அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
(லூக்கா நற்செய்தி 9:45)
இயேசு "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்"
என்று தனது பாடுகளைப் பற்றிய நற்செய்தியை முன் அறிவித்தபோது
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.
அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது.
ஏனெனில் தங்களுக்குள் பெரியவர் யார் என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(லூக்கா நற்செய்தி 9:46)
இயேசு தான் உலகுக்கு வந்ததன் நோக்கத்தைப் பற்றி, அதாவது, பாடுகளைப் பற்றி சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர்கள் அதைக் கவனிக்காமல்
தங்களில் யார் பெரியவர் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசு பன்னிரு சீடர்களைத் தேர்வு செய்ததன் நோக்கமே உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகத்தான்.
படிப்பதற்காக பள்ளிக்கு வந்து வகுப்பில் ஆசிரியரின் போதனையைக் கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்து மாணவர்கள் போல
சீடர்களும் நடந்து கொண்டார்கள்.
எல்லாம் வல்ல கடவுள் மிகத் தாழ்ந்த, பலகீனங்கள் நிறைந்த மனித உரு எடுத்ததன் மூலம் நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்மைத் தூக்கி விடுவதற்காகத் தன்னையே தாழ்த்தினார்.
அவர் முன்பு அமர்ந்து கொண்டே சீடர்கள் தங்களுள் யார் பெரியவன் என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
ஆகவேதான் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு
"நுழைந்ததா?" என்று கேட்டாராம்.
ஒரு மாணவன் எழுந்து,
"எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை" என்றானாம், அவன் பாடத்தைக் கவனிக்கவில்லை, மோட்டில் ஒரு அணிலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
நம்மை உற்று நோக்குவோம்.
வாயினால் செபம் சொல்லும் போது மனதை எங்காவது அலைய விடடிருக்கிறோமா?
விடிய விடிய தேர்வுக்குப் படித்து விட்டு, காலையில் திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து விட்டு
தேர்வு எழுதப் போவது நல்ல பழக்கம்தான்.
ஆனால் திருப்பலி நேரத்தில் முக்கியமான கேள்வி பதில் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
திருப்பலி நேரத்தில் ஆண்டவர் தவிர எதுவும் மனதில் இருக்கக் கூடாது.
குருத்துவம் எப்படி ஒரு தேவத்திரவிய அனுமானமோ
அதேபோல் திருமணமும் ஒரு தேவத்திரவிய அனுமானம்தான்
இரண்டுக்கும் மையம் கடவுள் தான்.
குருக்கள் முழுக்க முழுக்க இயேசுவாக செயல்படுகிறார்கள்.
திருமணத் தம்பதியர் தந்தை இறைவனின் படைப்புப் பணியில் உதவுகிறார்கள்.
இருவர் பணியிலும் தூய ஆவியின் செயல்பாடு முழுமையாக இருக்கிறது.
திருப்பலியும் செபம்தான்.
திருமண உறவும் செபம்தான்.
செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்திருப்பது தான்.
இயேசு தனது பலியைப் பற்றிப் பேசும்போது சீடர்கள் அவர் முன்பு அமர்ந்து கொண்டே தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
நாம் என்ன செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.
வெளிப் பார்வைக்கு கடவுளுடைய பிள்ளைகள் போல வாழ்ந்து கொண்டு
மனதில் உலகின் பிள்ளைகளாக வாழக்கூடாது.
நாம் கடவுளின் படைப்பு.
ஒவ்வொரு வினாடியும் உள்ளும் புறமும் கடவுளோடு ஒன்றித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment