Monday, September 16, 2024

" பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்". (லூக்கா நற்செய்தி 8:2)

"பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்"
(லூக்கா நற்செய்தி 8:2)

கலிலேயாக் கடலின் மேற்குக் கரையில் அமைந்திருந்தது மகதலா (Magdala) என்னும் மீன்பிடி கிராமம்.

இங்கு பிறந்து வளர்ந்தவள் மகதலா மரியாள்.

இவளுடைய பெற்றோர் மீன் பிடிப்பவர்கள், பொருளாதார ரீதியாக வசதி உள்ளவர்கள்.

ஒரு முறை அவளுக்குப் பேய் பிடித்திருந்தது.

இயேசு அந்தப் பகுதியில் நற்செய்தி அறிவிக்க வந்தபோது 

அவர் புதுமைகள் செய்து நோய்களைக் குணமாக்க வல்லவர் என்பதைக் கேள்விப் பட்டு 

குணம் பெறுவதற்காக
 அவரைத் தேடி வந்தாள்.

அவளை ஏழு பேய்கள் பிடித்திருந்ததை அறிந்த இயேசு அவளை முற்றிலும் குணமாக்கினார்.

அந்த வினாடியிலிருந்து அவள் இயேசுவின் பக்தையாக மாறி, அவருக்கு சேவை செய்வதற்காக அவரைப் பின்பற்றினாள்.

யோவன்னா, சூசன்னா போன்ற பக்தியுள்ள பெண்களோடு மரிய‌ மதலேனாளும் உண்மையான பக்தியுடன் இயேசுவைப் பின்பற்றினாள்.

அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

மரியாளின் மன மாற்றமும், அர்ப்பண வாழ்வும் இயேசுவின் நற்செய்திப் போதனைக்கும், தேவையில் உள்ளவர்கள் மீது அவர் காட்டிய இரக்கத்துக்கும் சாட்சி சொல்கின்றன.

"நமது ஞான மேய்ப்பவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்."     
இது திருச்சபையின் கட்டளை.

மரியாள் மீன் பிடிக்கும்ன் தொழிலில் அவளது பெற்றோர் சம்பாதித்ததைக் கொண்டு திருச்சபையை நிருவிய‌ நமது ஆண்டவருக்கே பணிவிடை செய்தாள்.

இயேசுவின் பாடுகளின் போது அருளப்பரைத் தவிர வேறு எந்த சீடரும் அவர் பின்னால் வரவில்லை.

ஆனால் மரிய மதலேனாள் 

கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த மற்ற பெண்களோடும், 

யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் குலோப்பா மரியாவோடும் (அன்னை மரியாளின் இளைய சகோதரி)

 செபதேயுவின் மக்களுடைய தாய் சலோமி மரியாளோடும்

சிலுவைப் பாதையில் அழுதுகொண்டே இயேசுவைப் பின்பற்றியதோடு

அவர்களோடு சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்தாள்.

நான்கு மரியாள்கள்.
(Four Maries)

1.அன்னை மரியாள்.
2.குலோப்பா மரியாள்.
3. சலோமி மரியாள்.
4. மகதலா மரியாள்.

இயேசுவை அடக்கம் செய்த போதும் அவர்கள் உடன் இருந்தார்கள்.

இயேசு கல்லறையில் இருந்த போதும் அவர்கள் அவரையே நினைத்துத் தியானித்துக் கொண்டிருந்தார்கள்.

மரிய மதலேனாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே  கல்லறைக்கு வந்து விட்டாள்.

அவளோடு அன்னை மரியாளின் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாளும் வந்தாள்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

அன்னை மரியாள் கல்லறைக்கு வரவில்லை. ஏனெனில் இயேசு உயிர்ப்பார் என்பதை உறுதியாக நம்பினாள்.

இயேசு உயிர்த்தவுடன் முதல் முதலில் தனது அன்னைக்குதான் காட்சி கொடுத்தார்.

அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு.

நற்செய்தியிலும், அதை அறிவிப்பதிலும் ஆர்வம் கொண்ட மகதலா மரியாளை அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர் என்று அழைக்கிறோம்.

ஏனெனில் இயேசு உயிர்த்த நற்செய்தியை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்தவளே அவள்தான்.


"(வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார்.

 அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். 

மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். 

அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்."
(மாற்கு நற்செய்தி 16:9,10)

அவர்கள் அவள் கூறியதை நம்பவில்லை.

பெந்தகோஸ்து அன்று தூய ஆவியின் வருகைக்குப் பின்னர் சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் இருந்தாள்.

அன்னை மரியாளோடு மகதலா மரியாளும் சென்று எபேசு நகரில் நற்செய்தி அறிவித்தாள்.

அவளது நற்செய்தி அறிவிப்புப் பணியில் அன்னை மரியாள்  மிகவும் உதவிகரமாக இருந்தாள்.

இயேசு அவளை ஒருமுறைக் குணமாக்கியதற்கு நன்றிக் கடனாக மரிய மதலேனாள் தன் வாழ்நாள் முழுவதையும் முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்தாள்.

நாம் எத்தனையோ தடவைகள் எத்தனையோ உதவிகளை இறைவனிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

நாமும் நமது வாழ்வை முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment