இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
(மாற்கு நற்செய்தி 8:27)
கேள்வி கேட்பவர் இயேசு.
ஒரு கேள்விக்கான பதிலை ஆராயுமுன் கேள்வி கேட்பவரை முதலில் ஆராய வேண்டும்.
கேள்வி கேட்பவர் தான் பதிலின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
ஆசிரியர் பதிலை மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்பார்.
மாணவன் தெரியாத பதிலைத் தெரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்பான்.
இயேசு சர்வ வல்லமையும், சர்வ ஞானமும் உள்ள கடவுள்.
உலகம் உண்டான நாள் முதல் உலகம் முடியும் நாள் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் அத்தனை கோடி மக்களும்
நினைத்த, நினைக்கின்ற, நினைக்கப் போகின்ற அத்தனை நினைவுகளும் கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்.
தன்னைப் பற்றி யார் யார் என்ன நினைத்தார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும்.
பின் ஏன் இயேசு சீடர்களிடம்,
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்?
கடவுள் நம்மோடு உரையாடுவது தனக்குத் தெரியாததை நம்மிடமிருந்து தெரிந்து கொள்வதற்காக அல்ல.
நாம் அவரோடு உரையாட வேண்டும் என்பதற்காகத்தான்.
அவரைப் பொருத்தமட்டில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாது, ஏனெனில் அவர் மாறாதவர்.
ஆனால் நாம் கடவுளோடு உரையாடுவது நம்மில் ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்தும்.
நம்மை கடவுளுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்.
கடவுள் மீது நமக்கு இருக்கும் அன்பை அதிகரிக்கும்.
நம் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை நாம் உணரச் செய்யும்.
சுருக்கமாக, இறைவனோடு நமக்குள்ள உறவு வளரும்.
நமது ஆன்மா பரிசுத்தமாகும்.
அதற்காகத்தான் கடவுள் நம்மோடு உரையாடுகிறார்.
மூன்று ஆண்டுகள் தன்னுடைய சீடர்களோடு அதைத்தான் செய்தார்.
நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பார்த்து,
"நான் யார்?"
என்று கேட்டு, பதிலைத் தியானிப்பது நமக்கு ஆன்மீக வளர்ச்சியை அதிகரிக்கும்.
"என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?"
என்ற கேள்விக்கு விடை காண முயன்றால், நம்மை நாமே திருத்திக் கொள்ள உதவும்.
ஏதாவது ஒரு காரியமாக நாம் யாரையாவது பார்க்கச் சென்றால் அவர் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி,
"யார் நீங்கள்?"
நமது பதில் பலவித கோணங்களிலிருந்து இருக்கலாம்.
நான் இன்னாருடைய மகன் என்று கூறலாம்.
நாம் செய்யும் தொழிலைச் சொல்லலாம்.
"நான் ஒரு ஆசிரியர்."
"நாம் ஒரு விவசாயி."
"நான் ஒரு கூலி வேலை செய்கிறவன்."
நாம் என்ன காரியமாக அவரைப் பார்க்க செல்கிறோமோ அதை ஒட்டியதாக நமது பதில் இருக்கும்.
நாமே நம்மை பார்த்து, "நான் யார்?" கேட்பது நம்மைப் பற்றிய ஆன்மீகப் பரிசோதனையாக இருக்கும்.
"நான் யார்?"
"எங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல கடவுளின் மகன்."
"மகன்? அவரிடம் பிறந்த மகன்?"
"இல்லை. படைக்கப்பட்ட மகன்."
"மகன் தந்தையைப் போல் இருக்க வேண்டுமே?
கடவுள் ஆவி ஆயிற்றே. உன்னைப் பார்த்தால் சடப் பொருள் போல் அல்லவா தெரிகிறது."
"என்னுடைய உடல் சடப் பொருள். ஆன்மாதான் நான்.
ஆன்மா கடவுளைப் போலவே ஆவி. கடவுளின் சாயலை உடையது. கடவுள் அவரது பண்புகளை என்னோடு பகிர்ந்து கொணாடுள்ளார்.
அவர் தன்னை நேசிப்பது போல நான் என்னை நேசிக்கிறேன்.
அவர் அவரால் படைக்கப்பட்ட என்னுடைய மற்ற சகோதரர்களை நேசிப்பது போல நானும் அவர்களை நேசிக்கிறேன்."
"கடவுள் தன்னுடைய பிறரன்பை செயலில் காட்டுகிறார்.
நீ உன்னுடைய பிறரன்பை எந்த அளவுக்கு செயலில் காட்டுகிறாய்? சிந்தித்து உண்மையைச் சொல்."
"சிந்தித்துப் பார்க்கிறேன். இறைமகன் செயல்படுகிற அளவுக்கு நான் செயல்படவில்லை என்பது உண்மை தான்.
அவர் அளவில்லாத வல்லமை உள்ளவர். நான் மிகவும் குறைந்த அளவுள்ளவன்.
யானை ஓடுகிற வேகத்தில் எலிக்குட்டியால் ஓட முடியுமா?"
"எல்லாம் வல்ல கடவுளும், மனிதனுமாகிய இயேசுவின் அளவுக்கு எந்த மனிதனாலும் செயல்பட முடியாது என்று அவருக்குத் தெரியும்.
விண்ணகத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருங்கள் அவர் கூறியிருப்பதும் உண்மைதான்.
அவர் உன்னோடு எவ்வளவு வலிமையை பகிர்ந்துள்ளாரோ அதை முழுவதும் பயன்படுத்தி முயற்சி செய்கிறாயா என்பது தான் கேள்வி."
"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்."
(லூக்கா நற்செய்தி 12:48)
என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.
ஆகவே நம்மோடு எவ்வளவு பகிர்ந்து கொண்டாரோ அதை எதிர்பார்ப்பார் என்பது புரிகிறது."
"அது மட்டுமல்ல, கொடுத்தது முழுவதும் பயன்படுத்தப் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
இதை உணர்ந்து எவ்வளவு அதிகமாக பிறரன்பு செயல்கள் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்ய வேண்டும்.
நான் கடவுளின் மகன் என்று பெருமை பாராட்டிக் கொண்டால் மட்டும் போதாது,
அதை நமது வாழ்க்கையால் நிரூபிக்க வேண்டும்."
ஒவ்வொரு நாளும் ஒரு முறை சுயப் பரிசோதனை செய்து நாம் எந்த அளவுக்கு கடவுளுக்குப் பிரியமானவர்களாக வாழ்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பது இறையன்பில் வளர நமக்கு உதவும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment