Saturday, September 14, 2024

"அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்.". (லூக்கா நற்செய்தி 7:13)

"அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 7:13)

இந்த இறை வசனத்தைத் தியானிக்கும் போது என் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்கிறேன்.

இயேசு 
முழுமையாக மனிதன்.
ஆனாலும் அவரது மனித சுபாவம் இறைமகன் என்ற தேவ ஆளுக்கு உரியது.

ஆகவ அவர் 
 முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

கடவுள் சர்வ வல்லவர், சர்வ ஞானி.

சர்வத்தையும் படைத்தவர்.

அவரால் அன்றி எதுவும் படைக்கப் படவில்லை.

பாவம் தவிர, அவரது திட்டத்தை மீறி எதுவும் நடக்காது.

நமது பிறப்பைத் தீர்மானிக்கும் அவர்தான் மரணத்தையும் தீர்மானிக்கிறார்.

அவர் திட்டப்படி தான் பிறக்கிறோம்,

அவர் திட்டப்படி தான் மரிக்கிறோம்.

இன்றைய வாசகத்தில் வரும் விதவையையும், அவளது மகனையும் படைத்தவர் அவர்தான்.

மகனின் மரணமும் அவரது திட்டப்படி தான்.

அந்த பையனின் மரணத்தைத் திட்டம் போடும்போதே 
தான் அவனுக்கு உயிர் கொடுக்கப் போவதும் அவருக்குத் தெரியும்.

அந்த மரணத்தைத் திட்டம் போடாமலே இருந்திருக்கலாமே.

ஏன் மரணிக்கச் செய்து உயிர் கொடுத்தார்?

கேள்வி எழும் போதே 
பதிலும் கூடவே எழுகிறது.

பிறவிக் குருடனுக்குப் பார்வை கொடுத்த புதுமையிலும், இறந்த லாசருக்கு உயிர் கொடுத்த புதுமையிலும் இதற்கான பதில் இருக்கிறது.

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். 


அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். (அரு.9:2,3)



இலாசர் நோயுற்றிருப்பதாக இயேசு கேள்விப்பட்டார்.

உடனே பார்க்கப் போகாமல் தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 

அந்த காலகட்டத்தில் அவன் இறந்து விட்டான்.

அதற்காகத்தான் இரண்டு நாட்கள் தங்கினார்.

அவன் இறந்து விட்டான் என்ற செய்தி வந்த பின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். 

பின் , "இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 

"நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்;

 ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார். 

சீடர்கள் மனதில் தன்மீது நம்பிக்கை ஏற்படும் பொருட்டு லாசரைச் சாக விட்டு விட்டு, பிறகு ஒரு புதுமை செய்து அவனை உயிர்ப்பித்தார்.

இப்போது இயேசு இறப்பின் மீதும், உயிர்ப்பின் மீதும் அதிகாரம் உள்ள கடவுள் என்று சீடர்களுக்குப் புரியும்.

அவர் மீது உள்ள நம்பிக்கை உறுதியடையும்.

லாசரின் வீட்டுக்கு வந்தபின் 
இயேசு மார்த்தாவிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 

 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 

 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார். 

ஆக, சீடர்களும், லாசரின் வீட்டாரும் தன்னை மெசியா என்றும், இறைமகன் என்றும் ஏற்றுக் கொள்வதற்காகவே லாசரைச் சாக விட்டு உயிர்ப்பித்தார்.

விதவைத் தாயின் மகனை இறக்க விட்டதும்,

ஒருவரைக் குருடராகப் படைத்ததும்,

லாசரைச் சாக விட்டதும் 

கடவுளை மாட்சிமைப் படுத்தவும் அவர்மீது மக்களுக்கு விசுவாசம் ஏற்படுவதற்காகவும் தான்.

கடவுள் நம்மைப் படைத்தது அவரை அறியவும், அவரை நேசிக்கவும், அவருக்குச் சேவை செய்யவும் தான்.

நமக்காக அவர் போடும் திட்டங்கள் எல்லாம் அதையே மையமாகக் கொண்டிருக்கும்.

நமக்கு நோய் நொடி வரும் போது அது நம்மைப் படைத்தவரின் திட்டம் என்று நம்பினால் நோய்க்காக வருத்தப் பட மாட்டோம். 

படைத்தவர் நமது நன்மைக்காகவே செய்வார் என்று மகிழ்வோம்.

மருத்துவரிடம் நோயாளியை ஒப்படைத்தால் அவர் செய்வதெல்லாம் நோயாளி குணம் அடைவதையே மையமாகக் கொண்டிருக்கும்.

ஊசி போடுவது நோயாளிக்கு வலிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவனைக் குணமாக்க.

ஆனால் வலிக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பரேசன் செய்வது அவனை அறுத்து,  ஒரு பக்கமும் போக விடாமல் படுக்கையில் போடுவதற்காக அல்ல, அவனைக் குணமாக்க.

குணமடைய வேண்டுமென்றால் அறுபட்டுத்தான் ஆக வேண்டும்.

அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை தன் மகனை வளர்ப்பதற்காக என்ன செய்தாலும் மகன் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

மாணவன் நன்கு படிப்பதற்காக ஆசிரியர் என்ன செய்தாலும் மாணவன் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கடவுள் நமக்காகப் போடும் திட்டங்கள் எல்லாம் நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்துவதற்காகத்தான். .

என்ன செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யோபு ஒரு நல்ல உதாரணம்.

நாம் ஏற்றுக் கொள்வதில் இறைவன் மாட்சிமை‌ அடைய வேண்டும்.

நமது ஆன்மா பரிசுத்தம் அடைவதற்காக நமக்கு விருப்பம் இல்லாதது எது நடந்தாலும் அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உலகியல் வாதிகள் எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வயநாட்டு இயற்கை நிகழ்வை ஒரு அழிவு என்று உலகியல் வாதிகள் சொல்வார்கள்.

அது இறைவனின் சித்தம் என்று ஆன்மீக வாதிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

தங்கள் இறையன்பு பிறரன்புப்‌ பணிகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாம் செய்யும் பாவம் தான் இறைத் திட்டத்துக்கு எதிரானது.

பாவம் தவிர எது நடந்தாலும் அதை இறைத் திட்டமாக ஏற்றுக் கொண்டு, இறைவனை மகிமைப் படுத்துவோம்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் நம்மோடு தான்.

நாம் ஏன் பயப்பட வேண்டும்?

நாம் இறைவனை ஏற்றுக் கொண்டால் அவர் தருவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிலை வாழ்வுக்கு அவர் நம்மை ஏற்றுக் கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment