Saturday, September 21, 2024

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். (லூக்கா நற்செய்தி 9:3)

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். 
(லூக்கா நற்செய்தி 9:3)


நற்செய்திப்பணி புரிபவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்க வேண்டும்?

இறையாட்சிபற்றிப் பறைசாற்றத் தேவையான இறையறிவு இருக்க வேண்டும்.

தங்கள் விசுவாசம் உள்ள செபத்தினால் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்க

முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.

நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

பேய்களையெல்லாம் அடக்கவும் சாத்தானின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

நமது முதல் பெற்றோர் பாவத்தின் விளைவாக சாத்தானின் பிடியில் விழுந்தனர்.

மக்கள் பாவ மன்னிப்புப் பெற்று சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

ஆகவே நற்செய்தியை அறிவிப்பவர்கள் மக்கள் பாவ மன்னிப்பு பெறுவதில் ஆர்வம் காட்டும்படி அவர்களைத் தூண்ட வேண்டும்.

திருப்பலியில் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ,

ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கம் கேட்பது எவ்வளவு முக்கியமோ,

திருவிருந்தில் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ

அவ்வளவு முக்கியம் பாவ சங்கீர்த்தனம் செய்வது என்பதை மக்கள் உணர வேண்டும்.

வர வர மக்களிடையே பாவ சங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

தூய உள்ளத்தோடு திருவிருந்தில் பங்கேற்க வேண்டும் என்ற உண்மையை‌ காலப் போக்கில் மக்கள் மறந்து விட்டார்கள்.

இதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது‌ நற்செய்தி அறிவிப்பவர்களுடைய கடமை.


நற்செய்தி அறிவிப்பவர்கள் எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

 "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். "

என்று ஆண்டவர் கூறுகிறார்.

நற்செய்திப் பயணங்களின் போது நற்செய்தியாளர்கள் கைத்தடி எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஆண்டவர் கூறுகிறார்.

கைத்தடி என்றால் ஊன்றுகோல்.

அந்தக் காலத்து மக்கள் கைத்தடி இல்லாமல் நெடும் பயணம்  செய்ய மாட்டார்கள்.

நமது காலத்தில் வாகனம் இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை.

ஆனாலும் பயணிக்கும் வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்.

ஏழைகள் பேறு பெற்றவர்கள் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நற்செய்தியாளர்கள் விலை கூடிய வாகனங்கள் அல்லாமல் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்களைப் பயன்படுத்தினால்

சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் அதிகமாகும்.

மக்கள் தங்களை விட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கூறுவதை விட தங்கள் நிலையில் உள்ளவர்கள் கூறுவதை விருப்பமாகக் கேட்பார்கள்.

நற்செய்தியைப் புரிய வைப்பதும் எளிது.

அடுத்து பணம், உணவு ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இயேசு கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டில் 12 கோத்திரங்களுக்கு இஸ்ரேல் நாட்டைப் பங்கு போடும்போது 
லேவி கோத்திரத்துக்கு பங்கு கொடுக்கப் படவில்லை.

ஏனெனில் கோவில் பணி செய்த குருக்கள் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்.

அதற்குப் பதிலாக மக்கள் அவர்களுக்கு தசம பாகத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

அதேபோல், நற்செய்தியைப் பணியாற்றும் நமது குருக்களுக்கு உலக சொத்து எதுவும் கிடையாது.

ஆகவே நற்செய்திப் பணிக்கு எங்கே சென்றாலும் பணமோ, உணவோ கொண்டு செல்ல முடியாது.

நமது ஞான மேய்ப்பவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.

நாம் கொடுக்கும் பூசைப் பணம் அதற்காகத்தான்.

நமது ஆண்டவர் நற்செய்திப் பணியின் போது சொந்தமாகப் பணம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.

பயணத்தின் போது யாராவது கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார்.

தனது சீடர்களையும் அப்படியே பழக்கிவிட்டார்.

உணவுக்கும், பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நற்செய்திப் பணிக்கு ஏற்றவர்கள் அல்ல.

அதற்கு உதாரணம் யூதாஸ்.

ஓர் அங்கி போதும் என்று ஆண்டவர் கூறுகிறார்.

நற்செய்திப் பணி புரிபவர்கள் உடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

ஒரு உடைக்கு மேல்  மாற்ற உடை இல்லாத ஏழைகள் பலர் வாழும் நாடு நம் நாடு.

பணியாளர்கள் உயர்ந்த ரக உடை அணிந்து ஏழைகள் மத்தியில் பணியாற்றினால் மக்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் குறையும்.

பணியின் ஆற்றலும் குறையும்.

நமது ஆண்டவர் நற்செய்தியை வாழ்ந்து காட்டினார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

அவரது நற்செய்தியை அறிவிப்பவர்களும் அப்படியே செய்ய வேண்டும்.

ஆண்டவர் காட்டும் வழிகாட்டுதலின்படி நடந்து நற்செய்தியை அறிவிப்போம்.

வாழ்ந்து நற்செய்தியை அறிவிப்பது அனைவருக்கும் பொதுவானது.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment