"இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?"
(லூக்கா நற்செய்தி 5:34)
பரிசேயர்கள் இயேசுவிடம் குறை கண்டுபிடிப்பதற்காகவே ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம்.
அவ்வகையில் அவர்கள் கேட்ட ஒரு கேள்வி
"யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!"
அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அவர்,
"மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?
ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று கூறினார்.
நோன்பு இருவகை,
1. நோன்பு இருப்பதற்காக நோன்பு இருப்பது.
பொது வாழ்க்கையை ஆரம்பித்ததற்கு முன்னால் இயேசுவே நாற்பது நாட்கள் நோன்பிருந்தார்.
2. வாழ்க்கையையே நோன்பாக வாழ்வது.
வாழ்க்கை இன்பங்களால் நிறைந்தது அல்ல.
இன்பங்களோடு துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.
என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் நோன்பு வாழ்க்கை.
ஒரு ஏழைப் பெண்மணியைத் தாயாக ஏற்றுக் கொண்ட வினாடியிலிருந்து சிலுவையில் உயிர் விட்டது வரை இயேசு வாழ்ந்தது நோன்பு வாழ்க்கைதான்.
தலைசாய்க்கக்கூட இடம் இல்லாமல்தான் இயேசு பொது வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
(மத்தேயு.8:20)
பசியாக இருந்திருக்கிறார்.
"காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று."
(மத்தேயு.21:18)
கிடைக்கிற இடத்தில் சாப்பிடுவார். கிடைக்காவிட்டால் பட்டினிதான்.
பட்டினி இருந்தால் பசி எடுப்பது இயல்பு.
மூன்று ஆண்டுகளும் இரவும் பகலும் சீடர்கள் அவரோடுதான் வாழ்ந்தார்கள்.
சென்றவிடமெல்லாம் அவரோடு தான் சென்றார்கள்.
அவர் சாப்பிட்டால் அவர்களுக்கும் சாப்பாடு,
அவர் பட்டினி என்றால் அவர்களும் பட்டினி.
"அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்."
(மத்தேயு நற்செய்தி 12:1)
சீடர்கள் பசியாக இருந்தார்கள்.
இயேசுவுக்கும், அவர்களுக்கும் அன்று சாப்பாடு கிடைத்திருக்காது.
சொல்லாமலே இதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இயேசுவோடு வாழ்ந்ததே நோன்பு வாழ்க்கைதான்.
தனியாக நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதனால்தான் இயேசு,
"மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?
ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று கூறினார்.
(லூக்கா நற்செய்தி 5:34,35)
இயேசுவின் சிலுவை மரணம் அவரது இவ்வுலக வாழ்வின் இறுதி நாள்.
ஆனாலும் அதற்குப் பின்னும் இயேசு சீடர்களோடு இருந்தார், இன்றும் நம்மோடு இருக்கிறார்,
தொடர்ந்து இருப்பார்.
"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
(மத்தேயு நற்செய்தி 28:20)
தொடர்ந்து உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பதற்காகவே இயேசு திவ்ய நற்கனையை ஏற்படுத்தினார்.
நம்மோடு இருப்பது மட்டுமல்ல தன்னையே நமக்கு ஆன்மீக உணவாக தருகிறார்.
அன்று இயேசுவின் சீடர்கள் எப்படி அவரோடு நோன்பு வாழ்வு வாழ்ந்தார்களோ அப்படியே நாமும் வாழ கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒரு சந்தி சுத்த போசனம் போன்ற தவ முயற்சிகள் செய்வதற்காக அன்னை திருச்சபை தவசு காலத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது.
தபசு காலத்தில் வரும் திருநீற்றுப் புதன், மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சுத்த போசனம் அனுசரிப்பதோடு,
ஒருசந்தி நோன்பு இருப்பது கட்டளை அடிப்படையிலான கடமை.
ஆண்டின் மற்ற காலங்களில் கட்டளை கொடுக்கப் படாவிட்டாலும் தவ வாழ்வு வாழ அருள் வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை நம்மை அழைக்கிறது.
கட்டளை அடிப்படையில் இல்லாமல் நாமே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது விருப்பத்தின் அடிப்படையில் ஆண்டு முழுவதுமே ஒரு சந்தி இருக்கலாம், சுத்த போசனம் அனுசரிக்கலாம்.
தவக் காலத்தில் ஒருசந்தி, சுத்த போசனக் கட்டளையை மீறுவது பாவம்.
ஆண்டு முழுவதும் நமது விருப்பத்தின் அடிப்படையில் நாம் செய்யும் தவ முயற்சிகள் நாம் புண்ணியத்தில் வேகமாக வளர உதவுகின்றன.
நாம் கட்டளையின் அடிப்படையில் தூங்குவதில்லை,
கட்டளையின் அடிப்படையில் குளிப்பதில்லை.
கட்டளையின் அடிப்படையில் சாப்பிடுவதில்லை.
கட்டளையின் அடிப்படையில் TV பார்ப்பதில்லை.
கட்டளை இல்லா விட்டாலும் நாம் தவ முயற்சிகள் செய்யலாம்.
புண்ணியத்தில் வளரலாம்.
ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டளை.
கட்டளையை மீறுவது பாவம்.
வார நாட்களில் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளை இல்லை.
ஆனால் புண்ணிய வாழ்வில் வளர்வதற்காக தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளலாம்.
பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள், நோக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சட்டத்தின் நோக்கம் புண்ணியம்.
சட்டத்தின் எழுத்தை மீறினால் பாவம்.
சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றினால் புண்ணியம்.
நாம் புண்ணிய வாழ்வு வாழவே அழைக்கப் பட்டிருக்கிறோம்.
நிலத்தைக் களை இல்லாமல் மட்டும் வைத்திருந்தால் பலன் எதுவுமில்லை.
நிலத்தில் பயிர் செய்தால் மட்டுமே வருமானம்.
நாம் வாழ்நாள் முழுவதும் விருப்பத்துடன் புண்ணிய வாழ்வு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment