Saturday, September 28, 2024

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்"". (லூக்கா நற்செய்தி 10:16)

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார். " 
(லூக்கா நற்செய்தி 10:16)

 "உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்."

இது நமது ஆண்டவராகிய இயேசு தன் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை.

இக்கட்டளை அன்று அவரது பன்னிரு சீடர்களாலும், தொடர்ந்து அவர்களுடைய வாரிசுகளாகிய பாப்பரசர், ஆயர்கள், குருக்களாலும் நிறைவேற்றப் பட்டுக் கொண்டு வருகிறது.

தொடர்ந்து உலகம் முடியும் வரை நிறைவேற்றப்படும்.

 நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல.

அறிவிக்கப்பட்டவர்கள் நற்செய்தியின் படி வாழ்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் அவர்களுடைய பணிதான்.

அறிவிக்கப்பட்டவர்களின் ஆன்மீக வாழ்வில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதும் அவர்களுடைய  பணிதான்.

அதற்காகத்தான் அவர்களுக்கு மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும், 

ஆன்மீக வாழ்வுக்கான ஆலோசனைகள் கூறவும்,

 திருப்பலி நிறைவேற்றவும்,

 ஆண்டவருடைய திருவுடலை மற்றவர்களுக்கு உணவாகக் கொடுக்கவும்,

மரண வேளையில் அருகில் இருந்து அவர்களை வழியனுப்பி வைக்கவும் 

இயேசு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

சுருக்கமாகச் சொல்வதானால் 

ஒவ்வொரு குருவும் ஒரு இயேசு.


குருவானவருக்குச் செவி சாய்ப்பவர் இயேசுவுக்கே செவிசாய்க்கிறார்;

 குருவானவரை ஏற்றுக் கொள்பவர் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார். 

குருவானவரின் சொற்படி நடப்பவர் விண்ணக தந்தையின் சொற்படியே நடக்கிறார்.

குருவானவருக்கு எதைக் கொடுத்தாலும் இயேசுவுக்கே கொடுக்கிறோம். 

குருவானவரைப் புறக்கணித்தால் இயேசுவையே புறக்கணிக்கிறோம்.

உலகப் பாதையில் நடப்பதற்கும் விண்ணகப் பாதையில் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உலகப் பாதை நமது புறக் கண்களுக்குத் தெரியும்.

விண்ணகம் பாதை விண்ணகத் தந்தை வழி காட்டினால்தான் தெரியும்.

விண்ணகப் பாதையில் நமக்கு வழிகாட்டவே விண்ணக தந்தை தனது ஒரே மகனை உலகுக்கு அனுப்பினார். 

அவர் தனது வேலையை தன்னுடைய குருக்கள் மூலம் செய்கிறார். 

நமது பங்குத் தந்தை தான் நமக்கு வழிகாட்டும் இயேசு. 

நமது பங்குத் தந்தை தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தின் மூலம் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்கிறோம்.

அவர் நிறைவேற்றும் திருப்பலி மூலம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறை மகனையே இறைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்.

திருவிருந்தின் போது அவர் கையிலிருந்து இறை மகனையே உணவாகப் பெறுகிறோம்.

அவர் தனது பிரசங்கத்தின் மூலம் நாம் நடக்க வேண்டிய விண்ணகப் பாதையை அறிகிறோம்.

அறிந்தால் மட்டும் போதாது அதன்படி நடக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வின் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காண குருவானவரையே அணுக வேண்டும்.

குருவிடம் மனம் திறந்து பேச வேண்டும்.

அவரது ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

பங்குக் குரு காட்டும் வழி இயேசு காட்டும் வழி.

இயேசு காட்டும் வழி நடந்து இயேசுவாக வாழ்வோம்.

அதுதான் விண்ணகத் தந்தையின் சித்தம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment