Wednesday, September 25, 2024

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். (லூக்கா நற்செய்தி 9:54)

***
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 
(லூக்கா நற்செய்தி 9:54)

யாக்கோபுக்கும், அருளப்பருக்கும் இடியின் மக்கள் என்று ஒரு பட்டப் பெயர் உண்டு.

உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக செயல்படக் கூடியவர்கள்.

மகிழ்ச்சியான காரியங்களை உணர்ச்சி வசப்பட்டு செய்தால் செயல் அமோக வெற்றி பெறும்.

ஆனால் கோபம் வரும்போது உணர்ச்சி வசப்பட்டால் செயல் அழிவில் முடியும்.

அவர்களுடைய குணத்தை அறிந்தும் இயேசு அவர்களை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக.

இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது.

சமாரியர்கள் இஸ்ரயேலர்சளும், அசிரியர்களும் கலந்த கலப்பின மக்கள்.

ஆனால் யூதர்கள் கலப்படமற்ற இஸ்ரயேலர்கள்.

யூதர்களுக்கும் அவர்களுக்கும் சுமூகமான உறவு இருந்ததில்லை.

ஆனால் இயேசு அனைவரோடும் நல்ல உறவில் இருந்தார்.

சமாரியா வழியாக எருசலேமுக்குப் போக நினைத்தார்.

ஆனால் சமாரியர்கள் அவரை உள்ளே விடவில்லை.

இடியின் மக்களுக்குக் கோபம் வந்தது.

"ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 

உணர்ச்சி வசப்படுகின்றவர்களுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் பேசத் தோன்றும்.

ஆனால் இயேசு தன்னை வெறுப்பவர்களை நேசிப்பவர்.

அவர் தனது சீடர்களைக் கடிந்து கொண்டார்.

தங்களுக்கு வழி மறுப்பவர்கள் மீது கோபப் படக்கூடாது, அவர்களுக்காக செபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

வேறு வழியாக எருசலேமுக்குச் சென்றார்.

 மனுக் குலத்தின் ஆரம்பத்தில் கடவுள் இடியின் மக்களைப் போல இருந்திருந்தால் 

ஆதாம் ஏவாளோடு மனுக்குலத்தின்‌ வரலாறு முடிவுக்கு வந்திருக்கும். 

முதற்புள்ளியே முற்றுப்புள்ளி ஆகியிருக்கும்.

உயிருள்ள கடவுள் உணர்ச்சி உள்ளவர், ஆனால் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல.

நித்திய காலமாக நிதானித்து சிந்தித்து செயல்புரிபவர்.

நமக்கு எதிராகத் தவறு செய்பவர் மீது நாம் உணர்ச்சி வசப்படும் போது கோபம் உண்டாகிறது.

ஆதாம் ஏவாள்  கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த போது அவர் நிதானமாக பாவத்தின் விளைவுகளைச் சுட்டிக் காண்பித்தார்.

மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதாகவும் வாக்குக் கொடுத்தார்.

இந்த வாக்கு உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல, நித்திய காலமாக நிதானமாக எடுக்கப்பட்டது. 

அவசரப்பட்டு உடனடியாக மனிதனாகப் பிறக்கவில்லை.

ஈராயிரம் ஆண்டுகள் மனுக் குலத்தை அதற்காகத் தயாரித்தார்.

அத்தயாரிப்பின் வரலாறு தான் பழைய ஏற்பாடு.

மனிதனாக பிறந்த பிற்பாடு கூட 30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ்ந்தார்.

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார். 

அவர் பாடுகள் பட்டு மரித்தது ஒரு நாள்தான். புனித வெள்ளி.

அதற்காக நிதானமாகக் காத்திருந்தது 33 ஆண்டுகள்.

இன்று உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அட்டூழியங்களைப் பார்த்து நாம் உணர்ச்சி வசப்படுகிறோம்.

ஆனால் கடவுள் அவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதன் மனம் திரும்புவதற்குக் கால அவகாசம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 இடியின் மக்களைப் போல் கடவுள் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் 

வானத்திலிருந்து தீயை அனுப்பி உலகை என்றோ அழித்திருப்பார்.

உணர்ச்சிவசப்படாமல் இயங்கும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

நமது குடும்ப வாழ்வில் நாம் உணர்ச்சி வசப்பட்டால் குடும்பம் அமைதியை இழந்து போர்க்களமாக மாறிவிடும். 

சமூகம் உணர்ச்சிவசப்படுவதால் தான் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்.

 அரசியல் வாதிகள் உணர்ச்சி வசப்படுவதால்தான் நாட்டில் குழப்பங்கள், உலகில் போர்கள்.

உலகம் இன்னும் அழிவுறாமைக்குக் காரணம்  கடவுளின் இரக்க சுபாவமும் மன்னிக்கும் குணமும்தான்.

கடவுள் மனிதர்கள் மீது அளவு கடந்த இரக்கம் உள்ளவர்.

அவர்கள் அழிவுறுவதை அவர் விரும்பவில்லை.

அவர்கள் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். 

அதற்கான அவகாசத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

ஆகவேதான் உணர்ச்சி வசப்படாமல் செயல் புரிகிறார்.

கடவுள் நம்மோடும் அவரது பண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாமும் இரக்க சுபாவத்தோடும், மன்னிக்கும் மனப்பாங்குடனும்,
உணர்ச்சி வசப்படாமலும் செயல் புரிந்து உலகில் அன்பையும், சமாதானத்தையும் நிலை நாட்டுவோம். 

வானத்திலிருந்து இறைவனின் இரக்க மழை பொழியும்.

நாம் ஆன்மீகத்தில் செழித்து வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment