Sunday, September 1, 2024

" பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."(லூக்கா.6:31)

"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
(லூக்கா.6:31)

இருதயமும், துரையும் முதல் வகுப்பு முதல் 12வது வகுப்பு வகுப்புத் தோழர்கள்.

படிப்பில் ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடியவர்கள்.

இறையன்புக்கும், பிறரன்புக்கும்  எடுத்துக் காட்டாய் விளங்கியவர்கள்.

வெவ்வேறு கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று விட்டார்கள்.

கல்லூரிப் படிப்பு காலத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

இருவருமே வேலைக்கு விண்ணப்பித்தார்கள்.

ஒருவர் விண்ணப்பித்தது அடுத்தவருக்குத் தெரியாது.

நேர்காணலுக்குச் சென்றபோது சந்தித்தார்கள்.

நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

இவர்களோடு நிறையப் பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

இருந்ததோ ஒரு இடம்.

எத்தனை பேர் வந்திருந்தாலும் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப் படுவார்.

போட்டியிடுவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நிர்வாகம் எழுத்துத் தேர்வு வைத்தது.

தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கு ஐவர் மட்டும் தேர்வு செய்யப் பட்டார்கள்.

ஐவரில் இவர்கள் இருவரும் இருந்தனர்.

தனித்தனியே நேர்காணல் நடந்தது.

ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்க ஐந்து பேர்.

தனித்தனியே மதிப்பெண் போடுவார்கள்.

ஐந்து மதிப்பெண்களின் சராசரிதான் அவரவருக்குக் கிடைக்கும் மதிப்பெண்.

ஐவரில் இருவரும் Top most with equal marks!

இருப்பது ஒரு இடம்.

போட்டி இரண்டு நண்பர்களுக்கு.

நிர்வாகம் எதையும் மறைக்கவில்லை.

இருவரையும் உட்காரவைத்து நிர்வாகி சொன்னார்,

"இருப்பது ஒரு இடம்.

இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளீர்கள்.

இருவரில் யார் அதிக திறமைசாலி என்பதைத் தீர்மானிக்க இருவருக்கும் எழுத்துத் தேர்வு வைக்கப்படும்.

அதில் முதல் மதிப்பெண் எடுப்பவருக்கு வேலை."

இருவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

இருவருக்கும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

தனித்தனியே அமர்ந்து விடை எழுதினார்கள்.

எழுதி விடைத்தாளைச் சமர்ப்பித்தார்கள்."

"இருவரும் போய்வரலாம். தேர்வு செய்யப் படுபவருக்கு ஓரிரு நாட்களில் நியமன உத்தரவு வரும்."

இருவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி விட்டு புன்னகையுடன் அவரவர் இல்லத்துக்குச் சென்றார்கள்.

நிர்வாகத்துக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன அதிர்ச்சி?

இருவரும் ஒரே பதிலை எழுதியிருந்தார்கள்.

இருதயம் எழுதியிருந்தார்,

"துரைக்கு நியமன உத்தரவைக் கொடுங்கள். நான் விலகிக் கொள்கிறேன்."

துரை எழுதியிருந்தார்,

"இருதயத்துக்கு நியமன உத்தரவைக் கொடுங்கள். நான் விலகிக் கொள்கிறேன்."

நிர்வாகிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

உதவியாளர்களோடு கலந்து ஆலோசித்தார்.

"இருவரும் திறமைசாலிகள். சுயநலம் இல்லாமல் உழைக்கக் கூடியவர்கள். 
இரண்டு இடங்களை உருவாக்கி இருவரையும் நியமிப்போம்.
உறுதியாக நமது கம்பெனி அவர்களால் வளரும்."

இருதயத்தையும், துரையையும் இந்த முடிவையும் இந்த முடிவை எடுக்கச் செய்தது எது?

இருவரும் அன்று காலையில் எழுந்தவுடன் வாசித்த நற்செய்தி.

"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."

அடுத்தவர் நமக்கு விட்டுத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாதாரண மனிதனின் இயல்பு.

தாங்களே விட்டுக் கொடுப்பது இறைச் செய்தியை வாழ்பவர்களின் இயல்பு.

அவர்கள் நற்செய்தியை வாழ்ந்தார்கள்.

நேர் காணல் முடிந்து இரண்டு நாட்கள் கடந்தன.

இருவருக்கும் நியமன உத்தரவுகள் பறந்தன.

இருவருமே வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து நினைவூட்டல் கடிதங்கள் பறந்தன, இருவருக்கும் வேலை என்ற குறிப்புடன்.

மகிழ்ச்சியுடன் இருவரும் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இருவர் முகத்திலும் புன்னகை, மாசில்லாத புன்னகை.

ஆண்டவரின் தோட்டத்தில் இணைந்தே உழைத்தனர்.

உழைக்குமிடம் எதுவாக இருந்தாலும் ஆண்டவருக்காக உழைத்தால் அது ஆண்டவரின் தோட்டம்தான்.

"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."

இது ஆண்டவர் நம் அனைவருக்கும் அளிக்கும் நற்செய்தி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment