப்படித்தான் நடந்து கொண்டார்கள்.

பாமர மக்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கவும், தங்கள் நோய் நொடிகள் குணமாகவும் இயேசுவின் பின் சென்றார்கள்.

ஆனால் பரிசேயர்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் குறை கண்டு பிடிக்கவும், அவரைத் தொலைப்பதற்காக வழி காணவும் அவர் சென்ற இடமெல்லாம் சென்றார்கள்.

பாடலுக்கு ஏற்றபடி ஆடமுடியாத குழந்தைகளைப் போல 

இயேசுவின் போதனைப்படி வாழாமல் தங்கள் விருப்பப்படி வாழ்ந்தார்கள்.

நமது நிலைமை எப்படி?

தினமும் நற்செய்தியை வாசிக்கிறோம், அதன்படி வாழ்கிறோமா?

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலி காண்கிறோமா? அதில் பங்கேற்கிறோமா?/

வாசகங்களைக் கேட்கிறோமா? தியானிக்கிறோமா?

பிரசங்கத்தைக் கேட்கிறோமா?ன கவனிக்கிறோமா?

கேட்க மட்டும் செய்பவர்கள் இடையில் தூங்கிவிடுவர்,

பிரசங்கம் முடிந்த பின் "சுவாமியார் என்ன சொன்னார்?" என்று கேளுங்கள். கையை விரிப்பார்கள்.

கவனிப்பவர்கள் வாழ்வுக்கு பிரசங்கம் வழிகாட்டியாய் இருக்கும்.

திவ்ய நற்கருணையை உணவாக வாங்குகிறோமா?
பண்டமாக வாங்குகிறோமா?

உணவாக வாங்குவோர் நாவில் வாங்குவர்.

பண்டமாக என்று கையில் வாங்குவர்.
.
ஆண்டவரை உணவாகப் பெற்றபின் கால்மணி நேரமாவது அவரோடு பேசுகிறோமா?

அல்லது 

சுவாமியார் "சென்று வாருங்கள்" என்று சொல்லுமுன்பே சென்று விடுகிறோமா?

திருமண வீட்டின் விருந்து ருசி அடுத்த விருந்து வரும் வரை ஞாபகத்தில் இருக்கும்.

இயேசுவின் ருசி அன்று முழுவதுமாவது ஞாபகத்தில் இருக்குமா?

" ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(திருப்பாடல்கள் 34:8)

ஒரு சிறு பள்ளிக்கூட அனுபவம் நினைவுக்கு வருகிறது.

1953, St. Mary's Madurai யில் ஒன்பதாவது வகுப்பில் படித்த போது நிகழ்ந்தது.

Hostel மாணவன்.

காலை திருப்பலி முடிந்து படிப்பறைக்கு வந்த பின்தான் கவனித்தோம், எங்கள் சட்டையின் முன்புறம் ஆங்காங்கே மைப்புள்ளிகள்.

கையைப் பார்த்தோம், ஆட்காட்டி விரலில் மை.

ஒரு மாணவன் வேகமாக கோவிலுக்கு ஓடி, தீர்த்தத் தொட்டியைப் பார்த்து விட்டு வந்தான்.

யாரோ தீர்த்தத்தில் மையை ஊற்றியிருக்கிறார்கள்.

wardenனுக்கு புகார் பறந்தது.

அவர் படிப்பறைக்கு வந்து, மாணவர்களைப் பார்த்தார்.

ஒரு மாணவன் சட்டையில் மட்டும் மை இல்லை.

"உண்மையைச் சொல். நீதான் தீர்த்தத்துக்குள் மை ஊற்றினாயா?"

"ஆமா, சுவாமி."

"ஏன்?''

"நண்பர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க."

"என்ன பாடம்?"

"சுவாமி, தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை அடையாளம் தானே போடணும்?"

"ஆமா.''

"மாணவர்களைக் கொஞ்சம் பாருங்கள். யாருமே சிலுவை அடையாளம் போடவில்லை.

   
சிலுவை அடையாளம்  போட்டிருந்தால் மைக்கறை நெற்றியிலும், நெஞ்சிலும், இரண்டு தோள்பட்டைகளிலும் தானே இருக்க வேண்டும்?

யாருக்காவது இருக்கான்னு பாருங்க.

முன் பக்கம் முழுவதுமே பொட்டு பொட்டா இருக்கு.

சும்மா விரல மைக்குள்ள முக்கித் தெளிச்சிருக்காங்க.

சிலருக்கு முதுகும் பக்கமும் தெளிச்சிருக்கு, 
இது பின்னால 
வந்தவன் பார்த்த வேலை.

ஒழுங்கா சிலுவை அடையாளம் போட நண்பர்களுக்கு கற்றுக் கொடுக்க நினைத்தேன்.

அதனால்தான் இப்படிச் செய்தேன்.

எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கள்.

அதை நண்பர்கள் திருந்த கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.''

வார்டனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மாணவர்களைப் பார்த்து,

"தம்பி சொல்றது புரியுதா?"

எல்லோரும் "புரிகிறது" என்றோம்.

சுவாமியார் மை ஊற்றியவன் நெற்றியில் சிலுவை அடையாளம் போட்டார்.

அவன்,"நன்றி, சுவாமி " என்றான்.

ஒழுங்காக சிலுவை அடையாளம் போடக் கற்றுக் கொள்வோம்.

இதற்கும் கட்டுரைத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?

"உங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வாருங்கள்" என்று சொன்னேன்,  

உங்களுக்குச் சிலுவை அடையாளம் கூடப் போடத் தெரியவில்லையே!" என்று ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்லிவிட்டுக் கூடாது.

ஆண்டவர் கூறியுள்ளபடி சிலுவையைப் பக்தியுடன் சுமப்போம்.

முதலில் ஒழுங்காகச் சிலுவை அடையாளம் போடக் கற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment