Saturday, September 7, 2024

" இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்."(லூக்கா.6:9)


"இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்."
(லூக்கா.6:9)

அன்று ஞாயிற்றுக்கிழமை.

அருள்ராஜ் குடும்பத்தினர் 
எட்டு மணி திருப்பலிக்கு காலை காலை ஏழு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள்.

காரில் ஏறப்போகும்போது மூத்த மகன் சூசையின் தொலைபேசி அலறியது.

உடனே எடுத்து காதில் வைத்தான்.

அவன் ஹலோ மட்டும் சொன்னான்.

யாரோ பேசினார்கள், இவன் கேட்டான்.

அவன் தொலைபேசியைக் காதை விட்டு எடுத்தவுடன்,

அப்பா, " யார்டா  Phone ல?"

சூசை, " அப்பா, நீங்கள் எல்லோரும் பூசைக்குப் போங்க.

எனக்கு ஒரு அவசர வேலை.

நான் Bikeல போய்ட்டு வருகிறேன்."

"யார்டா Phone ல? என்ன விசயம்?"

''வந்து சொல்கிறேன்."

Bikeஅ Start பண்ணப் போனான்.

"டேய், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. பூசைக்குப் போய்விட்டு வந்து எங்கே வேண்டுமென்றாலும் போ."

சூசையின் காதில் அப்பாவின் வார்த்தைகள் விழுந்ததாகத் தெரியவில்லை.

Bike gateஐத் தாண்டி விட்டது.

மற்ற பிள்ளைகள் காரில் ஏறினார்கள்.

அருள்ராஜ் முகத்தில் கோபமும், வருத்தமும் கலந்து பொங்க Carஐ start பண்ணினார்.

''ஏங்க, பூசைக்கு வராமல் சூசை எங்கே போகிறான்." மனைவி.

"அண்ணனுக்கு என்ன அவசர வேலையோ!" இளையமகன்.

"ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வராமல் அப்படி என்ன வேலை?

கடன் பூசை. கலந்து கொள்ளா விட்டால் சாவான பாவம்." அப்பா

"இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு பாவமா, புண்ணியமா, எதைப் பற்றியும் கவலை இல்லை." அம்மா.

"பாவத்தோட எதுவும் ஆகிவிடக்கூடாது." இளைய மகன்.

"வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருல." அம்மா.

பூசைக்குப் போனார்கள்.

''சூசை எங்கே போயிருப்பான்?"

இந்தக் கேள்வி மூவர் மனதிலும் வந்து போய்க் கொண்டேயிருந்தது.

பூசை முடிந்தவுடன் அப்பா மகனுக்கு phone போட்டார்.

அவன் phone ஐ எடுக்கவில்லை.

வீட்டுக்கு வந்தவுடன் திரும்பவும் போட்டார்.

பயனில்லை.

"சூசை அவசரமாக எங்கே போயிருப்பான்? அவனோடு யார் பேசியிருப்பார்கள்?"

என்ற கேள்விகள்தான் மூவர் காதுகளிலும் ஒலித்துக் ஒலித்துக் கொண்டிருந்தன.

மதிய உணவுக்கு வந்து விடுவான் என்று எதிர் பார்த்தார்கள். வரவில்லை.

யாரும் மதிய உணவு சாப்பிடவில்லை.

பிற்பகல் மூன்று மணியளவில் அப்பாவின் phone அடித்தது.

எடுத்துப் பார்த்தார்.

சூசை நம்பர்.

"ஹலோ சூசை, அப்பா‌ பேசறேன்."

எதிரில் சூசையின் குரல் 
ஒலிக்கவில்லை.

யாருடைய குரலோ ஒலித்தது.

"ஹலோ, தென்காசிக்கு அருகே ஒரு bike accident ஆகி,  ஓட்டியவர் மிக serious ஆக இருந்தார்.

உடனே அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கே இறந்துவிட்டார்.

நான் பேசுவது அவருடைய பையிலிருந்து எடுக்கப்பட்ட phone.

உங்கள் நம்பர் missed callல் இருந்தது.

அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

உங்களுக்குத் தகவல் கொடுக்கிறோம்."

அப்பா ஓவென்று அழ ஆரம்பித்தார்.

அம்மா phone ஐப் பிடுங்கிப் பேசினாள்.

அழ ஆரம்பித்தாள்.

மூவரும் அழுதுகொண்டே மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.

*****.     *****.         *****.   *****

விண்ணக வாசலில் இராயப்பர் சாவியோடு நின்று கொண்டிருக்கிறார்.

சூசையின் ஆன்மா உடலை விட்டு பிரிந்த வினாடியே விண்ணகத்தில் இருந்தது.

"தம்பி, சூசை வா."

"நீங்கள் இராயப்பர்தானே, உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."

"வாருங்கள், உள்ளே வாருங்கள். கொஞ்சமென்ன நிறையவே பேசலாம்.

இனி இங்கேதானே எப்போதும் இருப்போம்.

சொல்லுங்கள்."

''உத்தரிக்கிற ஸ்தலம் எங்கே இருக்கிறது?"

''ஏன்,   அங்கே போக ஆசையாய் இருக்கிறதா?"

"இல்லை. கேட்டேன்."

"நீங்கள் இன்று காலையில் பூசைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு உயிரைக் காப்பாற்ற மிக அவசரமாக இரத்தம் தேவை என phone வந்தது, சரியா?"

"அருகில் இருந்து பார்த்தது மாதிரி சொல்கிறீர்கள்.''

''எல்லா புனிதர்களும் கடவுளோடு எப்போதும் உங்கள் அருகில் தான் இருப்போம், உங்களுக்கு உதவுவதற்காக."

"நான் உடனே மருத்துவமனைக்குச் சென்றேன்.   டாக்டர் என்னைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,

''உங்கள் உடலில் எடுக்கக்கூடிய அளவுக்குப் போதுமான இரத்தம் இல்லை. எடுத்தால் உங்கள் உடல் நலனைப் பாதிக்கும்," ‌என்றார்.

"எனது உடல் நலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நோயாளியைக் காப்பாற்ற என் உயிரையும் கொடுக்கத் தயார்" என்றேன்.

அவரும் வேறு வழியின்றி எனது இரத்தத்தை எடுத்து நோயாளிக்குச் செலுத்தினார். 

உத்தரிக்கிற ஆன்மாக்களின் இளைப்பாற்றிக்காக எனது இரத்தத்தை ஒப்புக் கொடுத்தேன்.

நோயாளி குணமானார்.

பிற்பகலில் பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது வழியில் நொண்டி ஒருவர் நடு ரோட்டில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். 

அவருக்குப் பின்னால் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. 

அவரால் ஓடி விலக முடியாது.

அவரை காப்பாற்றுவதற்காக எனது பைக்கை ஒரு புறம் போட்டுவிட்டு வேகமாக ஓடி அவரை சாலை ஓரத்துக்கு தள்ளி விட்டேன். 

அவர் தப்பித்து விட்டார். 

ஆனால் லாரி என் மீது ஏறியது. 

என்னை யாரோ வந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 

ஆனால் நான் அங்கிருந்து விண்ணகம் வந்துவிட்டேன்."

"நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு செயலையும் உத்தரிக்கிற ஆன்மாக்களின் இளைப்பாற்றிக்காக ஒப்பு கொடுத்ததையும்,

இறுதியில் செய்த இரண்டு தியாகங்களையும் மனதில் கொண்டு கடவுள் உங்களை உத்தரிக்கிற ஸதலத்துக்கு அனுப்பாமல் மோட்சத்திற்கு கூட்டி வந்து விட்டார்.

நாம் வாழ்நாள் முழுவதும் நமது ஒவ்வொரு சிறு செயலையும் அகில உலகத்தினர் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உத்தரிக்கிற ஆன்மாக்களின் இளைப்பாற்றிக்காகவும் ஒப்பு கொடுத்தால் 

சிறு செயல்கள் நமது  பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்."

நமது பிறரன்புச் செயல்களுக்கு ஒருபோதும் ஓய்வு கொடுக்கக்கூடாது.

எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் ஆண்டவரின் பெயரால் ஆன்மாக்களின் ஆன்மீக நலனுக்காக ஒப்புக் கொடுத்தால் 

அது இறைவன் முன் மிகப் பெரிய செயல்.

நாம் மூச்சு விடுவதைக்கூட ஆன்மாக்களின் நலனுக்காக ஒப்புக் கொடுக்கலாம்.

சூசை தனது பிறரன்புச் செயலின் போது மண்ணக வாழ்வை இழந்திருக்கலாம்.

ஆனால் நித்திய பேரின்ப வாழ்வைச் சம்பாதித்துக் கொண்டான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment