" நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?"
(1 கொரிந்தியர் 4:7)
புனித சின்னப்பர் தன்னால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட கொரிந்து நகர் கிறிஸ்தவர்களுக்கு தந்தையின் இடத்திலிருந்து அறிவுரை கூறுகிறார்.
(நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.)
(1 கொரிந்தியர் 4:15)
தாழ்ச்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
ஒவ்வொருவரும் கடவுள் முன் எந்நிலையினரோ அதுதான் அவர்கள் நிலை.
ஒன்றுமில்லாமையிலிருந்து தான் நம்மைப் படைத்தார்.
ஆகவே கடவுள் முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.
We are nothing before God.
நம்முடையவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தும் கடவுளால் நமக்குத் தரப்பட்டவை.
நமது உடலில் உள்ள அத்தனை உறுப்புக்களும் கடவுளால் தரப்பட்டவை.
நமது ஆன்மாவும் கடவுளுக்கு மட்டுமே உரிமையானது.
கடவுளை நேசிக்கவும், அவருக்குச் சேவை செய்யவும், அவரோடு நித்திய காலம் வாழவுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.
நம்மைப் பற்றி பெருமை பாராட்டுவதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை.
நாம் ஒரு அறிவாளி என யாரும்
பெருமை பாராட்ட முடியாது.
தலையில் ஒரு அடிபட்டால் மூளையில் பதிவானவை அனைத்தும் மறந்து விடும்.
ஒரு பெரிய ஓட்டப் பந்தய வீரன் என யாரும்
பெருமை பாராட்ட முடியாது.
உள்ளங்காலில் ஒரு முள் குத்திவிட்டால் ஓட்டம் உட்கார வேண்டியதுதான்.
நான் ஒரு சங்கீத வித்துவான் என யாரும்
பெருமை பாராட்டக் கூடாது.
தொண்டையில் சளிப்பிடித்து விட்டால் சங்கீதம் தெரிந்தும் பயனில்லை.
கிரேக்க நாடு முதல் இந்தியா வரை வென்ற மாவீரன் அலெக்சாண்டரால் சில கொசுக்களோடு போரிட முடியவில்லை.
மலேரியாக் காய்ச்சலால்தான் இறந்தான்.
ஆக நம்முடையது என பெருமை பாராட்ட நம்மிடம் எதுவுமில்லை.
புனித சின்னப்பர் தன்னைப் பற்றிக் கூறும் போது,
" கடவுளின் திருத்தூதனாகிய என்னை அவர் எல்லாருக்கும் கடையனாக்கினார்;
மரண தண்டனை பெற்றவன்போல் ஆனேன்.
மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானேன்.
நான் கிறிஸ்துவின் பொருட்டு மடையனும், வலுவற்றவனும், மதிப்பற்றவனும் ஆனேன்.
இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறேன்.
அடிக்கப்படுகிறேன், நாடோடியாய் இருக்கிறேன்.
என் கைகளால் பாடுபட்டு உழைக்கிறேன்.
பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறேன்,
துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறேன்.
அவமதிக்கப்படும்போது கனிவாகப் பேசுகிறேன்.
உலகத்தின் குப்பை போலானேன்.
இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருள் எனக் கருதப்பட்டு வருகிறேன்.
ஆகையால் நீங்கள் என்னைப் போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்."
என்று கூறுகிறார்.
(1கொரி.9-16)
கடவுளால் விசேசமான விதமாக அழைக்கப்பட்ட புனித சின்னப்பரே தன்னைப் பற்றி இவ்வளவுத் தாழ்வாகக் கூறுகிறார் என்றால் சாதாரண மக்களாகிய நாம் நம்மைப் பற்றி எப்படிக் கருத வேண்டும்?
நம்மிடம் பெருமை பாராட்ட எதுவும் இல்லை என்றாலும் சிறுமை பாராட்ட நிறைய இருக்கிறது.
தினமும் குளிப்பாட்டி,
பவுடர் போட்டு,
சென்ட் அடித்து,
அழகு படுத்தி,
அழுக்குப் படாமல்
பாதுகாத்து வரும்
நமது உடல்
ஒருநாள் மண்புழுக்களுக்கு இரையாகும்
என்ற உண்மை நமக்குத் தெரியும்.
ஒருவன் ஒரு மண்புழுவைப் பிடித்து, தூண்டிலில் மாட்டி மீன் பிடிக்கப் போனானாம்.
அப்போது மண்புழு அவனைப் பார்த்து,
"நீ என்னை மீனுக்கு உணவாக்கப் போகிறாய்.
மீன் உனக்கு உணவாகும்.
இறுதியில் நீ எனக்கு உணவாவாய்.
இப்போது நன்றாகச் சாப்பிடு.
அப்போதுதான் எனக்கு நிறைய உணவு கிடைக்கும்."
என்று சொன்னதாம்.
நாம் ஒவ்வொரு முறை சாப்பிடப் போகும் போதும்
கடவுளை நினைக்கும் போது மண்புழுவையும் நினைத்துக் கொள்வோம்.
அப்போதுதான் அளவோடு சாப்பிடுவோம்.
போசனப் பிரியத்தை அகற்றி,
மட்டசனத்தைப் பின்பற்றுவோம்.
நமது உண்மையான நிலையை உணர்ந்து தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment