"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(அரு. 3:17)
ஞானோபதேசம் வகுப்பில்.
"சார், ஒரு சந்தேகம்."
"'சொல்லு."
"நமக்கு இறுதித் தீர்ப்பு உண்டா? இல்லையா?"
"'நாம் ஒவ்வொருவரும் இறந்தவுடன் தனித் தீர்ப்பும், உலக முடிவில் இறுதித் தீர்ப்பும் உண்டு. இது திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனை."
"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." என்று இயேசு சொல்லியிருக்கிறாரே!"
"'ஆமா. சொல்லியிருக்கிறார். இயேசு நமது மீட்பர்.
அவர் மனிதனாகப் பிறந்ததே நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தானே.
தண்டிப்பது நோக்கமாக இருந்திருந்தால் அதை மனிதனாகப் பிறக்காமலேயே செய்திருக்கலாமே!
அவர் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்தது எல்லாம் நமது பாவங்களை மன்னிபதற்கு மட்டும் தான்."
"அப்போ தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு எதற்கு?"
"'நான் யார்?"
"ஆசிரியர். இந்த ஆண்டு எங்கள் ஆசிரியர்."
"'நான் ஏன் தினமும் பள்ளிக்கு வருகிறேன்?"
"எங்களுக்குப் பாடம் கற்றுத் தருவதற்காக."
"'ஏன் பாடம் கற்றுத் தருகிறேன்?"
"எங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக."
"'இறுதித் தேர்வு எதற்கு?"
"நாங்கள் கற்றதை மதிப்பீடு செய்வதற்காக."
"'ஒரே கேள்வி, ஒரே பதில்.
நான் எதற்காகப் பள்ளிக்கு வருகிறேன்"
"எங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக."
"'ஆசிரியர் தினமும் வகுப்புக்கு உங்களுக்கு அறிவு புகட்டுவதற்காக மட்டும் தான்.
தேர்வு வைப்பதற்காக அல்ல.
பாட போதனை நோக்கம்.
தேர்வு நோக்கம் அல்ல.
பாடத்தைக் கவனித்து அறிவைப் பெற வேண்டியது நீங்கள்.
இறுதித் தேர்வில் மதிப்பீடு செய்யும் போது நீங்கள் வெற்றி பெறுவதும் பெறாதிருப்பதும் உங்கள் செயல்.
நீங்கள் வெற்றி பெறுவது ஆசிரியரின் தரமான போதனையின் காரணமாகவும், நீங்கள் நன்கு கற்றதன் காரணமாகவும்.
ஆனால் தோல்விக்கு உங்கள் கவனக் குறைவுதான் காரணம்.
போதிய அறிவு பெற்றவர்களை ஆசிரியரால் Fail ஆக்க முடியாது.
புரிகிறதா?"
"புரிகிறது, சார்."
"'என்ன புரிகிறது?"
''நல்லவர்களாக வாழவே கடவுள் மனிதர்களைப் படைத்தார்.
பாவம் செய்தவன் மனிதன்.
மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கவே தந்தை இறைவன் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
மீட்பை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் மனிதன் சுதந்திரமாகச் செய்யும் செயல்.
இறுதித் தீர்ப்பில் இயேசு மனிதனை மதிப்பீடு மட்டும் செய்கிறார்.
இயேசு தந்த மீட்பை ஏற்றுக் கொண்ட மனிதன் நித்திய பேரின்ப நிலையை அடைகிறான்.
மீட்பை நிராகரித்த மனிதன் பேரிடர் நிலையை அடைகிறான்.
தீர்ப்பு என்றவுடன் உலக நீதிமன்றங்களைப் போல் என்று நினைத்து விடக்கூடாது.
யார் யார் எங்கே போகப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும்.
தான் மரணம் அடையும் போது தான் என்ன நிலையில் இருந்தோம் என்று ஆன்மாவுக்குத் தெரியும்.
பரிசுத்த நிலையில் இருந்தால் மோட்சத்துக்குச் செல்லும்.
உத்தரிக்க வேண்டிய பாவங்கள் இருந்தால் உத்தரிக்கிற ஸதலத்துக்குச் செல்லும்.
சாவானபாவ நிலையில் இருந்தால் பேரிடர் நிலையை அடையும்.
இவை எல்லாம் இறைவன் முன்னிலையில் மரித்த வினாடியே நடைபெறும்.
பொதுத் தீர்வையும் ஒரு வினாடியில் முடிந்து விடும்.
ஒரு வித்தியாசம், தனித் தீர்வையில் ஆன்மா மட்டும் செல்லும்.
பொதுத் தீர்வையில் உயிர் பெற்ற உடலோடு செல்லும்.
மனிதர்களை மீட்கவே தந்தை மகனை உலகிற்கு அனுப்பினார் என்பது புரிகிறது, சார்."
"'யாராவது குற்றாலத்திற்குப் போயிருக்கிறீர்களா?"
"போயிருக்கிறோம், சார்."
"'அலெக்ஸ், குளிக்கும் போது துணி துவைத்திருக்கிறாயா?"
''துவைத்திருக்கிறேன், சார்."
"நீ குற்றாலம் போனது குளிப்பதற்காகவா, துணி துவைப்பதற்காகவா?"
"அருவியில் குளிப்பதற்காக, சார்."
"'இயேசு எதற்காக உலகுக்கு வந்தார், ஜோ?"
"நமது பாவங்களை மன்னித்து நம்மை மீட்பதற்காக, சார்."
"'ராஜ், செயலின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள நீ சுயமாக ஒரு ஒப்புமை சொல்லு."
"அம்மா காலையில் சமையல் அறைக்குப் போவது சமைப்பதற்காக, தீக்குச்சியைப் பற்ற வைப்பதற்காக அல்ல."
"மேரி, இயேசு நோயாளிகளைக் குணமாக்கினாரா?"
"குணமாக்கினார், ஆனாலும் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் அதுவல்ல.
நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகவே உலகுக்கு வந்தார்.''
"'நாம் சுகமளிக்கும் செபக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாமா?"
''கலந்து கொள்ளலாம். ஆனால் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
கடவுள் சித்தம் இருந்தால் சுகம் பெறுவோம்."
'''நாம் உலகில் வாழ்வதன் நோக்கம் என்ன?"
"விண்ணக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதே நமது மண்ணக வாழ்வின் நோக்கம்.
நாம் உலகில் செய்யும் ஒவ்வொரு செயலும் அதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.''
"'கடவுள் நமது வாழ்வில் துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார்?"
"இயேசு தான் பட்ட பாடுகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தது போல நாமும் நமது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்க வேண்டும்.''
"'நமது நோய் குணமாகும் படி இறைவனிடம் வேண்டாமா?"
"வேண்டலாம். ஆனாலும் நோய் குணமானாலும் குணமாகாவிட்டாலும் அதை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்."
அன்பு மன்னிக்கும், தண்டிக்காது.
வாழ்வின் இறுதி நோக்கம் ஒன்று தான், மீட்பு.
அதைத் தரவே இயேசு உலகுக்கு வந்தார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment